முகப்பு இந்த வாரம்
மின்னஞ்சல்

பிளஸ் டூவுக்குப் பின் விவசாயப் படிப்புகள்

ஜி. மீனாட்சி


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.


நாட்டின் முதுகெலும்பே  விவசாயம்தான்’ என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. நம் நாட்டில், 70 சதவீதம் தொழில்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை என்கிறது ஒரு புள்ளிவிவரம். விவசாயத்தில் நவீனத் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் அதிகமாகிவிட்ட இந்நாளில், விவசாயப் படிப்பிலும் புதிய தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.


தமிழகத்தைப் பொருத்தவரை, வேளாண் கல்வி கற்பிப்பதில் மிகச் சிறந்த கல்வி நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது, கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். கோவை மட்டுமன்றி, மதுரை, கிள்ளிக்குளம் (தூத்துக்குடி மாவட்டம்), திருச்சி, பெரியகுளம், மேட்டுப்பாளையம், மதுரை, காரைக்கால், கலவை (வேலூர் மாவட்டம்), பெரம்பலூர், பொள்ளாச்சி, தேனி போன்ற பல இடங்களில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும், இணைப்புக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் வேளாண் தொடர்பான பல்வேறு படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் வேளாண் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.


என்னென்ன கற்றுத் தருகிறார்கள்?


பி.எஸ்சி. வேளாண்மை நான்கு ஆண்டு பட்டப் படிப்பில், வேளாண்மையின் பயன்கள், கோட்பாடுகள், ஒட்டுமொத்த தொழில்நுட்பம், நவீன தொழில்நுட்பம் பற்றி கற்றுத் தரப்படுகின்றன. அத்துடன், படித்ததை பொருத்திப் பார்த்து செயல்படுத்தும் முறையும் சொல்லித் தரப்படுகிறது. இறுதியாண்டில், ஊரக வேளாண் பணி அனுபவத்தை (RAWE)  மாணவர்கள் பெறவேண்டும் என்பதற்காக, விவசாயிகளின் பண்ணைத் தோட்டங்களுக்கே நேரடியாகச் சென்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது.


பி.எஸ்சி. தோட்டக் கலைப் பிரிவுப் படிப்பில், தோட்டக் கலை பயிர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். பல்வேறு வகையான மர வகைகள், காய்கறிப் பயிர்கள், பூப்பயிர்கள், மசாலா பயிர்கள் பற்றியெல்லாம் விரிவான முறையில் கற்பிக்கப்படுகின்றன. இறுதியாண்டில் நேரடியாகவே தோட்டக் கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.


பி.எஸ்சி. வனவியல் பிரிவில், வனம் மற்றும் வனங்களில் பயிரிடப்படும் பயிர்கள் தொடர்பான விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. டீ, காபி, ரப்பர் போன்ற வனப்பயிர்கள் மற்றும் வனச் சட்டம் குறித்தும் மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இறுதியாண்டில், வனங்களுக்கே சென்று பயிற்சி பெறவும் முடிகிறது. பி.எஸ்சி. மனையியல் பிரிவில் உணவுப் பயிர்களைப் பதப்படுத்தி, பல்வேறு வகையான மதிப்புமிக்க பொருள்களாக மாற்றும் முறை, அவற்றை சந்தைப்படுத்தும் முறை பற்றியெல்லாம் மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். பி.எஸ்சி. பட்டு வளர்ப்புப் பிரிவில், பட்டுப் பூச்சி வளர்த்தல், அதிலுள்ள சவால்கள், மெல்பெரி வளர்ப்பது போன்ற பல்வேறு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.


பி.டெக். வேளாண்மை தொழில்நுட்பப் பிரிவில், விவசாயத்துக்குத் தேவையான இயந்திரங்கள், கருவிகள், அவற்றை உருவாக்கும் முறை, அவற்றின் பயன்பாடுகள், பழுது ஏற்பட்டால் நீக்கும் முறை போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன. உயிர்த் தொழில்நுட்பவியல், உயிரித் தகவலியல், வேளாண் தொழில் மேலாண்மை, வேளாண்மைத் தகவல் தொழில்நுட்பம், தோட்டக்கலை, உணவு பதன்செய் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய ஏழு பிரிவுகளில் இளம் தொழில்நுட்பப் படிப்புகளும் இங்கு உள்ளன.


இந்தப் படிப்புகளில் சேர என்ன தகுதி வேண்டும்?


பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவை எடுத்துப் படித்த மாணவர்கள், வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய துறைகளில் பி.எஸ்சி. பட்டப் படிப்பை படிக்க முடியும். பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுடன், உயிர் வேதியியல்,  உயிர்த்தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், மனையியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தை எடுத்துப் படித்தவர்கள், தோட்டக்கலை, உயிரித் தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம், உயிர் நுட்பவியல் போன்ற பிரிவுகளில் பி.டெக். பட்டப் படிப்பையோ, வேளாண் தொழில் மேலாண்மை, பட்டுவளர்ப்பு, போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி. பட்டப் படிப்பையோ படிக்க முடியும்.


பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்தவர்கள், வேளாண்மைப் பொறியியல், உணவு பதன் செய் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய பிரிவுகளில் பி.டெக். படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்கலாம்.


பிளஸ் டூ வகுப்பில், தொழில் பயிற்சிப் படிப்பு (Vocational stream) மாணவர்கள், உயிரியல் மற்றும் வேளாண் செயல் முறைகள் தொடர்பான பாடத்தை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், வேளாண்மைப் பொறியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில்  பி.எஸ்சி. பட்டப் படிப்பு படிக்க விண்ணப்பிக்க முடியும்.


எப்படி விண்ணப்பிக்கலாம்?


இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து, முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.


ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு,  விண்ணப்பத்துடன் பதிவிறக்கம் செய்த செலான் மூலம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அனைத்துக் கிளைகளிலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.625-ஐ செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்குக் கட்டணம் ரூ.325. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டைப் பயன்படுத்தியும் கட்டணம் (ரூ.600) செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இக்கட்டணம் ரூ.300. ஸ்டேட் வங்கியில் கட்டணம் செலுத்தியிருந்தால், விண்ணப்பத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட TNAU செலானின் நகலை  விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். வருகிற 6-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


அரசுப் பணிகளிலும் வங்கிப் பணிகளிலும் வேலைவாய்ப்பை வழங்கக் கூடியவை வேளாண் படிப்புகள். முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளைப் படித்து, கல்லூரிகளில் ஆசிரியர்களாகவோ அல்லது ஆய்வு நிறுவனங்களிலோ பணிகளில் சேரலாம். சிவில் சர்வீஸ் தேர்வும் எழுதலாம். வேளாண் படிப்புகளில் ஆர்வமிக்க மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 07.06.2013

தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 17.06.2013

முதல்கட்ட கலந்தாய்வுக் கூட்டம் : 01.07.2013 முதல் 08.07.2013 வரை

இரண்டாம் கட்ட கலந்தாய்வுக் கூட்டம்: 15.07.2013 முதல் 16.07.2013 வரை

விவரங்களுக்கு: தொலைபேசி எண்: 0422-6611345, 6611346.

இணையதளம்: www.tnau.ac.in

டியூயல் டிகிரி

பி.எஸ்சி. வேளாண்மைப்  பாடப் பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவர்கள், 3 ஆண்டுகள் படித்து முடித்ததும், அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் டியூயல் டிகிரி படிக்கத் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் படிக்கலாம். படிப்பின் இறுதியில், வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி. பட்டமும், அமெரிக்கப் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ். பட்டமும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

விவசாயத்தில் டிப்ளமோ!

மிழகத்தில் திண்டிவனம், பவானிசாகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், அருப்புக்கோட்டை, பேச்சிப்பாறை, குடுமியான்மலை, காட்டுத்தோட்டியம் ஆகிய இடங்களில் வேளாண் பட்டயப் படிப்பு நிலையங்கள் உள்ளன. பிளஸ் டூ வகுப்பில் தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது உயிரியல் அல்லது வேளாண்
சார்ந்த பாடப் பிரிவை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த வேளாண் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பில் சேர முடியும். ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி குறைந்தபட்சம் 17 வயதும், அதிகபட்சம் 21 வயதும் உடையவர்கள் யார் வேண்டுமானாலும் இப்படிப்பில் சேரலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு கிடையாது. விவசாயத் தொழில்நுட்பங்கள் விவசாயிகளைச் சென்றடைந்து, வேளாண் உற்பத்தியைப் பெருக்க உதவும் வகையில் இந்தப் பட்டயப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொதுக் கலந்தாய்வின் மூலம் பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


