|
சென்ற வார மனிதர்கள்
பறவைக் காவலர்
ஹார்ன்பில் (இருவாட்சி அல்லது இருவாய்க்குருவி என்று தமிழில் சொல்கிறார்கள்) இறைச்சிக்காகவும் அழகிய வண்ண இறகுகளுக்காகவும் வேட்டையாடப்படுவதால், அருகிவரும் பறவை இனம். இப்பறவைகளைக் காப்பதற்காக ஓர் அரசு சாரா நிறுவனத்தின் சார்பாக களமிறங்கினார், அபராஜித் தத்தா. அஸ்ஸாமில் உள்ளூர் மக்களிடம் இப்பறவை குறித்த விழிப்புணர்வை இவர் ஏற்படுத்தியதின் மூலம், இன்று ஹார்ன்பில் பறவைகள் பெருகியிருக்கின்றன. இந்த அசாதாரமாண பணியினை கவனத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பணிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, ‘க்ரீன் ஆஸ்கர்’ விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சிறு வயதிலிருந்தே மரம், செடி, கொடி, காடு, பறவை, விலங்கினங்கள் என்று சுற்றுச்சூழல் மீதான காதலுடனேயே வளர்ந்தவர் அபராஜித் தத்தா.
தலைவர் எங்கே?
பாகிஸ்தானில் மே 11-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இத்தேர்தலை அக்கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ தலைமையில் எதிர்கொள்கிறது. நாடு முழுக்க தலைவர் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று ஆவலோடு எதிர்பார்த்த கட்சித் தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சிந்து மாகாணத்தில் ஆரம்பத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிலாவல், அதன்பிறகு எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. கட்சித் தொண்டர்களிடம் வீடியோவில் பேசிய பிலாவல், ‘தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்யவே விரும்புகிறேன். ஆனால், என்னுடைய தாத்தா பூட்டோ, அம்மா பெனசிரை கொன்றதைப்போல என்னையும் கொல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். தீவிரவாதிகளின் மிரட்டலுக்குப் பயந்து, அவர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதிக்கொண்டிருக்கின்றன. தேர்தலில் ஓட்டுப் போடவாவது வருவாரா என்பது, அன்றைக்குத் தெரிந்துவிடும்.
பதிலுக்குப் பதில்?
பாகிஸ்தான் சிறையில் இந்தியக் கைதியான சப்ரஜித் சிங், சக கைதிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்தது இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. இப்போது ஜம்முவில் இருக்கும் சிறையில் பாக். கைதியான சனவுல்லா ரஞ்ச அதுபோலவே தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். 1999-இல் தடா சட்டத்தின் பிரிவுகளின் பேரில் தீவிரவாதியாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சனவுல்லா, ஆயுள் தண்டனை பெற்ற கைதி. ஜம்மு - காஷ்மீர் அரசாங்கம் உடனடியாக ஜெயில் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, இச்சம்பவம் குறித்த விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறது. இருப்பினும் இச்சூழலில் இது இந்தியாவுக்குப் பெரிய தலைகுனிவையே உருவாக்கியிருக்கிறது.
|