எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
எதிர்க்கட்சிகள் வெளிநடப்புPTI

S.I.R.| நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் எப்போது? மத்திய அரசு முக்கிய முடிவு..

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விரிவான விவாதம் தேவை என்பதை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் இன்றும் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தன.
Published on
Summary

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எஸ்.ஐ.ஆர் விவகாரம் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நீடித்தது. தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து உடனடி விவாதம் கோரிய எதிர்க்கட்சிகள், அரசின் தாமதமான பதிலால் அதிருப்தியடைந்து மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தனர். இறுதியில், அடுத்த வாரம் 10 மணி நேர விவாதம் நடத்த அரசு ஒப்புக்கொண்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதலாவது நாளான நேற்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், எஸ்.ஐ.ஆர் குறித்தான விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, நேற்று மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.

மாநிலங்களவை
மாநிலங்களவைpti

கூட்டத்தொடரின் 2 ஆவது நாளான இன்று, காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், 'மாநிலங்களவையில் உடனடியாக தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 வருடங்கள் நிறைந்துள்ள நிலையில், முதலில் 'வந்தே மாதரம்' மீதான விவாதத்தை நடத்தலாம் என்றார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
Opinion | ‘நியாயமற்ற’ காலத்தில் ‘நியாயம்’ கிட்டுமா? | ஆளுநர்களின் அதிகாரம் குறித்து...

தொடர்ந்து, திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள், "தேர்தல் சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான விவாதம் நடத்த எப்போது நேரம் ஒதுக்கப்படும்?" என கேள்வி எழுப்பினர். இதற்கு, காலக்கெடு எதுவும் விதிக்க வேண்டாம் எனவும் பின்னர் நேரம் ஒதுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்தது எதிர்க்கட்சிகளிடம் அதிருப்தியை உண்டாக்கியது.

அதேவேளையில், அலுவல் பட்டியலில் உள்ள பிற அலுவல்களை அனுமதிக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். மணிப்பூர் மாநிலத்துக்கான ஜிஎஸ்டி திருத்தங்கள் தொடர்பான மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க் கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம்
எதிர்க் கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம்pti

இதைத் தொடர்ந்து, மக்களவையிலும் எஸ்.ஐ.ஆர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மக்களவை முதலில் 12 மணி வரையும், பின்னர் இரண்டு மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் தொடர்ந்ததால் அவையை ஒத்திவைக்க வேண்டிய சூழல் உருவானது. முன்னதாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகள் தொடங்கும் முன்னர், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
நாடாளுமன்ற கூட்டத் தொடர்: ”எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ.!

காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தேர்தல் ஆணையத்தின் கெடுபடியால் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள பலர் உயிரிழந்துள்ளனர் என அவர்கள் குற்றம் சாட்டினர். அரசு தரப்பு தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதம் நடத்த முன்வரும் வரையில், எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்file image

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரம், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவாதத்தை நடத்த அரசு முன்வந்துள்ளது. அதன்படி, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதம் நடைபெறும் எனவும் இதற்கு 10 மணி நேரம் ஒதுக்கப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எஸ்.ஐ.ஆர் தொடர்பான விவாதத்துக்கு தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முடியாத சூழலில் எப்படி விவாதம் நடத்த முடியும் என அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து, எஸ்.ஐ.ஆர் தொடர்பான விவாதம் என்பதை மாற்றி தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் என அடுத்த வாரம் நடைபெற உள்ள விவாதத்துக்கு புதிய பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
நாளை தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்.. 10 மசோதாக்கள் தாக்கல்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com