
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள நல்லசெல்லி பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர், தனக்குச் சொந்தமான ஈச்சர் வாகனத்தில், காய்கறிகள் மற்றும் விவசாய பொருட்களை பொள்ளாச்சிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி கொடுமுடியில் இருந்து பொள்ளாச்சிக்கு விவசாய பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு 19 லட்சம் ரூபாய் பணத்துடன் ஈரோடு திரும்பியுள்ளார்.
அப்போது டீ குடிப்பதற்காக பல்லடம் அடுத்த அவிநாசிபாளையம் அருகே ஒரு பேக்கரியில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வாகனத்தில் டேஷ்போர்டில் இருந்த 19 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். இதையடுத்து டீ குடித்துவிட்டு வாகனத்திற்கு வந்த சண்முகம், டேஷ்போர்டு உடைக்கப்பட்டு பணம் திருடு போயிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசிபாளையம் காவல் துறையினர் பேக்கரியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருடர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபு வெங்கடேஷ் என்பதும் இவர், சாலையோரமாக நிறுத்தப்படும் வாகனங்களில் இருக்கும் பொருட்கள் மற்றும் பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்ட நபர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், 19 லட்சம் ரூபாய் திருடுபோன வழக்கில் அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.