
புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்துள்ள நல்லாவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (32), ஐ.ஆர்.பி.என் பிரிவில் காவலராக பணியாற்றி வரும் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஜெகதீஸ்வரி என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், ஜெகதீஸ்வரியின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் குமரவேல் தினமும் ஜெகதீஸ்வரியின் வீட்டிற்குச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு குடிபோதையில் வந்த குமரவேல், ஜெகதீஸ்வரியின் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார், இதை சிறுமியின் தாயார் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, வெளிநாட்டில் உள்ள தனது தந்தையிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வெளிநாட்டில் இருந்து புதுச்சேரி வந்த சிறுமியின் தந்தை, குழந்தைகள் நல வாரியத்தில் நடந்தவை குறித்து தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல வாரியத்தினர் தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவலர் குமாரவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் ஜெகதீஸ்வரி ஆகிய இருவர் மீதும் தவளகுப்பம் போலீசார் போக்சோ சட்டதின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் தலைமறைவாக உள்ள காவலர் குமரவேலுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.