தமிழ்நாடு

"எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்" - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

webteam

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவில், 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுனர்கள் தானாகவே உயர்த்தி வசூலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க கோரியும், மின்னணு மீட்டர்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் எஸ்.வி.ராமமூர்த்தி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி வழக்கு குறித்து பதிலளிப்பதாக தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள் நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.