திருவள்ளூர்: பட்டியலின மக்களுக்கு பாதிப்பாக இருந்ததாக தீண்டாமை சுவர் இடிப்பு.!

திருவள்ளூர்: பட்டியலின மக்களுக்கு பாதிப்பாக இருந்ததாக தீண்டாமை சுவர் இடிப்பு.!
திருவள்ளூர்: பட்டியலின மக்களுக்கு பாதிப்பாக இருந்ததாக தீண்டாமை சுவர் இடிப்பு.!

திருவள்ளூர் ஆரம்பாக்கம் அருகே பட்டியலின மக்களை பாதிப்பதாக எழுந்த புகாரில், ஆட்சியர் உத்தரவின்பேரில் காவல் துறை பாதுகாப்புடன் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த தோக்கமூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கூலி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மதிற்சுவர் ஒன்று கடந்த 2015-இல் கட்டப்பட்டது.

மாற்று சமூகத்தினர் கட்டிய இந்த சுவரால் பட்டியலின மக்கள் கால்நடை மேய்ச்சலுக்கு, கூலி தொழிலுக்கு அந்த வழியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக புகார் தெரிவித்தனர். பட்டியலின மக்களை பாதிக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ள தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த சுவரை அகற்ற திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று அதிகாலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமையில், 150-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் அந்த மதிற்சுவர் இடித்து அகற்றப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அங்குள்ள திடலை சுற்றி முள்வேலி அமைத்துள்ளதால் பணிக்கு செல்ல முடியாத நிலையில் அவற்றையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், சுவற்றை மட்டும் இடித்து முள்வேலியை அப்புறப்படுதவில்லை எனக்கூறி கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முள்வேலியையும் அகற்ற அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com