விளையாட்டு

‘கோலி தன்னலமற்றவர்; ஆனால் சச்சின் அப்படியல்ல’- விராட்டை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்ஸ்

PT

49* ரன்களில் பேட்டிங் செய்திருந்த கோலி நான்ஸ்டிரைக்கில் இருந்தபோது தினேஷ் கார்த்திக்கை சிங்கிள் எடுக்க வேண்டாம் என்று கூறி, தொடர்ந்து அடிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனால் ”தன்னலமற்றவர்” என அவரை புகழ்ந்து வரும் நெட்டிசன்ஸ், தற்போது அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் ஓபனர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 96 ரன்களை சேர்த்தது. 7 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய ரோகித் சர்மா 43 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசிய நிலையில் 28 பந்துகளுக்கு 57 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலா பக்கமும் சிக்சருக்கு அனுப்பி ருத்ர தாண்டவம் ஆடினார். உடன் கோலியும் அதிரடி பேட்டிங்கிற்கு திரும்ப அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 3-ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த இந்தக் கூட்டணி சூரியகுமார் யாதவ் ரன் அவுட் ஆகி வெளியேற உடைந்தது.

19-ஆவது ஓவரில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 28 பந்துகளில் 49* ரன்கள் எடுத்திருந்தார். 20ஆவது ஓவரில் பேட்டிங் ஆடிய தினேஷ் கார்த்திக் 50 ரன்கள் அடிக்க சிங்கிள் எடுக்கவா எனக் கேட்ட போது, வேண்டாம் அணிக்கு என்ன தேவையோ அதைசெய்யுங்கள் என்பது போல மறுத்து விட்டு ஆட சொன்னார். ரபடா ஓவரில் சிக்சர்களாக பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக் 7 பந்துகளுக்கு 17 ரன்கள் எடுத்து அசத்தினார். 237 ரன்கள் குவித்த இந்திய அணி போட்டியின் முடிவில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற்றது.

இந்நிலையில் விராட் சிங்கிள் செல்ல மறுத்த வீடியோவை ஷேர் செய்து, அணிக்காக விளையாடும் ஒரு வீரர் என்றும், தன்னலமற்றவர் என்றும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்ஸ் விராட் கோலியை புகழ்ந்து வருகின்றனர். மேலும் சச்சின் 96* ரன்களில் இருந்தபோது தினேஷ் கார்த்திக் நான்ஸ்டிரைக்கில் சிங்கிள் தராததால் திட்டிய நிகழ்வை ஒப்பிட்டும் விராட் கோலியை புகழ்ந்து வருகின்றனர்.