
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’. விஜய்யின் 67-வது படமாக தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை அடுத்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படம் வருகிற அக்டோபர் 19-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்யின் 68-வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. சிம்புவின் ‘மாநாடு’ படத்தை வெற்றிப்படமாக இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்திருந்தாலும், அவரது இயக்கத்தில் அடுத்து வந்த ‘மன்மத லீலை’, மற்றும் தெலுங்கு அறிமுகப் படமான ‘கஸ்டடி’ பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. வசூல் ரீதியாகவும் வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் அட்லீ, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை அடுத்து, பாலிவுட் நடிகர் வருண் தவானை இயக்கப்போவதாக கூறப்பட்டு வருவதால், இயக்குநர் வெங்கட் பிரபுவின் பெயர் அடிபட்டு வருகிறது. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு முன்னதாக நந்தாமூரி பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது வெங்கட் பிரபுவின் பெயர், ‘தளபதி 68’ என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.