|
தர்பூசணி அளவுக்கு லாபம்
எல்லுச்சாமி கார்த்திக் (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)
அதியனல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்கிற விவசாயி, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
முதல்கட்டமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட்டு, நன்றாக இரு முறை உழுது, சொட்டுநீர்ப் பாசனத்திற்கான வசதிகளை மேற்கொண்டேன். பின் வரிக்கு வரி இரண்டடி அகலத்திலும், செடிக்குச் செடி 3 அடி இடைவெளியிலும், ஒரு அடி ஆழத்தில் குழி எடுத்து, ஏக்கருக்கு 25 கிலோ பொட்டாஷ், 50 கிலோ DAP, வேர்ப் புழுக்களைத் தடுக்க 8 கிலோ போரைட் ஆகியவற்றைக் கலந்து சமமான அளவில் குழிகளில் இட்டு மூடிய பின், ஒரு குழிக்கு 3 விதைகள் வீதம் விதைகளை ஊன்றினேன். 5-6 நாட்களில் செடிகள் வந்தவுடன், செழுமையான இரண்டு செடிகளைத் தேர்வு செய்து, மீதமுள்ள ஒன்றை அகற்றிவிட்டேன். இரண்டு ஏக்கர் நிலத்திற்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். பக்கிஜா என்ற விதையைத்தான் பயிரிட்டுள்ளேன்.
பயிர் பலன் கொடுக்கும் காலம்
விதை விதைத்த 45-ஆம் நாளிலிருந்து காய்கள் பழுக்கத் துவங்கும். குறைந்தபட்சம் 60 நாட்களுக்குமேல் அறுவடை செய்யத் துவங்கலாம். தொடர்ந்து 20 நாட்கள் வரை தர்பூசணிப் பழங்களை அறுவடை செய்யலாம்.
பயிர்ப் பாதுகாப்பு முறை
பயிர் செழுமையாக வளர்வதற்குத் தேவையான அனைத்து உரங்களையும் சொட்டுநீர்ப் பாசனத்தின் வழியாகவே அளித்தேன். பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல், நாளொன்றுக்கு ஒரு கிலோ வீதம், முதல் 20 நாட்களுக்கு 19:19:19 உரத்தையும், அடுத்த 20 நாட்களுக்கு 12:61:0 (Mono Ammonium Phosphate) உரத்தையும், அதன் பின் 13:0:45 (Pottasium nitrate) உரத்தையும் செடிகளுக்கு வழங்கியுள்ளேன். இவை அனைத்துமே நீரில் கரையக் கூடிய உரங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நோய்த் தாக்குதல் தென்பட்டால், வாரம் ஒருமுறை கால்சியம் நைட்ரேட் மருந்தைப் பயன்படுத்தினால் நோய்த் தாக்கு அறவே இருக்காது.
தினந்தோறும் செடிகளுக்கு மிதமான நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் நீர் பாய்ச்சுவதால், 2 ஏக்கருக்கும் அதிகபட்சமாக இரண்டு மணி நேரமே போதுமானது. இப்படிச் செய்தால் செடிகள் பசுமையாக இருக்கும், மகசூலும் அதிகரிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை களை அகற்ற வேண்டும்.
முதலீடு
இரண்டு ஏக்கரில் சொட்டுநீர்ப் பாசன வசதியுடன் தர்பூசணி பயிர் செய்துள்ளதால், சுமார் 60,000 ரூபாய் வரை செலவாகியுள்ளது.
மகசூல்
இரண்டு முறை அறுவடை செய்ததில், மொத்தமாக 15 டன் பெற்றுள்ளேன். அனைத்துச் செலவும் போக 40,000 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, அடுத்த சில நாட்களில் மூன்றாம் முறை அறுவடை செய்தால், அதிலிருந்தும் சுமார் 8 டன் வரை மகசூல் பெறுவேன் என்று எண்ணுகிறேன்.
அறுவடை செய்வதற்கு முன்பாகவே, 45 - 50 நாட்களுக்குள் பழம் பழுக்கத் தொடங்குவதால், அவற்றை அறுவடை செய்து நிலத்தை ஒட்டியுள்ள கடலூர் - சிதம்பரம் சாலையின் ஓரத்தில் சிறிய தட்டி அமைத்து, முன்கூட்டிய பழுத்த பழங்களை விற்பனை செய்து வருகிறேன். இப்படி கடந்த 20 நாட்களாக நாளொன்றுக்கு சுமார் 150 கிலோ வரை அறுவடை செய்து, ஒரு கிலோ 5 ரூபாய் வீதம், சுமார் 500 முதல் 750 ரூபாய் வரை லாபம் ஈட்டி வருகிறேன்.
சந்தை வாய்ப்புகள்
தர்பூசணி கோடை காலத்திற்கு ஏற்ற பயிர் என்பதால், வெயில் நேரங்களில் இதன் தேவை அதிகமாகவே உள்ளது. வறட்சி காரணமாக விளைச்சல் சுமாராகவே உள்ளது. பெரும்பாலும் வியாபாரிகள் நேரடியாக நிலத்திற்கே வந்து, நல்ல விலை கொடுத்து டன் டன்னாக வாங்கிச் செல்கின்றனர்" என்கிறார்.
தொடர்புக்கு: ராஜேந்திரன் 92446 81350
(பசுமை படரும்)
|