“உழவியல், பூச்சியியல், நோயியல், மண்ணியல், வேளாண் விரிவாக்கம், பயிர் இனப்பெருக்கவியல், விதை நுட்பவியல், கால்நடையியல், கணிப்பொறியியல், தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், உணவு அறிவியல், ஊட்டச்சத்துவியல், வணிக வேளாண்மை, வேளாண்மைப் பொருளியல், செயல்திட்டம் பயிற்சி மற்றும் மொழியியல் ஆகிய துறை சார்ந்த பாடங்கள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. படிப்பின் ஒரு பகுதியாக, மாணவ, மாணவிகள் 15 நாட்களுக்கு பல்வேறுபட்ட தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும்.  நீர்ப்பாசனத் திட்டம், பூச்சிக் கொல்லி தயாரிப்பு நிறுவனம், உயிர் உரங்கள் தயாரிப்பு நிறுவனம், சர்க்கரை ஆலை, உர நிறுவனம் மற்றும் விதை தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் பயிற்சி பெற அனுப்பப்படுகிறார்கள்” என்கிறார், திண்டிவனம் சி.சுப்ரமணியம் வேளாண் பட்டயப் படிப்பு நிலைய முதல்வர் ஆர். வைத்தியநாதன்.


  “பட்டயப் படிப்பு இறுதியாண்டில் வளாகத் தேர்வு மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 12 நிறுவனங்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை அளித்தன. வேளாண் பட்டயப் படிப்பு முடித்தவர்கள், தாங்களே சுய தொழில் தொடங்கலாம். காளான் வளர்ப்பு, தோட்டக்கலை, தேனீ வளர்ப்பு, மண்புழு உரத் தயாரிப்பு, உயிர் உரத் தயாரிப்பு, நாற்றங்கால் பண்ணை அமைத்தல், பட்டுப்புழு வளர்ப்பு போன்ற சுய தொழில்களில் ஈடுபடலாம். இங்கு பயின்ற மாணவ, மாணவிகள் வேளாண் உதவி அலுவலர்களாக அரசுப் பணியிலும் பணியாற்றுகிறார்கள்” என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்,  திண்டிவனம் சி.சுப்ரமணியம் வேளாண் பட்டயப் படிப்பு நிலைய கல்வி ஒருங்கிணைப்பாளர் வை.ராதாகிருஷ்ணன்.

 

விவரங்களுக்க:  04147-250293

இ-மெயில்:  arstvm@tnau.ac.in
 

 
 
இந்த வார இதழில்
ஜாதி அமைப்புகளைத் தடை செய்தால் என்ன?
தலையங்கம்
என் ஜன்னலுக்கு வெளியே...மாறாத அடையாளம்...
உயிர் காக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை இனி ஏழைகளுக்கும் இலவசமாகக் கிடைக்கும்
உங்கள் முகத்தோடு ஓர் அஞ்சல்தலை!
வருகிறது பிளாஸ்டிக் சாலைகள். ஆனால் . . .
பூகம்பத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள எறும்புகளால் முடியும்!
நியாயம் கிடைக்குமா?
வீடு கட்ட பிளான் இலவசம்
ஏழே ரூபாய்க்கு 20 லிட்டர் மினரல் வாட்டர்!
இனி நீர் நிம்மதியாக இருக்கலாம்!
மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள்
மனக்குகைச் சித்திரங்கள் - 6
நீங்களும்ஜெயிக்கலாம் - 18
வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி
புலிகளின் புதல்வர்கள் – 33
பசுமைப் பக்கங்கள்-1 / சமவெளியிலும் விளையும் கேரட்
பசுமைப் பக்கங்கள் - 2 / தர்பூசணி அளவுக்கு லாபம்
எம்ப்ளாய்மெண்ட்
இன்பாக்ஸ்
மிஸ்டர். அற்புதம்!
உடல் அசைந்தால் இசை பிறக்கும்..பூ
சென்ற வார மனிதர்கள்
 
இந்த வார கல்வி இதழில்
பிஇ கவுன்சலிங்: விண்ணப்பிப்பது எப்படி?
சோதனையிலும் சாதனை!
பிளஸ் டூ தேர்வில் மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் சாதனை!
சிவில் சர்வீஸ் தேர்வு தமிழில் சாதித்த மாணவர்
ஐஏஎஸ் முதல் இடம்
சிவில் சர்வீஸ் தேர்வு : வென்றவர்கள் வழிகாட்டுகிறார்கள்!
க்விஸ்
பிளஸ் டூ மாணவர்கள் பாலிடெக்னிக்கில் படிக்கலாம்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் அட்மிஷன்: விண்ணப்பிப்பது எப்படி?
அஞ்சல்