|
நேரமற்ற நேரங்கள்
ஆத்மார்த்தி
அது ஒரு பார். ஒரு கெச்சலான மனிதன் அங்கே எடுபிடியாக வேலைபார்த்து வந்தார். அவருக்கு ராமசாமி என்று பெயர் சூட்டுவோம். ராமசாமி கரிய நிறத் தேகத்தில் வியர்வை வழிய அந்தப் பாரின் குறுக்கும் நெடுக்கும் பிஸியாக வளைய வந்து கொண்டிருப்பார். குடிக்கிற இடத்தில் குடிக்காமல் அமர்ந்திருப்பது தவத்திற்கு ஒப்பானது. முன் மாலை நேரங்களில் அங்கே சென்று சுதி சேர்க்கத் தொடங்கும் என் நண்பர்களுடன் ஒரு கூல்ட்ரிங்க் பாட்டிலைக் கையில் வைத்தபடி ராமசாமியையே கவனித்துக் கொண்டிருப்பேன்.
ராமசாமி மிக அற்புதமாகப் பாடுவார். அந்தக் குரல் அந்த சபைக்கானதல்ல. அவரும் அந்த இடத்திற்கான மனிதர் அல்ல. என்ன செய்வது..? காலம் மனிதர்களைவிட முன் மூத்தது. அதன் வஞ்சகங்கள் கருணையற்றவை. அதற்கு ராமசாமியின் வாழ்க்கை ஓர் உதாரணம். எல்லா மேசைகளிலும் ஆட்கள் நிரம்ப ஏழு மணி ஆகும். எங்கிருந்தாவது ஒருவர் ராமசாமியை அழைப்பார். கட்சித் தலைவரின் குரல் கேட்டு ஓடிச்செல்லும் ஒரு மாவட்டச் செயலாளரின் பவ்யத்துடன் தலையைத் தலையை ஆட்டிவிட்டு நகர்வார் ராமசாமி.
நேயர் விருப்பத்தை மதித்த நற்கலைஞன் அவர். ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்...’ என ஆரம்பித்தவுடன் அந்த இடம் சட்டென்று அமைதியாகும். பல ஆண்டுகளுக்கு முன்னால், எல்லாரின் மனங்களிலும் பசை போட்டு ஒட்டிக்கொண்டது அந்தப் பாடல். போதைப் போராளிகள் தங்களை மறந்து அவரது பாடலில் மூழ்குவார்கள். தனியாக வந்தமர்ந்து மது அருந்துகிற சிலருக்கு, எதிர்சீட்டில் அமரும் உற்ற நண்பனைப்போல் நெகிழ்த்தும் அப்பாடல். தேவையற்ற தேவதையாய் இசை அந்த இடத்தை மழையாய்க் கழுவும். இருளும் புகையும் இசையும் சேர்ந்த ஒரு தீவு போலாகும் அந்த மதுக்கூடம். ராமசாமி பாடி முடித்ததும் நிறையப் பேர் கைதட்டுவார்கள். அந்தக் கைதட்டல் ஒரு பார் எடுபிடிக்கு கிட்டாத மகாவரம். ராமசாமி நாணத்தில் குறுகுவார். அவரை தன்பக்கம் அழைத்து ஜமீன்தார் போன்ற ஒருவர், ஒரு பணத்தாளைத் திணிப்பார். நாலைந்து பேர் தொடர்ந்து பணம் தருவார்கள். அது டிப்ஸ் அல்ல. அவரது குரலுக்கான அங்கீகாரம். ராமசாமி தன் வேலையைப் பார்த்துக்கொண்டே பாடுவது அவரது தனித்துவம். ஒழுங்கறுவதற்குச் சகல சாத்தியங்களும் இருக்கிற அந்த இடத்தை, ஒழுங்குபடுத்திக் கட்டுக்குள் வைக்கிற குரல் வீரனாக எனக்கு ராமசாமி தோன்றினார். அவரது குரல், காவல்காரனின் கையில் இருக்கிற லாட்டிக் கம்பென அங்கே குழுமி இருப்பவர்களைக் கட்டுப்படுத்தும்.
