மழையால் தப்பித்த இந்தியா! ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!

மழையால் தப்பித்த இந்தியா! ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!
மழையால் தப்பித்த இந்தியா! ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டது.

நியூசிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடியது. டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. டி20 தொடரிலும் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபெற்ற விளையாடியது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 3ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று கிறிஸ்துசர்ச்சில் தொடங்கியது . இந்தியா தொடரை சமன் செய்யப்போகிறதா இல்லை நியூசிலாந்து தொடரை கைப்பற்ற போகிறதா என்ற நிலையில் தொடங்கப்பட்ட போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவன் மற்றும் சுப்மன் கில் இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். நியூசிலாந்தின் தொடக்க பவுலர்களுக்கு விக்கெட்டை விட்டுக்கொடுக்காத இந்த ஜோடி, 9ஆவது ஓவர் வீச வந்த மில்னே பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அணியின் ஸ்கோர் 39 ரன்கள் இருந்த நிலையில், 13 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் சாண்டனரிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார், தொடர்ந்து நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்த கேப்டன் ஷிகத் 28 ரன்களுக்கு மில்னே பந்துவீச்சில் பவுல்டாகி வெளியேறினார். அடுத்து கைக்கோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டாலும், 2 பவுண்டரிகளை அடித்த ரிஷப் பண்ட் 10 ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்து வந்த சூரியகுமார் யாதவும் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர், 8 பவுண்டரிகள் அடித்து 49 ரன்கள் இருந்த நிலையில் லாக்கி பெர்குசன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 5 பவுண்ட்ரிகள், 1 சிக்சர் என விளாசி 51 ரன்கள் சேர்த்து இந்திய அணி 219 ரன்கள் என்ற குறிப்பிடக்கூடிய இலக்கிற்கு எடுத்து வந்தார்.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் திணறினர் இந்திய பந்துவீச்சாளர்கள். சிறப்பான ஆட்டத்தை வெளீப்படுத்திய பின் ஆலன் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோர் 97 ரன்கள் இருந்த நிலையில், 57 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை உம்ரான் மாலிக்கிடம் விட்டுக்கொடுத்து வெளீயேறினார். பின்னர் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

பின்னர் தொடர்ந்து மழை அதிகரித்தவாறே இருந்ததால் இந்த போட்டியும் முடிவின்றி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது நியூசிலாந்து அணி. தொடர் நாயகன் விருது டாம் லாதமிற்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com