Prakash J
இந்தியாவில் தக்காளி விலை ஜூன் தொடக்கத்தில் இருந்தே சராசரியாக 85-90 % வரை உயர்ந்துள்ளது. பல நகரங்களில் விலை 2 - 3 மடங்காக உயர்ந்துள்ளது. பல இடங்களில் ஜூன் 1 கிலோ ஒன்றுக்கு சராசரியாக ரூ.22க்கு விற்கப்பட்ட தக்காளி, ஜூன் 27 அன்று கிலோவுக்கு ரூ.80 ஆக விற்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் ஜூன் 15ஆம் தேதி ரூ.30க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, தற்போது ரூ.80க்கு விற்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் ரூ.110க்கும், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் தலா ரூ.120க்கும் விற்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று (ஜூலை 2) ரூ.90-க்கு விற்ற 1 கிலோ தக்காளி, இன்று ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ. 130 - 140 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பச் சலனம் மற்றும் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளது. அதனால் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் விளைச்சலும் குறைந்து, வெளிமாநிலங்களில் இருந்து வரத்தும் குறைந்ததால் விலை கிடுகிடுவென உயர்கிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கடந்த காலங்களில் 1,100 டன் தக்காளி வரத்து இருந்து வருகிறது. தற்போது வெறும் 420 டன் வரை மட்டுமே வரத்து காணப்படுகிறது.
தக்காளி விலை உயர்வை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திருப்பூர், கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் வெப்பத்தால் தக்காளி பயிர்கள் கருகியதும், கனமழையால் பாதிக்கப்பட்டதுமே விலை உயர்வுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் தக்காளி அதிகமாகப் பயிரிடப்படுகிறது. உலகளவில் தக்காளி உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 2022ல் 20 மில்லியன் டன்னுக்கும் மேலாக தக்காளி பயிரிடப்பட்டதாக தேசிய தோட்டக்கலை வாரியம் மதிப்பிட்டிருக்கிறது.
’ஏழைகளின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் தக்காளி அனைத்து பருவகாலங்களிலும் வளரக்கூடியது. அதனால்தான் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை விரும்பி சாகுபடி செய்கின்றனர்.