
காருக்குள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பத்திரிகையாளர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் காரின் பின் சீட்டில் ஒரு நபர் இறந்து கிடப்பதாக பார்ரா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காரில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரித்ததில், இறந்தவரின் பெயர் ஆஷு யாதவ் என்பதும், பத்திரிகையாளரான இவர் ஜனவரி 1-ம் தேதி அன்று காணாமல் போனதாக மற்றொரு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும் ஆஷு யாதவ் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் எனவும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கான்பூர் தெற்கு எஸ்.எஸ்.பி தீபக் காபூர் தெரிவித்துள்ளார்.