[X] Close

கவிதைக்கு 20 ரூபாய் - ஏழைகளின் பசியாற்றும் இன்ஸ்டாகிராம் இளைஞர்!

தமிழ்நாடு

Trichy-youth-kavin-kumar-feeds-the-poor

''கவிதை இளைஞனை என்ன செய்யும்? கற்பனை உலகில் மிதக்க வைக்கும். இல்லை, என் கவிதைகள் இல்லாதவர்களுக்கும் உணவளிக்கும்'' என்கிறார் கவின்குமார். மழலை கவிஞன் என்ற பெயர் கொண்ட பக்கத்தை இன்ஸ்டாகிராமில் 35 ஆயிரம் நபர்கள் பின்தொடர்கிறார்கள். காரணம் கவியின் சிறப்பு ஒருபுறமிருக்க பின்னால் இருக்கும் கதைகளும் அதைவிட சுவாரசியமானது.

திருச்சி கரூர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கவின்குமார். 28 வயதான இளைஞர், சென்னை தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கோவிட் தொற்று காலகட்டத்தில் வீட்டிலிருந்து பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனக்கு கவிதை மீது ஆர்வம் அதிகம் உள்ள நிலையில் கவிதைகளை எழுதத் துவங்கினார்.

மழலை கவிஞனிடம் நேரடியாக பேசியபோது, ''பள்ளி கல்லூரிகளில் படித்தபோது கவிதை எழுதுவது, போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். சங்கத்தமிழ் கவிதைகளை விட மரபுக் கவிதைகளை எனக்கு மிகவும் பிடித்தது. அதிலும் சமகால கவிஞர்களான வைரமுத்து, வாலி, நா.முத்துக்குமார் இவர்களின் கவி வரிகளை பின்தொடரும் வகையிலேயே என் கவிதையும் எழுதத் தொடங்கினேன்.


Advertisement

image

நண்பர்களுக்கு பின்னணி இசையைப்போல் பின்னணி கவியாக உதவி கொண்டிருந்தேன். இது இலவசமாய் செய்வதை விடுத்து யாருக்கேனும் உதவும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்று கவிதை எழுதி தரவேண்டும் என்றால் 20 ரூபாய் தாருங்கள் என்றேன். முதலில் சிரித்தார்கள். ஆனால் அந்த பணத்தை சேமித்து வைத்து முதல்முறை சென்னையில் ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு 25 கிலோ அரிசி வாங்கி கொடுத்தபோது தான் இதன் பின்னால் இருக்கும் நெகிழ்ச்சி மிக்க ஒன்றை உணர முடிந்தது.

கண்ணுக்கு தெரிந்து உதவும் நண்பர்கள் ஒருபுறம்.. மறுபுறமோ சமூகவலைத்தளங்களில் 35 ஆயிரம் பேர் என்னை பின் தொடர்வது மட்டுமின்றி யார் என்று தெரியாத என்னோடு இணைந்து இல்லாதவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அவர்கள் தந்த ஊக்கமும் ஆதரவும் இந்த தொண்டினை தொடரச் செய்தது. சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது மாதத்தில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை திருச்சி வரும்போது மாம்பழச்சாலை, ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் இருப்பவர்களுக்கு தேடிச்சென்று உணவளிக்க தொடங்கினேன்.


Advertisement

இப்பொழுது மாதத்தில் நான்கு வாரங்களிலும் இதுபோன்று இல்லாதவர்களுக்கு ஒரு வேளை உணவாவது அளிக்க வேண்டும் என்று உதவி செய்து கொண்டிருக்கிறோம். பெற்றோர்கள் நண்பர்கள் என்னை பின்தொடரும் யாரென்று அறியாத 35 ஆயிரம் சக நண்பர்களும் இணைந்து இதுவரை 70 ஆயிரம் ரூபாய் சேகரித்து 2,185 உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளோம்.

மே 12, 2019-இல் தொடங்கிய பக்கத்திற்கு குறுகிய காலகட்டத்திற்குள் இத்தனை பேர் ஆதரவு அளித்ததற்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணமும் இதுவே. தமிழ்நாட்டில் தமிழும் தமிழனும் பசிக்கொடுமையை ஒழித்தாக இருக்கட்டும் என்று முதல் முதலில் என்னுடைய பக்கத்தில் பதிவிட்டு அதை மட்டுமே என் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு என்னால் முடிந்தவரை இச்சேவையை செய்து கொண்டே இருப்பேன் என்கிறார் கவின்குமார்.

சமூக வலைதளங்களை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் இளைஞர்களுக்கு மத்தியில் பொதுச் சேவைக்காக பயன்படுத்தும் கவின்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 


Advertisement

Advertisement
[X] Close