|
பிளஸ் டூ தேர்வில் மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் சாதனை!
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 4 மாணவிகள் 1200க்கு 1130 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். செல்வ ஜோதி என்ற மாணவி புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த ஐந்து மாணவிகளின் மேற்படிப்புச் செலவுகளை ஏற்பதாக மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
பிளஸ் டூ தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 89.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாமானிய ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளிகளில் படித்தாலும் கூட, இந்த மாணவிகளும் பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்து மாநகராட்சிப் பள்ளிகளுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 1200-க்கு 1145 மதிப்பெண்கள் பெற்ற மாணவி வீர செல்வி, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அமைந்தகரையில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமர்ஸ் குரூப் படித்தவர் அவர். அவரது தந்தை வீரப்பன் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆபீஸ் பாயாக பணியாற்றி வருகிறார். வறுமைச்சூழலிலும் பத்தாம் வகுப்பில் 500-க்கு 481 மதிப்பெண்கள் எடுத்த வீர செல்வி. தற்போது பிளஸ் டூ தேர்வில் இந்த சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில் சி.ஏ. படிக்க வேண்டும் என்பது இவரது லட்சியம். “பள்ளியில் சிறப்பு வகுப்புகளை முடித்து விட்டு வந்த பிறகு, இரவு 10.30 மணி வரை பாடம் படிப்பேன். காலையில் 4 மணியிலிருந்து 7 மணி வரை படிப்பேன். இந்த அளவுக்கு ஆர்வத்துடன் கடும் உழைப்பைச் செலுத்திப் படித்ததால்தான் அதிக மதிப்பெண்களைப் பெற முடிந்தது” என்கிறார் வீர செல்வி.
சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமர்ஸ் குரூப் படித்த மாணவி நித்யாவும், வேளச்சேரியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் காமர்ஸ் குரூப் படித்த பிரியாவும் 1200-க்கு 1142 மதிப்பெண்கள் பெற்று, சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். நித்யாவின் தந்தை பாபு, மாவு மில் ஒன்றில் கூலிவேலை செய்து வருகிறார். பத்தாம் வகுப்பில் 456 மதிப்பெண்கள் எடுத்தவர் நித்யா. இவரும் சிஏ படிக்கவே விரும்புகிறார். பிரியாவின் தந்தை சிட்டிபாபு, ஊதுபத்தி வாங்கி விற்று வருகிறார். பிறக்கும் போதே வலது கை குறைபாட்டுடன் பிறந்த பிரியா, இடது கையிலேயே தேர்வு எழுதி சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பில் இவர் பெற்ற மதிப்பெண்கள் 456. இவரும் சிஏ படிக்க ஆர்வம் கொண்டுள்ளதாக கூறுகிறார்.
கொருக்குப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமர்ஸ் குரூப் படித்த மாணவி ஆயிஷா சித்திக், 1200-க்கு 1138 மதிப்பெண்கள் பெற்று, சென்னை மாநகரப் பள்ளிகள் அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவரது தந்தை பாபு, டெய்லர் கடை ஒன்றில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். வறுமையின் காரணமாக ஆயிஷாவை பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, படிப்பை நிறுத்தி விட முடிவு செய்திருந்தார். ஆனால், பத்தாம் வகுப்புத் தேர்வில் 473 மதிப்பெண்கள் எடுத்ததால், ஆயிஷாவை மேல்நிலை வகுப்பில் சேர்த்தார். ஆயிஷாவின் ஆசையும் சி.ஏ. படிப்பதுதான்.
மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து சிறப்பிடம் பெற்ற இந்த நான்கு மாணவிகளையும் புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வ ஜோதியையும் ரிப்பன் மாளிகைக்கு அழைத்துப் பாராட்டினார் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி. இந்த ஐந்து மாணவிகளின் மேற்படிப்புச் செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்தார். நெசப்பாக்கம் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை சுப்பராயன் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வில் நூறு சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். துணை மேயர் பெஞ்சமின், மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், இணை ஆணையர் டி.என். வெங்கடேஷ், கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோரும் மாணவிகளை வாழ்த்தினர்.
புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம்
திருவான்மியூரில் உள்ள சென்னை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த செல்வ ஜோதி, புவியியல் பாடத்தில் 200-க்கு 198 மதிப்பெண்கள் பெற்று, இந்தப் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண்கள் 1115. பிளாட்பாரத்தில் இவரது தந்தை டேவிட் ஜெயக்குமார், பழ வியாபாரம் செய்து வருகிறார். பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்கள் எடுத்திருந்தார் செல்வஜோதி. எதிர்காலத்தில் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பதற்காக மேல்நிலை வகுப்பில் வரலாற்றுப் பாடத்தைத் தேர்வு செய்ததாகக் கூறும் அவர், பி.காம் படிக்கப்போவதாகக் கூறினார். அதையடுத்து, ஐ.ஏ.எஸ் ஆவதுதான் தனது லட்சியம் என்கிறார்.
|