கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார் இருவரும், கர்நாடகாவில் அமைச்சர்களாக பதவியேற்க தகுதியான எம்எல்ஏக்களின் பட்டியலுடன் டெல்லி சென்றுள்ளனர். அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதில் கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், காங்கிரஸ் தலைமை இறுதி பட்டியலை முடிவு செய்யும் என கூறப்படுகிறது.
கடந்த மே 20 ஆம் தேதி நடைபெற்ற முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழாவில் 8 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுக்கொண்ட நிலையில் மீதமுள்ள அமைச்சரவை பட்டியல் இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘முதலமைச்சரால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும், தலைமை அவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது’ என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரான சிவக்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக முதல்வர்கள் பதவியேற்பின் போது காங்கிரஸ் முழுமையான அமைச்சரவை பட்டியலை அறிவிக்காததை விமர்சித்திருந்தார் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை. இதற்கு பதிலளித்த சித்தராமையா, விரைவில் புதிய அமைச்சர்களை நியமிப்போம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று டெல்லி சென்றுள்ளனர் இருவரும்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார் இது வழக்கமான பயணம்தான் என்றும், மாநிலம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க மூத்த கட்சித் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறினார். அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கட்சிக்குள் பிளவு இருப்பதாக வரும் வதந்திகளை நிராகரித்த சிவக்குமார், “சித்தராமையா வீட்டுக்கு வெளியே காங்கிரஸ் எம்எல்ஏ டி.சுதாகரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியது இயல்பான ஒன்று” என தெரிவித்தார்.