|
யாரைக் காப்பாற்ற?
கீதா
Caged Bird of India
‘கூண்டில் அடைக்கப்பட்ட பறவை இதுதான் சிபிஐ’. சொல்வது எதிர்க்கட்சிகள் அல்ல. உச்ச நீதி மன்றம்.
‘சிபிஐ என்ற கூண்டில் அடைக்கப்பட்ட கிளிக்கு நிறைய எஜமானர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கும் கிளிப்பிள்ளையாக சிபிஐ இருக்கிறது என்பது கசப்பான விஷயம்’ என்று கடந்த புதன் கிழமை (மே 8) நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அறிக்கையை திருத்திய விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது. இத்தனை ஆண்டுகளில் இந்த அளவு கடுமையாக மத்திய அரசை உச்ச நீதிமன்றம் விமர்சித்ததில்லை. சிபிஐ சுதந்திரமாக செயல்படும் என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கான சட்டம் ஜூலை 10-ஆம் தேதிக்குள் இயற்றப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தது.
அதன் சீற்றத்திற்குக் காரணம் இருக்கிறது. 1996-இல் ஹவாலா வழக்கில் அது சிபிஐ விசாரணையில் யாரும்- பிரதமர் உட்பட- தலையிடக்கூடாது என்று விதிகள் வகுத்திருந்தது. அவை இப்போது காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன. நிலக்கரிப் படுகை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் யாரையோ காப்பாற்றும் முனைப்பில் அமைச்சரும் அரசும் குறுக்கிட்டிருக்கிறார்கள் என்பது அம்பலமாகிவிட்டது.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை நிலக்கரிப் படுகையில் (coal fields) உள்ள 142 பிரிவுகள் (coal blocks) சக்தி வாய்ந்த பெரிய 25 தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டன. டெண்டர் விட்டு அதிகத் தொகைக்குக் கேட்கும் நிறுவனத்திற்கு ஒதுக்குகிற நடைமுறை பின்பற்றப்படாமல், நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்பட்டதால், மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தணிக்கைக் குழு அறிக்கை வெளியிட்டது. அந்தச் சமயத்தில் நிலக்கரி இலாகா பிரதமர் மன்மோகன் சிங் வசம் இருந்தது. அதனால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. இதைக் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப் போவதாகவும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) பிரதமர் பெயரைச் சேர்க்க வேண்டும் எனக் கோரப் போவதாகவும் பாஜக முழங்கியது. காவல்துறை, பிரதமரை விசாரிக்கிற ஒரு தர்மசங்கடமான நிலை உருவாகிவிடுமோ என்ற கேள்வி எழுந்தபோது அதைத் தவிர்க்க பிரதமருக்கு விசாரணையில் விலக்களிக்கும்படி கோரி நீதிமன்றத்தை அணுக அரசு எண்ணியது. ஆனால், அட்டர்னி ஜெனரல் வாகனாவதி அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள் என ஆலோசனை சொன்னதின் பேரில் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சரவைச் செயலர் டி.ஆர்.சுப்ரமணியம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, முன்னாள் கடற்படைத் தளபதி தஹிலானி, முன்னாள் அரசுச் செயலர்கள் ஆர்.ராமசாமி, சுசீல் திரிபாதி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.
அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை துவங்கிய பின், இந்த வழக்கை விசாரித்த அதிகாரி டி.ஐ.ஜி.ரவிகாந்த் மிஸ்ரா உளவுத்துறைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த மார்ச் 8-ஆம் தேதி சிபிஐ தனது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், அட்டர்னி ஜெனரல் வாகனாவதி, பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சகத்தில் இணைச்செயலாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகளிடம் காட்டப்பட்டு, அவர்கள் அந்த அறிக்கையில் திருத்தங்கள் செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்க, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா விசாரணை அறிக்கையை சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் சத்ருக்னா சிங், நிலக்கரி அமைச்சகச் செயலாளர் ஏ.கே.புல்லா உட்பட சிலரிடம் காட்டி, அவர்கள் கூறிய திருத்தங்களை, தான் செய்ததாக ஒப்புக் கொண்டார்.
திருத்துவதற்கு முன் இருந்த அறிக்கையையும், திருத்தப்பட்ட அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்த நீதிபதிகள், அறிக்கையின் முக்கியப் பகுதி (இதயம்) மாற்றப்பட்டு விட்டது. எஜமானர்கள் சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளியாகிவிட்டது சிபிஐ என்று கடுமையாகச் சாடியிருக்கிறது. கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று இரவு சிபிஐ அலுவலகத்தில் நிலக்கரித் துறையின் இணைச் செயலர், பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலர் ஆகியோருக்கு என்ன வேலை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து சட்ட அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அமளி எழுந்தது. ஆனால், அவர் ராஜினாமா செய்யவில்லை. மாறாக, நாடாளுமன்றம் முன்கூட்டியே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் ராஜினாமா செய்ய மாட்டார் என்று காங்கிரஸ் சொல்லிவிட்டது.அதிகபட்சம் அவர் இலாகா மாற்றப்படலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலக்கரி ஊழல் விஷயத்தில் அரசு யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறது. யாரை?
பிரச்சினை முடிந்ததா?
அஸ்வினி குமார், பவன் குமார் பன்சால் இரண்டு மத்திய அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள். ஆனால் , பிரச்சினை அத்தோடு முடிந்து விட்டதா? இல்லை, ராஜினாமாவிற்குக் காரணமான கேள்விகளுக்கான விடைகள் இன்னும் வெளியே வரவில்லை.
முதலில் தனக்கும் தன் சகோதரி மகன் விஜய் சிங்லாவிற்கும் பிசினஸ் ரீதியில் எந்தத் தொடர்பும் இல்லை என்று பன்சால் சொன்னார். ஆனால், அவருடைய அதிகாரப்பூர்வ தொலைபேசியிலிருந்து விஜய்சிங்லா பேசியதை ஆறு முறை சிபிஐ பதிவு செய்துள்ளது. அவர் என்ன பேசினார், அந்தத் தொலைபேசி உரையாடலில் என்ன இருக்கிறது என்ற விவரம் வெளியிடப்பட வேண்டும். அவற்றை அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு.
சட்ட அமைச்சராக இருந்த அஸ்வினி குமார் எந்த அதிகாரத்தில் நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அறிக்கையின் இதயப் பகுதியை திருத்தினார்? அவர் செய்த மாற்றங்கள் என்ன? அவற்றை ஏன் செய்தார்? யாரைக் காப்பாற்ற தன்னுடைய அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தினார்? இந்த விவரங்களும் மக்களுக்குத் தெரிய வேண்டும். இவை வெளிவராத வரை, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய ரணத்தைக் களிம்பு கொண்டு பூசியதைப் போலத்தான் ஆகும்.
நாடாளுமன்றம் நடக்கும்போதே எதிர்க்கட்சிகள் அமைச்சர்களின் ராஜினாமாவைக் கோரின. அவர்கள் ராஜினாமா செய்யாததால், அவையை முடக்கின. இப்போது நாடாளுமன்றத் தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்ட பின் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். முன்னதாகவே ராஜினாமா செய்திருந்தால், நாடாளுமன்றம் செயல்பட்டு ஏழைகளின் உணவிற்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதா போன்ற முக்கியமான பல மசோதாக்கள் நிறைவேறி இருக்கும். காலங்கடந்த ராஜினாமாவால் யாருக்கும் பலனில்லை.
|