அயோத்தி கோவிலுக்கு சட்டமா ? மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை

அயோத்தி கோவிலுக்கு சட்டமா ? மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை
அயோத்தி கோவிலுக்கு சட்டமா ? மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில்,
மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வந்து ராமர் கோயில் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்
 என ராஷ்ட்ரிய  ஸ்வயம் சேவக் சங் தலைவர் மோகன் பாகவத் சொல்லியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தி
உள்ளது. உடனடியாக அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என அவர் அரசை வற்புறுத்துகிறாரா அல்லது
தேர்தல் வர இருக்கும் இந்த சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மீண்டும் ஒரு முறை அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை பெரிதுபடுத்த இருக்கிறார்களா  என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த மாதம் இறுதியில் இருந்து உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான மனுக்களை விசாரிக்க
உள்ளது. இந்த சூழ்நிலையில்தான்  மோகன் பாகவத் உடனடியாக ராமர் கோயில் கட்டும் வேலைகளைத் தொடங்குவதற்கு
அரசு ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். அடுத்த மாதம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்,
ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம்  உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடக்க உள்ளது.
அத்துடன் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரும் துவங்க உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் அயோத்தி பிரச்சினை மீண்டும் பெரிது படுத்தப் பட்டால் அதன் காரணமாக பாஜகவுக்கு தேர்தல் சமயத்தில் ஆதரவு அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தல்கள் மட்டுமல்லாது, அடுத்த வருடம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகவே அத்தகைய சூழ்நிலையில் அயோத்தி பிரச்சினை மீண்டும் பிரதான படுத்தப் பட்டால் அதன் காரணமாக ஹிந்துக்களின் வாக்குகள் வாக்குகள் சிதறாமல் பாஜகவுக்கு கிடைக்குமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் கேட்கப்படுகிறது. இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பேசும்போது, மோகன் பாகவத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வேலை தாமதப்படுகிறது என்று வலியுறுத்தியுள்ளார். ராமர் கோவில் கட்டுவதன் மூலமாக ஹிந்துக்களின் சுயமரியாதை பாதுகாக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். 

கோவில் கட்டுவதன்  காரணமாக மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை வலுப்படும் என்பது மோகன் பாகவத்தின் கருத்தாக
உள்ளது.  நாக்பூரில் தான் ஆர்எஸ்எஸ்சின் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு நடந்து கொண்டிருக்கும் நவராத்ரி-தசரா
விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பாகவத்தின் கருத்து எந்த
அளவுக்கு அரசால் ஏற்றுக் கொள்ளப்படும்? அதே சமயத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது ஏதேனும்
புதிய சட்டத்தை கொண்டுவர அரசு குளிர்காலக் கூட்டத்தொடரில் முயற்சி செய்யுமா  என்பது பற்றியும் பரபரப்பாக டெல்லியில்
பேசப்படுகிறது காங்கிரஸ் கட்சி இதுபோன்ற பிரச்சினைகள் காரணமாக ஹிந்துக்களின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி தற்போது தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பல்வேறு முக்கிய கோவில்களுக்கு சென்று பூஜைகள் நடத்தி உள்ளார். சமீபத்தில் அவர் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை சென்று வந்ததும் அனைவருக்கும் நினைவில் உள்ள ஒரு விஷயமாக உள்ளது. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நடந்த
போதும் பல்வேறு கோவில்களில் பூஜைகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மற்றும் வியூகங்கள்  தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. பல்வேறு கட்சிகள்  அயோத்தி விவகாரத்தில்  என்ன மாதிரியான நிலைப்பாட்டை வலியுறுத்தும்? நீதிமன்றங்களின் கருத்துக்கள் என்னவாக இருக்கும்? இதைத் தவிர, மிகவும் முக்கியமாக மத்திய அரசு மற்றும் பாஜக எந்த வகையிலே காய்களை நகர்த்தும் என்பது மிகவும் சுவாரஸ்யத்துடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com