அதானி குழும விவகாரம்.. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறந்த விவாதம்!

அதானி குழும விவகாரம்.. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறந்த விவாதம்!
அதானி குழும விவகாரம்.. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறந்த விவாதம்!

அதானி குழும விவாதத்தால் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்றும் மீண்டும் பரபரப்படைந்தது.

எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சி தொடர்பான விவாதம் இன்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. நரேந்திர மோடி அரசு அதானி குழுமத்திற்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக கௌதம் அதானி உலகின் மிகப்பெரிய செல்வந்தராக குறுகிய காலத்தில் வளர்ந்தார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில், அவைத்தலைவர்கள் தலையிட்டு அமளியை தடுக்க வேண்டிய சூழல் உருவானது.

மல்லிகார்ஜூன கார்கே எதிர்ப்பு

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவையில் பேசியபோது, பலமுறை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தலையிட்டு விளக்கங்கள் அளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவையில் அமர்ந்து விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்தார். பாஜக தேசியத் தலைவரான ஜெய் பிரகாஷ் நட்டா மாநிலங்களவையில் மோடி அருகே அமர்ந்திருந்தார். ”அதானி குழும சர்ச்சையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும்” என கார்கே வலியுறுத்தினார். ”ஒரு குழுமத்தின் செல்வம் வேகமாக உயர்ந்துள்ளது மட்டுமே நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த காரணம் ஆகாது” என பியூஸ் கோயல் பதிலடி கொடுத்தார்.

எதிர்க்கட்சிகள் கடும் அமளி

”பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருங்கிய தொடர்பு காரணமாக கௌதம் அதானி லாபகரமாக வியாபாரம் நடத்தி, பெரும் செல்வத்தைக் குவித்தார்” என கார்கே குற்றம்சாட்டினார். ”குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும்” என மாநிலங்களவை தலைவரான குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் வலியுறுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது நிர்மலா சீதாராமன் குறிக்கிட்டு, ”புள்ளிவிவரங்களுக்கு ஆதாரங்கள் அளிப்பதாக நீங்கள் தெரிவிக்கிறீர்கள்; ஆனால் சூசகமாக பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டுவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என முழங்கினார்.

அதானி குறித்து ராகுல் பேச்சு

இப்படி தொடர்ந்து சர்ச்சை மற்றும் அமளி என இரண்டு அவைகளிலும் தொடர்ந்தது. நேற்று ராகுல் காந்தி உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் பேசினார் என்றும் அதற்கு ஆதாரம் அளிக்காவிட்டால் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தி வருகிறது. அத்துடன் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் நாடாளுமன்றக் குழு விசாரணை தேவை என வலியுறுத்தினர். ”நாடாளுமன்றக் குழு விசாரணையில் இருந்து ஏன் பாஜக பயந்து ஓடுகிறது” என வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.

ராகுல் பேச்சுக்கு ஆதாரம் தேவை

மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ”நேற்று ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தற்போதைய சட்ட அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆகியோர் காங்கிரஸ் கட்சியினர் ஆதாரம் இன்றி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதாகத் தெரிவித்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் அதீர் ரஞ்சன் சௌத்ரி, ”நேற்று ராகுல் காந்தி மக்களவையில் குறிப்பிட்ட விவரங்களால் பாஜக கலங்கி உள்ளது” எனப் பேசினார்.

அதானி பக்கம் திரும்பிய விவாதம்

குடியரசுத் தலைவர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்கு பிறகு தொடர்ந்து முடங்கி இருந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை, நேற்று முதல் அதானி குழும விவாதத்தால் பரபரப்படைந்துள்ளன. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து அந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய நிலையில், பெரும்பாலான கவனம் அதானி குழுமம் பக்கமே திரும்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com