Vaijayanthi S
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று முதல் (செப்டம்பர் 1ஆம் தேதி) சுங்க கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கார், ஜீப் போன்றவற்றுக்கு சுங்கக் கட்டணமாக ஒரு முறை பயணிக்க 105 ரூபாயும், பல முறை பயணிக்க 160 ரூபாயும் (முன்பு ரூ. 155 என இருந்தது) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலகு ரக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க கட்டணம் ரூ. 180ல் இருந்து 185 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லாரிகள், பேருந்துகள் ஒரு முறை பயணிக்க கட்டணம் ரூ. 360ல் இருந்து 370 ரூபாய் ஆகவும், இருமுறை பயணிக்க கட்டணம் ரூ. 540ல் இருந்து 555 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று முதல் (செப்டம்பர் 1ஆம் தேதி) டீ, காபி விலை சென்னையில் உயர்கிறது என்று டீ கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ. 10, 12-க்கு டீ விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இனி 15 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
காபி 15ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பால் விலை உயர்வு, காபி தூள் விலை உயர்வு, டீ தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்றப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டீ காபி விலை உயர்த்தப்படுகிறது
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது..
எஸ்பிஐ கிரெடிட் கார்டு, தனது சில தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளுக்கான விதிகளில் இன்று முதல் (செப்டம்பர் 1ஆம் தேதி) மாற்றங்களை அறிவித்துள்ளது. அதில் குறிப்பிட்ட சில கார்டுகளுக்கான Reward Points திட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் படி, அந்த கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இனி பரிசுப் புள்ளிகளை பெற முடியாது.
தபால் துறை இன்று முதல் (செப்டம்பர் 1,2025) உள்நாட்டு பதிவுத்தபாலை (Registered Post) ஸ்பீட் போஸ்ட் சேவையில் இணைக்க முடிவு செய்துள்ளது. எனவே, செப்டம்பர் 1 முதல் இந்திய அஞ்சல் மூலம் நாட்டுக்குள் நீங்கள் அனுப்பும் எந்த பதிவுத் தபாலும் ஸ்பீட் போஸ்ட் மூலமே அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.