|
சிவில் சர்வீஸ் தேர்வு தமிழில் சாதித்த மாணவர்
பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து சிவில் சர்வீஸ் மெயின் தேர்வையும் தமிழிலேயே எழுதிய ஜெயசீலன், இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் பணியைப் பெற்றுள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவரது சக்ஸஸ் டிப்ஸ்.
பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்று நம்பிக்கையூட்டுகிறார் வீ.ப. ஜெயசீலன். சொந்த ஊர் பெரியகுளத்தை அடுத்த கெங்குவார்பட்டி.அவரது தந்தை, கூட்டுறவு சங்க எழுத்தர். அம்மா, வீட்டை கவனித்துக் கொள்கிறார். அரசுப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தார். ராயப்பன்பட்டி அல்லோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவையும் தமிழிலேயே படித்து, வேளாண் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண்மைப் பட்டப் படிப்பைப் படித்தார். பின்னர் எம்ஏ தமிழ் படித்தார். தற்போது, ‘சிறைவாசிகளின் இலக்கியப் படைப்புகள்’ என்ற தலைப்பில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வை மேற்கொண்டு வருகிறார். 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று கருவூலக் கணக்கர் பதவியில் சேர்ந்தார். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் அந்தப் பணியை விட்டுவிட்டு ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரானார். சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் பொது நிர்வாகம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றை விருப்பப் பாடங்களாக எடுத்தார். நேர்காணலை ஆங்கிலத்தில் எதிர்கொண்டார்.சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் பணியைப் பெற்றாலும்கூட, மீண்டும் ஐஏஎஸ் பணியைப் பிடிக்க வேண்டும் என்ற தீரா ஆர்வத்தில் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத மீண்டும் தயாராகி வருகிறார்.
“சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் ஓராண்டுக்கு முன்பிருந்தே படிக்க வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை இருக்கும் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். ஆங்கில நாளிதழை தொடர்ந்து படித்து முக்கியமான விஷயங்களை குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும். அத்துடன், கணிதம், புத்திக்கூர்மை குறித்த விஷயங்களிலும் அக்கறை தேவை. தாய் மொழியில் மிகச் சிறப்பாக விடையளித்துவிட முடியும். முதல்நிலைத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகள் இருக்கும். முதன்மைத் தேர்வில் கேள்விகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். ஆனால், தமிழில் விடை எழுதலாம். தமிழில் தரமான புத்தகங்கள் கிடைப்பதில்லை என்ற பிரச்சினை இருந்தாலும்கூட சரியான வழிகாட்டுதலுடன் படித்தால் இந்தத் தேர்வுகளை சிறப்பாக எழுதிவிடலாம். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழில் வினாத்தாள் வழங்குவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு, தமிழில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டால் தமிழகத்திலிருந்து இன்னமும் நிறையப் பேர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள்” என்கிறார் ஜெயசீலன்.
“ஒரு விஷயத்தின் இரு பக்க கருத்துகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த விஷயத்தில் நமது சார்பற்ற நிலைப்பாடு என்ன என்பதையும் தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலிலிருந்தே பல்வேறு விஷயங்களைப் படித்து வருவதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அது நேர்காணலுக்கு உதவும்” என்று கூறும் ஜெயசீலன், “காத்திருத்தல், பொறுமை, உழைப்பு இருந்தால் போதும் வெற்றி நிச்சயம்” என்று நம்பிக்கையூட்டுகிறார்.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வில் அவர் எதிர்கொண்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் கீழே தரப்படுகின்றன:
தேர்வாளர்: உட்காருங்கள்! (ஹிந்தியில்)
ஜெயசீலன்: நீங்கள் கூறியது எனக்குப் புரியவில்லை.
தேர்வாளர்: ஹிந்தி தெரியாதா? ப்ளீஸ் சிட் டவுன்!
கேள்வி: நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறீர்கள். தமிழ்நாடு நன்கு வளர்ச்சி பெற்ற மாநிலம். அங்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் நன்கு உள்ளது. இரண்டு முதல்வர்கள் மாறி மாறி பதவிக்கு வருகிறார்கள். அதற்கும் வளர்ச்சிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
பதில்: நிச்சயமாக இருக்கிறது. இரண்டு முதல்வர்களும் நல்ல போட்டியாளர்கள். எனவே, ஒருவரைவிட மற்றொருவர் வளர்ச்சியில் நன்கு கவனம் செலுத்துகிறார்கள். எனவே, தமிழ்நாடு நன்கு வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்கிறது.
கேள்வி: உங்கள் மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்குக் காரணம் என்ன?
பதில்: மூன்று முக்கியத் துறைமுகங்கள் அமைந்துள்ளன. எனவே, கடல்வழிப் போக்குவரத்து சாதகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால், முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள். பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகள் இங்குதான் அதிகம். எனவே, திறமைபெற்ற தொழில் சார் பணியாளர்கள் அதிகம் கிடைக்கிறார்கள்.
கேள்வி: இலங்கை அரசுக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் பற்றி தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து உங்களது நிலை என்ன?
பதில்: இந்தத் தீர்மானங்களை முழுவதுமாக நான் ஆதரிக்கிறேன். இந்தத் தீர்மானத்துக்கான பின்புலக் காரணங்கள் மிகச் சரியானவை. அந்தக் காரணங்கள் மனிதாபிமான அடிப்படையில் எழுந்தவை. உலக சமுதாயம் மிக கவனத்துடன் அணுகி, கடந்த 40 ஆண்டுகளாக போரால் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக மறுவாழ்வு ஏற்படுத்திதர இத்தீர்மானம் உதவும். ஆதலால் இலங்கைத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானது.