ஒவ்வொரு மாலையிலும் தன் முதல் பாடலைத் தொடங்கி, இரவு வரை ஏழெட்டுப் பாடல்களையாவது பாடி விடுவார். இடையே தனக்குக் கிடைக்கிற சம்பாவனைகளைக் கொடுத்து சுதி ஏற்றிக்கொள்வார்.ஒரு நாளில் விழித்திருக்கிற எல்லா நேரமும் போதையின் பிடிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த ஒருவர்தான் ராமசாமி. அவரிடம் எப்படி அவ்வளவு அற்புதமான இசை இயைந்த குரல் விளைந்தது என்பது வியப்பு. பெரும்பாலும் நான் விரும்பிக் கேட்கிற பாடல்கள், அவருக்கும் பிடித்தமானவையாக இருந்திருக்க வேண்டும். அந்த வித்தியாசத்தை அவர் பாடுகிற தொனியில் காட்டுவார்.எந்த ஒரு கலைஞனுமே தனக்கான விருப்பங்களைத் தன்னிடம் கோருபவர்களை மிகவும் விரும்புகிறான்.அவர்களுக்கு நன்றி கூறுவதுபோலத் தன் அன்பை குழைத்துப் பரிமளிக்கிறான்.
எப்போதும் என் முதல் விருப்பம், ‘குங்குமம்’ படத்தில் வருகிற, ‘தூங்காத கண்ணென்று ஒன்று...’ அது ஒரு சோடிப் பாடல் என்றாலும் ஆண், பெண் இருவரது குரலையும், தானே கையாளுவார் ராமசாமி. சவுந்தரராஜனின் பாடல்கள் மீதுதான் அவருக்கு எப்போதும் பெரும்பிரியம் இருந்தது. ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்... என்பதில் குழைவார். சட்டி சுட்டதடா கைவிட்டதடா... என்கையில் விம்முவார். ‘யாருக்காக இது யாருக்காக..?’ என்பதைக் கையாளுகையில், குருதி தெறிக்கிற அனுபவம் இசைக்கும். குஷியாகி விட்டால், நீயே உனக்கு என்றும் நிகரானவன்...’ பாடலின் பல்லவியை மட்டும் பாடுவார்.‘நான் பெற்ற செல்வம்...’ பாடலை அவர் பாடி முடிக்கையில் எனக்குக் கண்ணீர் பெருகும்.
ஒரு நாள் பெரிதாக சன நடமாட்டம் இல்லாத திருநகர் பார்க் பகுதியின் பின்புறம் என் ஸ்கூட்டியில் நானும் பின் சீட்டில் பூபாலனும் பயணிக்கையில் தெருவோரம் சரிந்து கிடக்கும் ஒரு மனிதனைப் பார்த்தோம். கிட்டச் சென்றால் தெரிந்தது, அது ராமசாமி. கடந்து செல்ல எனக்கு மனமில்லை. வண்டியை நிறுத்திவிட்டு அவரை எழுப்பி, எனக்கும் பூபாலனுக்கும் நடுவே அமர்த்தி விட்டு அவர் வீடு எங்கே என விசாரித்தோம். பூபாலன் அவரது கன்னத்தில் தட்டித் தட்டி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தான். பதில் இல்லை. சரி, பாருக்குச் சென்று விசாரிக்கலாம் என்றால், பூட்டியிருந்தனர். நீ நேரே பாண்டியன் கடைக்கு விடு என்றான் பூபாலன். அந்தப் பின்னிரவு திறந்திருக்கக் கூடிய சில கடைகளில் ஒன்று, பாண்டியன் டீ ஸ்டால். கலைவாணி தியேட்டருடன் இணைந்த வளாகத்தில் அப்போது இருந்தது. அங்கே சென்றோம். பூபாலன் அவரைத் தன் மீது சரித்தவாறே நான் வாங்கித் தந்த தேநீரை அருந்தினான். தலையில் அடித்துக் கொண்டான். இப்பிடி டீ குடிச்சதேயில்ல மாமா நான்...இதெல்லாம் நமக்குத் தேவையா.. என்று உபதேசித்தான். தண்ணீரை எடுத்து, ராமசாமியின் மீது தெளித்தேன். எந்தச் சலனமும் இல்லை. அங்கே டீ குடிக்க வந்த ஒருவர் ஆபத்பாந்தவனானார். அந்தாளு இப்ப எளுந்திரிக்க மாட்டான்...இவன் குடியிருக்கிறது ஆர்வி பட்டி. அங்கே போயிக் கேளுங்க...டக்குன்னு தெரிஞ்சுடும்...
மகிழ்ந்து அவருக்கு நன்றி சொல்லியவாறே வண்டியை ஆர்வி பட்டிக்குத் திருப்பினோம். ராமசாமியின் கதவு இலக்கம் தெரிந்துகொண்டு அவர் வீட்டு வாசலில் ஒரு வழியாக வண்டியை நிறுத்தினோம். பூபாலன், என் நட்பைத் தொடரலாமா..? வேண்டாமா? என்ற விளிம்புநிலைக்குச் சென்றிருப்பது அவன் பார்வையில் தெரிந்தது. நான் மட்டும் இறங்கி, கதவைத் தட்டினேன்.
