
சத்தீஸ்கர் மாநிலம் சுராஜ்பூர் மாவட்டம் மதன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாகர் சாய். 50 வயதான இவர், தன்னுடைய விருப்பம் நிறைவேறினால், ஆட்டைப் பலியிடுவதாகக் கோயில் ஒன்றில் வேண்டியுள்ளார். இதனிடையே, விருப்பம் நிறைவேறியதை அடுத்து, பாகர் சாய் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கோயிலுக்கு சென்றுள்ளார். மேலும் அவர் சொன்னபடி ஆட்டுக்கிடாவையும் பலி கொடுத்துள்ளார்.
பின்னர், பலிகொடுக்கப்பட்ட ஆட்டை கிராமத்தினர் சமைத்துள்ளனர். சமைக்கப்பட்ட இறைச்சிக் கறியை பாகர் சாய் மற்றும் அவரது உறவினர்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அந்தச் சமைக்கப்பட்ட உணவில் ஆட்டின் கண்ணை பாகர் சாய் சாப்பிட்டுள்ளார். அதை விழுங்கிய நிலையில் அது பாகர் சாயின் தொண்டையில் சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது. இதனால், அவரால் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பாகர் சாயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
வேண்டுதல் நிறைவேறியதற்காக ஆட்டைப் பலிகொடுத்து, அந்த ஆட்டின் கண்ணைச் சாப்பிட்ட நபர் ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.