சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ஈஸியான 12 டிப்ஸ்!

ஜெ.நிவேதா

சிறுநீரக ஆரோக்கியம் ஏன் அவசியம்?

மனித உடலின் துப்புரவு தொழிற்சாலை என்றால், அது நம் சிறுநீரகங்கள்தான். ஏனெனில் உடலிலுள்ள நச்சு, அதீத உப்பு – சர்க்கரையெல்லாம் வெளியேற்றுவது, வைட்டமின் டி – ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது… போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படையே சிறுநீரகங்கள்தான்.

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, ஈஸியான 12 டிப்ஸ் தருகிறார் மருத்துவர் ஷாம் சுந்தர்.

சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு...

சர்க்கரை நோயாளிகள், தங்களின் ரத்த சர்க்கரை அளவான HbA1-ஐ 7க்கு குறைவாக இருக்கும்படியும், ரத்த அழுத்த அளவு 130 / 80 என்றோ அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவும். ஏனெனில் அதுதான் சிறுநீரக செயல்பாடுகளை சீராக வைத்துக்கொள்ளும்

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கவனத்துக்கு...

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், ரத்த அழுத்த அளவை 140 / 90 என்றோ அல்லது அதற்கும் கீழோ கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதை தவறும்பட்சத்தில், சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல் ஏற்படலாம்

அளவாக உப்பும், சர்க்கரையும்...!

உணவில் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை அளவுடன் பயன்படுத்தவும். முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லதுதான். இது அளவுக்கு மீறி உட்கொண்டால், அதை வெளியேற்றும் பொறுப்பு சிறுநீரகங்களுக்குத்தான் வரும் என்பதால் கவனம் தேவை.

இயற்கையான சர்க்கரைக்கு மட்டும் Yes..!

பழங்கள் போல இயற்கையாகவே சர்க்கரைச்சத்துள்ள உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்ளவும். மற்றபடி இனிப்பு, லஸ்ஸி போன்றவை வேண்டாம். சோடா, செயற்கை சர்க்கரை கலந்த டீ, காபி போன்றவற்றையும் முடிந்தவரை தவிர்க்கவும்.

தண்ணீர் குடிங்க!

அன்றாடம் நிறைய தண்ணீர் குடியுங்கள். இது சிறுநீரகத்திலுள்ள நச்சை எளிதாக வெளியேற்றும். உடன் நீரிழிப்பு, கற்கள் அல்லது சிறுநீரக தொற்றுக்கான வாய்ப்புகளையும் குறைக்கும். தண்ணீருடன் நீர்ச்சத்து மிக்க பழங்களை, சாறாக இல்லாமல் பழங்களாகவே சாப்பிடலாம்.

ஆரோக்கியமான கொழுப்புச்சத்து அவசியம்!

ஆரோக்கியமான கொழுப்புச்சத்து மிக்க உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவும். உதாரணத்துக்கு, ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போல…! பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அதிகம் உட்கொள்ளவும்

சிகரெட்டுக்கு நோ!

சிறுநீரக பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படும் புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள். ஒரு சிகரெட் என்றாலும், அதையும் விட்டொழிக்கணும்!

முழு வயிற்றுக்கு சாப்பிடக்கூடாது...!

எப்போதும் நீங்கள் உண்ணும் உணவின் அளவு முழு வயிற்றுக்குமானதாக இருக்க கூடாது. கால் வயிறாவது காலியாக இருக்க வேண்டும். அந்த காலி இடத்தை நிரப்ப, தண்ணீர் குடியுங்கள்.

புரதம் வேணும்தான்... ஆனா...?

புரதம் அதிகம் எடுக்க நினைப்பவர்கள், அடர்த்தியான கறி வகைகளை தேர்ந்தெடுப்பதற்கு பதில் மீன் அல்லது காய்கறி வகைகளை தேர்ந்தெடுக்கவும்

டயட் ஆலோசனை அவசியம்!

உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயப்பிரச்னை, அல்லது ஒவ்வாமை ஏதும் இருப்போர் உங்களுக்கான உணவுமுறையில் என்னவெல்லாம் இருக்கலாம், இருக்கக்கூடாது என்பதையெல்லாம் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அதை மட்டும் பின்பற்றுங்கள்

வாக்கிங் கட்டயம்!

வாரம் குறைந்தது 5 நாட்களுக்கு, தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்

சிறுநீரக மருந்துகளில் கவனம் தேவை...!

சிறுநீரகத்துக்கான மருந்துகள் (NSAID, Aminoglycosides, Heavy metal-containing drugs) ஆகியவற்றை மருத்துவர் பரிந்துரையின்றியோ, மருத்துவர்கள் சொன்ன அளவுக்கு கூடுதலாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது.