
கேரளாவில் பெருமழை மற்றும் வெள்ளத்தால் 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
கேரள மாநிலத்தில் கிட்டத்தட்ட 10 நாட்களாக பெய்த கனமழையால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் கேரள மாநிலமே ஸ்தம்பித்து போயுள்ளது. 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு கூறியுள்ளது. இந்த சூழலில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான நிதியை அதிகரிக்கும் முயற்சியாக மதுபானங்கள் மீதான வரியை பூஜ்யம் புள்ளி 5 சதவிகிதத்தில் இருந்து 3.5 சதவிகிதமாக கேரள அரசு உயர்த்தியுள்ளது. 100 நாட்களுக்கு இந்த வரி அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 230 கோடி ரூபாய் கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.
இந்நிலையில் கேரள மழை நிலவரம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைத் தொடர்புகொண்டு, கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், மாநில வெள்ள நிலவரம் குறித்து ஆலோசித்ததாகவும், மீட்புப் பணிகளுக்காக பாதுகாப்புப் படையினரின் உதவி தேவை குறித்து கேட்டறிந்ததாக பிரதமர் மோடி தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை கேரளாவுக்கு செல்ல இருப்பதாகவும் எதிர்பாராத வெள்ள நிலவரம் குறித்து பார்வையிட இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.