சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதன்படி அப்பெண் பிறப்புறுப்பில் பாட்டிலால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கொலை தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்கம், கந்தசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (40). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில், சூர்யா என்பவர் சமீபத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டாவது மகன் தனியாக தங்கி வேலை பார்த்து வருகிறார்.
கணவனை 20 வருடங்களுக்கு முன் இழந்த இவர், கடந்த ஐந்து வருடங்களாக கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயகுமார் (45) என்பவருடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு மல்லிகாவின் இரண்டாவது மகன் தன் அம்மாவை காண சென்றுள்ளார். அப்போது அங்கு மல்லிகாவை யாரோ கொடூரமாக தீ வைத்து கொலை செய்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கண்ணகி நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மல்லிகா பிறப்புறுப்பில் பாட்டிலால் குத்தப்பட்டு, தீ வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காவல்துறையின் விசாரணையில் ஜெயக்குமார் மற்றும் மல்லிகாவுக்கு தெரிந்த மற்றொருவரான பாண்டியன் என்பவர் சம்பவத்தன்று அவரது வீட்டில் அவருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜெயக்குமார் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.