”அதுலாம் நீங்க இப்ப கேட்க கூடாது”-ரிஷப் பண்ட் அளித்த பதிலால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

”அதுலாம் நீங்க இப்ப கேட்க கூடாது”-ரிஷப் பண்ட் அளித்த பதிலால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!
”அதுலாம் நீங்க இப்ப கேட்க கூடாது”-ரிஷப் பண்ட் அளித்த பதிலால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

இந்திய கிரிக்கெட்டின் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு கோபமாக ரிஷப் பண்ட் பதிலளித்ததை டிரோல் செய்தும், விமர்சித்தும் வருகின்றனர் நெட்டிசன்கள்.

சமீப நாட்களாகவே இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரின் நிலைப்புத்தன்மை குறித்தும், திறமையான வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் மறுக்கப்பட்டும் வருவதாக பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் அதிகமாக எழுந்தவாறே உள்ளன.

வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன்!

முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான சஞ்சு சாம்சன் தனது திறமையின் காரணமாக 2015ஆம் வருடம் இந்திய டி20 அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் அதற்கு பிறகு டி20 அணியில் மட்டுமில்லாமல் எந்தவிதமான பார்மேட்டிலும் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு கிடைக்காமல் மறுக்கப்பட்டுகொண்டே வருகிறது. 2015ல் அறிமுகமான ஒரு வீரர் ஒருநாள் அணியில் அதிக தாமதாக அறிமுகம் செய்யப்பட்டது சஞ்சு சாம்சனுக்கு மட்டும் தான். ஒருநாள் அணியில் 2021ஆம் ஆண்டே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

2022 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு பேசிய முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், சஞ்சு சாம்சன் எப்போதும் அணிக்காக தயாராக இருக்கிறார், ஆனால் அவரை இந்திய அணி நிர்வாகம் கட்டுகொள்வதே இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பேசியிருந்த சஞ்சு சாம்சன், எனது அணிக்கு எப்போது என் பங்களிப்பு வேண்டப்படுதோ அப்போது நான் நிச்சயம் எனது பங்களிப்பை வழங்குவேன், மற்றபடி மற்ற வீரர்கள் பங்குபெற்று ஆடுவது எனக்கு சந்தோஷம் தான் என்று தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் சஞ்சு சாம்சனுக்கான குரல்!

பொதுவாக தமிழக வீரர்கள், கேரள வீரர்கள் என இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்படும் போது, தெற்குபக்கம் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமே கேள்வி எழுப்பி வந்திருக்கின்றனர். ஆனால் தற்போது சஞ்சு சாம்சனுக்கான குரல் வடமாநிலத்தை சேர்ந்தவர்களிடமிருந்தும் அதிகரித்து உள்ளது. கேஸ்ட் ரீதியான பிசிசிஐ என்ற ஹேஸ்டேக் அவர்களாலயே அதிகம் பகிரப்பட்டது.

சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு இல்லை என்பதை குறித்தும், தொடர்ந்து சொதப்பி வரும் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்கும் ஏன் வாய்ப்பு என்பது குறித்தும் அதிகமான விமர்சனங்கள் வைக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன.

ஒருநாள்-டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட்

ஒயிட் பால் கிரிக்கெட் எனப்படும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பியே வருகிறார் ரிஷப் பண்ட். கிடைத்த வாய்ப்புகளில் சரியாக பயன்படுத்திகொள்ளாத ரிஷப் பண்ட் ஒரு நாள் போட்டிகளில் 30 போட்டிகளில் 865 ரன்கள் எடுத்து 34.60 சராசரியுடன் விளையாடி வருகிறார். டி20 போட்டிகளில் அதிக போட்டிகள் விளையாடி உள்ள பண்ட் சுமாரான பேட்டிங் ஸ்டிரைக் ரேட் மற்றும் சராசரியுடனே உள்ளார். 66 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 987 ரன்கள் அடித்து 126.54 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.

ஆனால் சிகப்பு பந்து ஆட்டமான டெஸ்ட் போட்டிகளில் 25 வயதேயான ரிஷப் பண்டின் சாதனை வியக்க வைக்கிறது. 31 போட்டிகளில் விளையாடி 2,123 ரன்கள் விளாசியிருக்கும் அவர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா போன்ற SENA நாடுகளில் சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

ஹர்ஷா போக்ளே உடனான இண்டர்வியூ!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3ஆவது போட்டி தொடங்குவதற்கு முன்னர், ஹர்ஷா போக்ளேவிற்கு ஒரு பெரிய இண்டர்வியூ கொடுத்திருந்தார் இந்திய வீரரான ரிஷப் பண்ட். அப்போது ஹர்ஷா போக்ளேவிற்கு அளித்த பதில் தான், தற்போது ரிஷப் பண்டின் மீதான அனைத்துவிதமான விமர்சனத்திற்க்கும் காரணமாக அமைந்துள்ளது. அளித்திருக்கும் இண்டர்வியூவில்,

ஹர்ஷா போக்ளே: இந்த கேள்வியை பல வருடங்களுக்கு முன்பே சேவாக்கிடம் கேட்டிருக்கிறேன், இப்போது அதே கேள்வியை உங்களிடமும் கேட்கிறேன். உங்களைப் பார்க்கும்போது, ஒயிட்-பால் கிரிக்கெட்தான் உங்கள் களம் என்ற உணர்வு எங்களுக்கு வருகிறது, ஆனால் அதைவிட உங்கள் டெஸ்ட் சாதனைதான் சிறந்ததாக இருக்கிறது.

ரிஷப் பண்ட்: சார் ரெக்கார்ட்ஸ் எல்லாம் வெறும் நம்பர் தான், என்னுடைய ஒயிட் பால் கிரிக்கெட் ரெக்கார்டும் அந்தளவு மோசமானதாக இல்லை.

ஹர்ஷா போக்ளே: நான் அதை மோசமானது என்று சொல்லவில்லை, உங்கள் டெஸ்ட் நம்பர்களோடு ஒப்பிடுகிறேன் அவ்வளவு தான்.

ரிஷப் பண்ட்: ஒப்பீடு செய்வது என் வாழ்க்கையின் இப்போதைய ஒரு பகுதி அல்ல. தற்போது எனக்கு 24-25 வயதுதான் ஆகிறது, நீங்கள் ஒப்பிட விரும்பினால், எனக்கு 30-32 வயதாக இருக்கும்போது நீங்கள் அதைச் செய்யுங்கள்” என்று தனது நிதானத்தை இழந்து பதிலளித்துள்ளார் ரிஷப் பண்ட்.

இந்நிலையில் பண்ட் அளித்துள்ள இந்த பதிலை சுட்டிக்காட்டி எதற்காக ரிஷப் பண்டை ஒயிட் பால் கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், திமிரான பதில் என்றும், போக்ளேவிற்காக வருந்துகிறேன் என்றும் ட்ரோல் செய்தும், விமர்சித்தும் வருகின்றனர் நெட்டிசன்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com