|
பிஎஸ்சி மாணவர்கள் எம்இ படிக்கலாம்!
கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி., படித்த மாணவர்கள் உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு எம்.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது ஹைதராபாத்தில் உள்ள பிட்ஸ் கல்வி நிறுவனம்.
நாட்டில் பொறியியல் படிப்பை வழங்கும் முக்கியக் கல்வி நிறுவனம் பிட்ஸ் என்று அழைக்கப்படும் பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனம். இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஹைதராபாத் வளாகத்தில் எம்.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் (இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் சிறப்புப் படிப்புடன்) தொடங்கப்பட்டுள்ளது. இது மூன்று ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு. கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்து பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பட்டப் படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வருகிற ஜூன் 3, 4-ஆம் தேதிகளில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். பிலானி, கோவா, ஹைதராபாத், சென்னை, தில்லி, பெங்களூரு, கொல்கத்தா, நாக்பூர், நொய்டா ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வு இரண்டரை மணி நேரம் நடைபெறும். கணிதத்தில் 30 வினாக்களும் இயற்பியலில் 30 வினாக்களும் ஆங்கில மொழித் திறனை சோதனை செய்து அறியும் வகையில் 20 வினாக்களும் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் படிப்பில் சேரத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு டீச்சிங் அசிஸ்டென்ஷிப் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.8,800-ம் உதவித் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அத்துடன், மூன்றாம் ஆண்டிலிருந்து படிப்புக் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை சலுகையும் அளிக்கப்படும். இந்த உதவித் தொகை பெறுவதற்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரம் கற்பிக்கும் பணியிலோ அல்லது வேறு வளர்ச்சித் திட்டங்களிலோ பங்கேற்க வேண்டியதிருக்கும். முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி நிறுவனம் வழங்கும் மெரிட் ஸ்காலர்ஷிப் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
பிட்ஸ் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனைப் பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணமான ரூ.1,750 செலுத்தியதற்கான ஆதாரத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். இந்தக் கட்டணத்தை எப்படிச் செலுத்த வேண்டும் என்ற விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Admission Officer, BITS, Pilani - 333 031 என்ற முகவரிக்கு மே 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
விவரங்களுக்கு: http://bitsadmission.com/
|