
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் போட்டியிடவுள்ளார் எனப் பரவிய வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.
உலகின் பிரம்மாண்ட ஜனநாயக தேர்தல் திருவிழா எனப் போற்றப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்புகள் வெளியாகி, தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு எனக் கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் வதந்திகள், சமூக வலைத்தள போலி செய்திகள் ஆகியவற்றை தடுப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளார் என்ற தகவல் பரவியது. இதனால் பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் அஜித் குமார் பாணியில் அக்ஷய் குமார் பதிலளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியா ? என்பது தொடர்பாக பதிலளித்துள்ள அக்ஷய், “அரசியல் என்பது என் நோக்கமில்லை. நான் படத்தில் என்ன செய்கிறேனோ, அதையெல்லாம் என்னால் அரசியலில் செய்ய முடியாது என நான் நினைக்கிறேன்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் அரசியலுக்கு வருவதில்லை என ஏற்கனவே அஜித் குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.