இந்தியா

கணவனுக்கு 'ஸ்லோ பாய்ஸன்' - மனைவி காதலனுடன் போட்ட பலே திட்டம் - நடந்தது என்ன?

Sinekadhara

பெண் ஒருவர் காதலனுடன் சேர்ந்துகொண்டு கணவனுக்கு ஸ்லோ பாய்ஸன் கொடுத்து கொலைசெய்த அதிர்ச்சி சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும், கமல்காந்த் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, சாண்டாக்ரூஸிலுள்ள கணவன் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று வசித்து வந்துள்ளார் கவிதா.

அப்போது, கவிதாவும், கமல்காந்தின் சிறுவயது நண்பரான ஹிடேஷ் ஜெய்னும் ரகசியமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் தொழில்ரீதியான நட்பிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இதற்கிடையே, கமல்காந்தின் தாயார் வயிற்று பிரச்னை ஏற்பட்டு திடீரென உயிரிழந்துள்ளார். தாயார் இறந்து சில மாதங்களுக்குப் பிறகு, கமல்காந்திற்கும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கமல்காந்தின் உடல்நிலை மிகவும் மோசமாகவே, அவரை பாம்பே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், கமல்காந்தின் ரத்தத்தில் அளவுக்கதிகமாக ஆர்செனிக் மற்றும் தாலியம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இதுபோன்ற உலோகப்பொருட்கள் மனித ரத்தத்தில் இருப்பது மிகவும் அசாதாரணமானது எனவும் சந்தேகித்துள்ளனர் மருத்துவர்கள். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 19ஆம் தேதி கமல்காந்த் உயிரிழந்தார்.

இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதனை எதேச்சையான மரணம் என முதலில் நினைத்தனர். அதன்பிறகு கொலை என கருதிய போலீசார், இதன் பிண்ணனியில் சதி இருப்பதாகக் கருதி, வழக்கை மும்பை போலீசாரின் குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர். விசாரணையில் கவிதாவும், அவருடைய காதலனும் கமல்காந்தை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் சஞ்சய் கதாலே கூறுகையில், “இறந்த நபரின் மருத்துவ அறிக்கை, குடும்பத்தாரின் வாக்குமூலம் மற்றும் கமல்காந்தின் மனைவி கவிதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், கவிதாவும், அவரது காதலன் ஹிடேஷும், உணவில் ஸ்லோ பாய்ஸன் கலந்துகொடுத்து திட்டமிட்டு கொலைசெய்தது தெரியவந்தது. இதனையடுத்து கமல்காந்தின் தாயாருக்கும், அவரைப் போன்றே அறிகுறிகள் தென்பட்டதால், அவரும் உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.