Vaijayanthi S
ஏரலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பொதுமக்களை ஈர்த்து வருகிறது.
ஏரல் வண்டிமலைச்சி அம்மன் மேல தெரு இளைஞர்கள் சார்பாக ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்கு அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு ஏரலில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படும்.
அதேபோல் இங்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அனைத்தும் அந்தந்த காலகட்டங்களில் மிகவும் பிரபலமாக பேசப்படும் சம்பவங்களை வைத்து விநாயகர் சிலை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் நான்கு கைகள் வைக்கப்பட்டு இரண்டு கைகளில் துப்பாக்கியை பிடித்தபடியும், பின்னால் உள்ள இரண்டு கைகளில் தேசியகொடியை பிடித்தபடியும் கம்பீரமாக உள்ளது.
விநாயகர் சிலைக்கு ராணுவ தொப்பி அணிந்தபடி பாதுகாப்பு எல்லையில் கம்பீரமாக விநாயகர் ராணுவ உடையில் நிற்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் சிலையை அந்த வழியாக வந்து செல்பவர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.