ஒரு அட்மிஷன்கூட இல்லையாம்... மாணவர் சேர்க்கைக்கு ஏங்கும் பொறியியல் கல்லூரிகள்! ஏன் இப்படி?

ஒரு அட்மிஷன்கூட இல்லையாம்... மாணவர் சேர்க்கைக்கு ஏங்கும் பொறியியல் கல்லூரிகள்! ஏன் இப்படி?
ஒரு அட்மிஷன்கூட இல்லையாம்... மாணவர் சேர்க்கைக்கு ஏங்கும் பொறியியல் கல்லூரிகள்! ஏன் இப்படி?

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் நான்காம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொறியியல் இடங்கள் காலியாக இருப்பதுடன், சில பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூடும் நிரம்பாத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

நாட்டை கட்டமைப்பு செய்வதில் பொறியாளர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. இந்த பொறியாளர்களை உருவாக்கும் படிப்பாக பொறியியல் கல்வி இருந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் படிப்பு என்பது பலருக்கும் எட்டாக் கனியாகவே இருந்தது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு பொறியியல் படிப்பின் மீது ஏராளமானோருக்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அப்போது போட்டி போட்டுக்கொண்டு படிக்கு படிப்படியாக பொறியியல் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மெல்ல மெல்ல பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் குறைந்து காண முடிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் என‌ மொத்தம் 446 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 1‌ லட்சத்து 54 ஆயிரம் 378 பொறியியல் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. 4 கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் முடிவில் 93,571 இடங்கள் மட்டுமே நிறைந்துள்ளது. மீதமுள்ள 60,707 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாமல் காலியாக உள்ளது. தமிழகத்தில் ஒட்டு மொத்த பொறியியல் இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் காலியாக‌ இருப்பதை இது காட்டுகிறது.

சில கல்லூரிகளில் ஒரே ஒரு மாணவர் சேர்க்கை கூட நடைபெறாத நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதேபோன்று ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற கல்லூரிகளும் இருக்கின்றன. 2022-23 ஆம் கல்வியாண்டில் 14 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட இதுவரை சேரவில்லை என்ற தகவல் உள்ளது. 36 பொறியியல் கல்லூரிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அப்படி என்றால், ஏறத்தாழ 50 பொறியியல் கல்லூரிகளில்,‌‌‌‌‌‌‌‌‌‌‌ நிகழாண்டு பொறியியல் படிப்பு நடைபெறுமா என்பதே கேள்விக்குறி உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு இந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. இதன் மூலம், பொறியியல் படிப்பு படிக்க இடம் கிடைக்காத என்று மாணவர்கள் ஏங்கிய காலம் மாறி, பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர வருகை தர மாட்டார்களா என்று கல்லூரிகள் காத்துக் கிடக்கும் நிலையை பார்க்க முடிகிறது.

இது ஒருபுறம் இருக்க, அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரிகளில் கூட சில கல்லூரிகளில் முழுமையாக அனைத்து இடங்களும் நிரம்பாத நிலை காணப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள 13 பொறியியல் கல்லூரிகளில் 7 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது தெரிகிறது. இப்படி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் வேளையில், மற்ற படிப்புகளில் பக்கம் மாணவர்களும், பெற்றோர்கள் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளதை பார்க்க முடிகிறது என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறினார்.

கொரோனா காலத்துக்கு பிறகு பொதுமக்களிடம் வருவாய் குறைந்துள்ளது‌, வேலை இழப்பு அதிகரித்துள்ளது பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு தற்போது ஒரு காரணமாக இருக்கிறது. பல லட்சங்களை செலவு செய்து பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வைப்பதற்கு பதிலாக குறைந்த செலவில் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளை படிக்க வைக்கலாம் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். பொறியியல் கல்விக்காக அதிகமாக பணத்தை செலவு செய்தாலும், குறைந்த ஊதியத்தில் வேலை கிடைக்கும் என்ற மனநிலையும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு காரணமாக இருக்கிறது. காலத்துக்கு ஏற்ற மேம்பாடு இல்லாத கல்லூரிகளும் ஒரு புறம் மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பாக அமைகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம் பொறியியல் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கலந்தாய்வு முறையில் மாற்றங்களை உண்டாக்குவது, கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்றவை பொறியியல் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கூறினார். தற்போது முடிந்துள்ள முதன்மையான பொறியியல் கலந்தாய்வை தொடர்ந்து துணை கலந்தாய்வு அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்விற்கு 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 7 ஆயிரம் மாணவர்கள் வரை நிகழாண்டு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்புள்ளது.

எப்படி என்றாலும், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான காலி இடங்கள் 50 ஆயிரத்துக்கு மேல் இருப்பது உறுதியாகிவிட்டது. ஆகவே அடுத்து வரும் ஆண்டுகளில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இல்லாத வகையில் மீண்டும் பொறியியல் படிப்புகள் புத்துயிர் பெறுமா என்று பொருத்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் முக்கியத்துவம் வாய்ந்த பொறியியல் படிப்புகள் குறித்து மாணவரிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன், பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவது, பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருவது  போன்றவை பொறியியல் கல்விக்கு மீண்டும் ஊக்கம் அளிக்கும் மருந்தாக அமையும் என்றே நம்பலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com