விவசாயம்

பாசன அணைக்கட்டு சேதமானதால் 15 ஆண்டுகளாய் விவசாயம் செய்ய முடியவில்லை.!-சரிசெய்ய கோரிக்கை

webteam

புதுக்கோட்டை திருமயம் அருகே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கும்மங்குடி அணைக்கட்டு சேதமடைந்ததால் 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்யமுடியாமல் கூலி வேலை செய்வதாகவும், அணைக்கட்டை சரிசெய்து விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யவேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராராபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கும்மங்குடி கிராமம். இந்த கிராமத்தில் குண்டாறு நடுவே கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கும்மங்குடி அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும்‌ இந்த அணைக்கட்டின் மூலம் குண்டாறு வழியாக வரும் ஆற்று நீரைத்தேக்கி ஆற்று நீர் மூலம் நேரடியாக கும்மங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 600 ஏக்கரிலும், அதேபோல் இந்த நீரை கம்மாய்களில் சேமித்து வைத்து அதன் மூலம் பேரையூர், மல்லாங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 600 ஏக்கருக்கு மேலும் விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கும்மங்குடி அணைக்கட்டு முறையாக பராமரிக்கப்படாததால் அணைக்கட்டின் கதவணைகள் உடைந்து பெயர்ந்துள்ளது. அதேபோல் வரத்துக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாதால் குண்டாரிலிருந்து வரும் நீர் கும்மங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயன்படும் கால்வாயில் செல்லாமல் நேரடியாக வெள்ளாருக்கு செல்லும் கால்வாயில் சென்று வீணாகும் நிலை உள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டு காலமாக கும்மங்குடி பகுதி விவசாயிகளுக்கு வரும் நீர், அணைக்கட்டு பகுதியிலிருந்து கால்வாய்க்கு செல்லாமல் வீணாக வெள்ளாரில் கலப்பதால், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் குண்டாரிலிருந்து வரும் நீரை நேரடியாக விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த கும்மங்குடி விவசாயிகள் கடந்த 15 ஆண்டு காலமாக விவசாயம் இல்லாமல் அவர்களது சுமார் 600 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலம், கருவை மரங்கள், மண்டி கருவை காடாக காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு பல்வேறு கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் கும்மங்குடி அணைக்கட்டையும் கதவணைகளையும் சீரமைத்து வரத்து கால்வாயை தூர்வாரி விவசாயிகள் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம், தமிழக முதலமைச்சர், மற்றும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மனுக்களை கொடுத்து வரும் அப்பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளதாக தெரிவிக்கின்றனர். எப்போது கேட்டாலும் அணைக்கட்டை பராமரிக்க உரிய நிதி இல்லை, நிதி ஒதுக்கிய பிறகு தான் அணைக்கட்டை சரி செய்ய முடியும் என்றே அதிகாரிகள் தெரிவித்து வருவதாகவும், இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருவதாகவும், இப்பகுதி விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரும் சம்பந்தப்பட்ட துறையினரும் கும்மங்குடி அணைக்கட்டையும் கதவணைகளையும் சீரமைத்து வரத்து கால்வாயை முறையாக தூர்வார உரிய நிதியை ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்கி நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டால் விளைநிலங்களில் உள்ள கருவை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு விவசாயத்தில் ஈடுபடுவோம் என்றும், கும்மங்குடி பகுதியில் விவசாயம் செழிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருமயம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டி மகாராஜனை தொடர்பு கொண்டு கேட்ட போது, அணையை சீரமைத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்துள்ளதாகவும் 2023 - 24 ஆம் ஆண்டு நிதியாண்டில் முக்கிய பணியாக அணை பராமரிப்பு மற்றும் தூர்வாரும் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 2023 - 24 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு நிதி 2 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி வந்தவுடன் அணையின் கதவுகள் சீரமைக்கப்பட்டு வாய்க்கால் தூர்வாரப்படும் என தெரிவித்தார்.