``உணவுக்கும் செயலுக்கும் தொடர்புண்டு; எல்லோரும் சைவம் மட்டும் சாப்பிடுங்கள்"- மதுரை ஆதீனம்

``உணவுக்கும் செயலுக்கும் தொடர்புண்டு; எல்லோரும் சைவம் மட்டும் சாப்பிடுங்கள்"- மதுரை ஆதீனம்
``உணவுக்கும் செயலுக்கும் தொடர்புண்டு; எல்லோரும் சைவம் மட்டும் சாப்பிடுங்கள்"- மதுரை ஆதீனம்

“உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும்” என சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் இன்று நடைபெற்ற சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி மற்றும் சட்டை அணிந்தபடி கலந்து கொண்டார். அவருக்கு விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய மதுரை ஆதீனம், “தமிழ்நாட்டில் பிறந்தது புண்ணியம். தமிழ்நாடு, ஆன்மீக பூமி. எத்தனையோ கவர்னரை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் இதுபோன்றொரு கவர்னரை பார்த்தது இல்லை. சென்னையை சிங்கார சென்னை என சொல்வார்கள். ஆனால் இப்போது கூவம் சென்னையாக மாறி விட்டது. கவர்னரை எல்லாரும் எதிர்க்கிறார்கள். ஆன்மீகம் தெரிந்த கவர்னர் நமக்கு கிடைத்த உள்ளார். இந்த காலக்கட்டத்தில் அனைவரும் பணத்தை நினைத்தே வாழ்கிறார்கள். இப்போதும் பாண்டவர்களும், கௌரவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் கௌரவர்களே பிடிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், “அனைவரும் சைவ உணவாக சாப்டுங்கள். ஒருவர் என்ன உணவு உண்கிறார்களோ அப்படி தான் அவர்களுடைய செயல்பாடு இருக்கும்” என்றார். தொடர்ந்து, “எல்லா படிப்பும் 5 ஆண்டுகளுக்கு உள்ளது. ஆனால் அர்ச்சர்கள் படிப்பு ஒரு ஆண்டு மட்டுமே இருக்கிறது. அர்ச்சகர்கள் படிப்பை 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும். தமிழக அரசு இதனை பரீசிலனை செய்ய வேண்டும். மக்கள் அனைவரும் உங்களது குழந்தைகளுக்கு தேவாரம் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆங்கிலம் தான் எங்கும் இருக்கிறது. ஆன்மீகம் எப்போதும் இருக்கும். ஆனால் அரசியல் அழிந்து விடும்” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மக்களின் பங்களிப்பு அனைத்திலும் இருக்க வேண்டும். இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அமைதியான உலகத்திற்கு இந்தியா தான் தலைமை பண்பை வழங்கும். இந்தியாவில் வேகமாக வளரும் உலக பொருளாதாரம், வெல்லும். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலும் வெகுதொலைவில் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வேகமாக முன்னேறும். இந்தியா தற்போது ஜி-20 அமைப்புக்கு தலைமையேற்றுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ள பெருமை. பகவத் கீதையை படிக்க, படிக்க நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பகவத் கீதையை மனப்பாடம் செய்ய எளிமையாக அழகாக இயற்றப்பட்டுள்ளது. பலர் ஈர்க்கப்படுகிறார்கள். எனது ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில், என்னை ஊக்குவித்து, நான் எதைப்பெற வேண்டும் என்று நானே அறிய எனக்கு உதவியது அதுதான்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com