கேள்வி: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தால், நமது வெளியுறவுக் கொள்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதா? ஒரு மாநிலத்தின் தீர்மானம் வெளியுறவுக் கொள்கைக்குப் பாதிப்பாக இருக்காதா? ஒரு மாநிலத்தின் தீர்மானம் வெளியுறவுக் கொள்கைக்கு அழுத்தம் தருவது சரியா?
பதில்: நமது நாடு உலக அரங்கில் சமாதானத்தையும் அமைதியையும் விரும்பும் நாடு. அதுவும் நமக்கு மிக அருகில் உள்ள தேசத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனவே, அமைதியை ஏற்படுத்துவதுதான் நமது வெளியுறவுக் கொள்கை. எனவே, உலக அரங்கில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
கேள்வி: அகதிகள் பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. எனவே, நாம் புகலிடம் கொடுக்க வேண்டுமா?
பதில்: நிச்சயம் கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தையும் அமைதியையும் விரும்பும் இந்தியாவிற்கு இது ஒரு தார்மீகக் கடமை ஆகும்.
கேள்வி: தமிழ்நாட்டில் மகளிர் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிக் கூறுங்கள்?
பதில்: மகளிர் மேம்பாட்டுக்கான திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானிய உதவிகளும் கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன. திருமண உதவித் தொகை, தொட்டில் குழந்தைகள் திட்டம் போன்று தமிழ்நாட்டில் மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
கேள்வி: பொது சிவில் சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் கேள்வியை மீண்டும் கூறுங்கள்! (மீண்டும் கேள்வியைக் கூறுகிறார்). இதுகுறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. உடனடியாக்க கொண்டு வர முடியாது. ஆனால், எந்தத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் அதைக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.
கேள்வி: சார்க் கூட்டமைப்பில் இந்தியாவின் தற்போதையப் பங்கு என்ன? தெற்காசியப் பகுதியில் நிலவும் ஜனநாயக அச்சுறுத்தல்களால் அதைக் களைவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து எவ்வாறு செயல்பட முடியும்?
பதில்: தெற்காசியப் பகுதியில் நிலையான அரசியல் தன்மையும் ஜனநாயகமும் நிலவும் நாடு இந்தியாதான். பல நேரங்களில் பாகிஸ்தானுடன் நாம் சகிப்புத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம். எனவே, பாகிஸ்தானுடன் மட்டுமல்ல, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுடன் இணைந்து பயங்கரவாதத்தை வேரறுத்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் பொறுப்பை முன்னெடுக்கும் வாய்ப்புகள் இந்தியாவுக்கு உண்டு.
கேள்வி: காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? கர்நாடகம் பாதிக்கப்படுமா? உங்கள் கருத்து என்ன?
பதில்: தமிழகத்தின் 13 மாவட்டங்கள் காவிரி நதிநீரை நம்பி உள்ளன. காவிரி நீர் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. ஆதலால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை இரு மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். நீண்டகால நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்.
கேள்வி: இயற்கை வளங்களை எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும்?
பதில்: நீர் உள்ளிட்ட எந்த இயற்கை வளமாக இருந்தாலும் அது அனைவருக்கும் பொதுவானது. மாநில எல்லைகள் என்பதெல்லாம் கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்டவை. இயற்கைக்கு எல்லை கிடையாது. அதைத் தேவையின் அடிப்படையில் முறையாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
கேள்வி:சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து சிலர் காஷ்மீரில் தஞ்சம் புகுந்து அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டுகோள் விடுத்த செய்தி பற்றி கேள்விப்பட்டீர்களா?
பதில். மன்னிக்க வேண்டும். தாங்கள் கூறிய செய்தி பற்றி நான் கேள்விப்படவில்லை.
கேள்வி: நிலம் கையகப்படுத்துதலில் ஒடிசாவிலும் மேற்கு வங்கத்திலும் ஏற்பட்ட பிரச்சினைகளையும் அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் கூறுங்கள்.
பதில்: ஒடிசாவில் போஸ்கோ தொழிற்சாலை பிரச்சினை, மேற்கு வங்கத்தில் நானோ தொழிற்சாலை பிரச்சினை போன்றவை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பானவை. விவசாய, பழங்குடியினரின் நிலப் பகுதிகளைக் கையகப்படுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி முக்கியமானது. அதைவிட மக்களின் வாழ்வாதாரம் முக்கியமானது. எனவே, முறையான சட்டங்களின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
கேள்வி: தற்போது கொண்டுவரப்படவுள்ள நிலக் கையகப்படுத்துதல் மசோதாவின் முக்கிய அம்சங்களைக் கூறுங்கள்?
பதில்: ஊரகப் பகுதியில், நிலத்தின் மதிப்பைவிட 4 மடங்கு தொகை அளிக்க வேண்டும். நிலம் தருபவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சங்கள் இதில் உள்ளன.
கேள்வி: பள்ளியில் சாரணர் படையில் இருந்திருக்கிறீர்கள். அதில் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
பதில்: தோழர்களுடன் பழகுவது, பள்ளிக்கு வெளியே சமூகப் பணியில் ஈடுபடுவது, குழுவாகச் செயல்படுவது, தலைமைப் பண்புகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டேன்.
ஜெயசீலன்: (நேர்முகத் தேர்வு முடிந்தது) நன்றி.
தேர்வுக் குழுத் தலைவர்: நன்றி. வணக்கம்.
|