
பாகுபலி, ஐ படங்களை தொடர்ந்து மெர்சல் படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறது குலோபல் யுனைட்டட் மீடியா நிறுவனம்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ள நிலையில், படத்தின் வியாபாரமும் லாபகரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் விஜய் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவுக்கு கேரளாவில் வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் தமிழகத்தில் விஜய்க்கு உள்ள ரசிகர் பட்டாளத்திற்கு இணையாக கேரளாவிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் கேரளாவில் விஜய் படங்களை வெளியிடும் உரிமையை பெற விநியோகிஸ்தர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் மெர்சல் படத்தின் கேரள உரிமையை குலோபல் யுனைட்டட் மீடியா நிறுவனம் வாங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து குலோபல் யுனைட்டட் மீடியா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், மெர்சல் படத்தை தீபாவளிக்கு வெகு விமர்சையாக வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் தயாரான ஐ, பாகுபலி ஆகிய படங்களை தொடர்ந்து மெர்சல் படத்தை இந்நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.