லியோ படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை என்பதாலேயே நடிகர் விஜய்க்கு தமிழக அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நாமக்கலில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:
அண்ணாமலை நடக்க வேண்டும் என எண்ணுவதால் அவர் நடக்கிறார், நான் கட்சியினரை சந்தித்து பேச வேண்டும் என்பதால் சந்தித்து வருகிறேன்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது, மக்களை நம்பி தான் இருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். வெற்றி பெறுவோம்.
கல்வி, மருத்துவம், தண்ணீர் என எல்லாத்தையும் விற்றுவிட்ட நிலையில், தற்போது குழந்தைகளை விற்று வருகிறார்கள். மூளைச் சாவு என்ற நோயை உருவாக்கி மனிதனின் உடல் உறுப்புகளை விற்கிறார்கள். அரசே மண்ணையும், மலையையும் விற்று விட்டது.
லியோ படத்திற்கு இந்த அரசாங்கம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. விஜய் அரசியல் கட்சி துவக்குகிறார் என்பதால் நெருக்கடி தருகிறார்கள். தேவை இல்லாமல் அவரை சொரிந்து விடுகிறார்கள். லியோ படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை என்றே அவருக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கிறார்கள்.
மழை காலம் வருகிறது அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்த அரசு, மதுவை மட்டும் விற்பது ஏன் வைத்திருக்கிறது?. விளைநிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதனால் பெரு நிறுவனங்களும், பெரு முதலாளிகள் மட்டுமே லாபம் பெறுபவர். விளையாத நிலங்களே என்று எதுவுமே இல்லை. கார்ப்ரேட் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு நாடாக, வேட்டை காடாக மாறி விட்டது. ஆட்சியாளர்கள் அவர்களின் தரகராக மாறிவிட்டனர். ஆர்.எஸ்.எஸ் என்ன நோக்கத்திற்காக ஊர்வலம் செல்கிறார்கள் என தெரியவில்லை, இது அவசியமற்றது” எனவும் தெரிவித்தார்.