இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்துவரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் அடித்துள்ளன.
அதனைத்தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவரும் நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் சரிசமமான ஸ்கோர்களை அடித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா நல்ல டோட்டலை அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்றது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பை தனதாக்கி கொண்ட தொடக்க வீரர் கேஎல் ராகுல் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பண்ட் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து சதங்களை பதிவுசெய்து அசத்தினர்.
முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் (147), ரிஷப் பண்ட் (134) என மூன்று பேர் சதமடித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.
ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரின் அபாரமான சதத்தால் 350 ரன்களை கடந்தது இந்திய அணி. இந்திய அணி 364 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 371 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடுகிறது.