“ஆசைகள் சிறகு ஆகலாம். அதற்காக...” - முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பொன்மொழிகள்!

Prakash J

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி. அவருடைய 5-வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், இம்மண்ணில் அவர் விதைத்துவிட்டுச் சென்ற சில பொன்மொழிகளைப் பார்ப்போம்.

மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்.

ஒளியில்தான் நமது நிழலின் வடிவம் நமக்குத் தெரிகிறது; சோதனையில்தான் நமது நெஞ்சின் வலிமை நமக்குப் புரிகிறது.

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.

குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்; கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும்.

தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஓர் உண்மையான நண்பனும் இல்லை.

ஆசைகள் சிறகு ஆகலாம்; அதற்காகக் கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்குத் திரும்ப முடியாது.

பாராட்டும் புகழும் குவியும்போது குட்டையான வாசலுக்குள், குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும்.

ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தினால், அதைக்கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும். அறிவொளி பெற்ற ஒரு பெண்ணாலும் அது முடியும்.

உண்மையை மறைக்க முனைவது, விதையை பூமிக்குள் மறைப்பது போலத்தான்..!

உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்; அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்.