‘யாரு..? எனக் கேட்டதற்கு, ‘உங்க அப்பா வந்திருக்காரு’ என்றேன்.
படீரென்று கதவு திறக்கப்பட்டது. வெளி லைட் எரியத் தொடங்கியதில், அவள் முகம் எனக்கு நன்றாகத் தெரிந்தது. அந்த வயதில் அத்தனை துடிக்கிற உதடுகளையும் அத்தனை வியர்த்த நாசியையும் அத்தனை நெருக்கத்தில் பார்க்கிற வாய்ப்பு மிக ஆபத்தானது. ஆனாலும் அழகானது.
‘உங்களுக்கு ஏங்க இந்த சமூக சேவை..?
அவள் கேட்டது மிக நக்கலாக இருந்தது.
பாராட்டுதல்களை எதிர்பார்த்த என் மனநாயகம் வெடித்துச் சிதற... நான் பூபாலனைப் பார்த்தேன். அவன் ராஜேந்திரக்குமாரின் கதைகளில் சொல்லப்படுகிறாற் போல், ‘ஙே’ என்று விழித்தான்.
சுதாரித்தவன்...
‘ஏங்க...ரோட்டுல விழுந்து கிடந்தாரு... பார்த்துட்டு சும்மா போக மனசில்ல... அதான் கூட்டியாந்தோம்...’ என்றான்.
‘இவ்ளோ நல்லவரு, ‘உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போயிருக்கலாம்ல..?’ என்றாள். இந்தக் கேள்விக்கு சத்தியமா என்ன சொல்வதென்று எங்கள் இருவருக்குமே தெரியவில்லை.
அவளே தொடர்ந்தாள்...
‘எப்படியும், விடிஞ்சா அவரே எழுந்திரிச்சி வந்துருவாரு...
இதற்குள் பூபாலனும் நானும் அவரைத் தரையில் விரித்த பாயில் படுக்க வைத்திருந்தோம்.
எங்களுக்கு நன்றி எனும் வார்த்தையைச் சொல்வாள் என்ற நம்பிக்கை இல்லை. அந்த அறை மூலையில் மேசையில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த புத்தகம் அவள் எம்.பி.ஏ. படிப்பதை உணர்த்தியது. நான் வேறு இடத்தில் அடிக்கடி சந்திக்கிற ஒருவர், திரும்பிச் செல்கிற இடம் எனக்குத் தெரிந்த கதையை மாற்றியது. கதவை அடைக்கையில், அந்தப் பெண் பார்த்த பார்வையில் உன்னத உத்தமப் பரிகாசம் வழிந்து கொண்டிருந்தது.
திரும்பும் வழியில் பூபாலன் அந்தப் பெண்ணை மனதாரத் திட்டினான். நான் சொன்னேன்,‘பூபாலா...நாம பெரிய்ய ஹீரோ மாதிரி உதவி பண்றதா நினைச்சு செய்ற இந்தக் காரியம், அந்தப் பொண்ணுக்கு எவ்ளோ எரிச்சலா இருக்கும்னு யோசி. தினமும் தன் அப்பனை யாரோ முகந்தெரியாதவன் வந்து, வீட்டில படுக்க வெச்சிட்டுப் போறதை எந்தப் பொண்ணுதான் விரும்புவா..? தன் தகப்பனை மொத்தமா வெறுத்திடுச்சிடா அந்தப்பொண்ணு’ என்றேன்.
அவன் வாயை மூடிக்கொண்டான்.
சில காலம் கழித்து, மீண்டும் ஒருமுறை பாருக்குச் சென்றபோது அங்கே ராமசாமி இல்லை. கேட்டதற்கு, அவர் இறந்து விட்டார் எனத் தெரிந்தது. அந்த மதுக்கூடத்திற்கும் தனக்குமான கடைசிப் பாடலாக அவர் எதைத் தேர்வு செய்திருப்பார் என்று ஓர் எண்ணம் மனதில் ஓடியது. மறுகணம், நன்கறிந்த நபர் ஒருவரின் பிரிவு ஏற்படுத்துகிற நியாயமான உணர்வெதுவுமே ராமசாமியின் மரணச்சேதி எனக்குள் பெயர்க்காதது வியப்பாக இருந்தது. பெயர் தெரியாத ராமசாமியின் மகளும் கவிழ்த்தி வைக்கப்பட்ட அவளது எம்.பி.ஏ. புத்தகமும் ஞாபகத்தில் இடறின. இனி அந்த வீட்டின் கதவுகள் இரவுகளின் நேரமற்ற நேரங்களில் தட்டப்படாது என்ற எண்ணம் நிம்மதியாகக் கூட இருந்தது.
(சித்திரம் பேசும்)
|