ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன உள்ளது?

ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன உள்ளது?
ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன உள்ளது?

அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வழக்கின் விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் கோரியதை அடுத்து தமிழக அரசு அதனை தாக்கல் செய்துள்ளது. அதில் ஜல்லிக்கட்டு அரங்கில் எவ்வாறு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது, ஜல்லிக்கட்டுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது, வாடி வாசலில் இருந்து காளை வரும்போது 15 மீட்டர் நீள அரங்கில் எவ்வாறு காளையை மாடு பிடி வீரர்கள் அடக்குகிறார்கள் என்பது உள்ளிட்டவை தொடர்பான விவரத்தை வரைபடமாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது

மேலும் அதில், “ஜல்லிக்கட்டு என்பது மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்த பின்னரே நடத்தப்படுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வர். மாடுபிடி வீரர்களை உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், உரிய தகுதி சான்றிதழ் சமர்பித்த பின்னரே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

காளைகளை உரிய விலங்கு மருத்துவர் பரிசோதிப்பர். குறைந்தது 18 மாதம் வயதுள்ள காளைகளே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். காளைகளுக்கு சாரயம், மது, கண்களில் மிளகாய் பொடி தூவுதல் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சட்ட விரோத செயல்கள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, தகுதி உள்ள காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

50 சதுரமீட்டர் கொண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு காளை மட்டுமே அவிழ்த்து விடப்படும். வாடிவாசலில் இருபுறம் மட்டுமே வீரர்கள் நிற்பர், காளை வரும் பாதையை மறைத்து எவரும் நிற்கமாட்டார். ஒரு சமயத்தில் 25 வீரர்கள் மட்டுமே அரங்கின் உள் காளையை அடக்க அனுமதிக்கப்படுவர். ஒன்றுக்கு மேற்பட்டோர் காளையை அடக்க முற்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர். காளை அரங்கினுள் இருந்து வெளியேறவில்லை என்றால் காளை உரிமையாளரை அழைத்து அதனை வெளியேற்றப்படும். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு விடும்.

வாடிவாசல் பகுதி, காளைகள் வெளியேறும் இடம் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் முழுமையாக மாவட்ட நிர்வாகத்தால் வீடியோ பதிவு செய்யப்படும்” என எழுத்து பூர்வ அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com