|
பட்டதாரி மாணவர்களுக்கு வங்கி அதிகாரி வேலை!
தேசியமயமாக்கப்பட்ட வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி பணி இடங்களில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டீலர்ஸ் அதிகாரி பணியிடத்தில் 10 காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.பி.ஏ., ஃபைனான்ஸ் படித்திருக்க வேண்டும். தனியார் வங்கியில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கும், சிஏஐஐபி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
ரிசர்ச் அனலிஸ்ட் பணியில் 2 காலி இடங்கள் உள்ளன. எம்.ஏ., எக்னாமிக்ஸ் அல்லது எம்.பி.ஏ., ஃபைனான்ஸ் படித்திருக்க வேண்டும். மார்க்கெட் ரிசர்ச் துறையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எக்னாமிக்ஸ் துறையில் பிஎச்.டி., முடித்தவர்களுக்கும், சிஏஐஐபி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆர்க்கிடெக்ட் பணியில் 15 காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.ஆர்க்., பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் ஆர்க்கிடெக்ச்சர் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினி அறிவு பெற்றிருப்பது மிகவும் அவசியம்.
சிவில் என்ஜினீயர்ஸ் பணியில் 8 காலி இடங்கள் உள்ளன. சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பி.இ., படித்திருக்க வேண்டும். மூன்றாண்டுகள் பணி அனுபவமும், கணினி அறிவும் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு. எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் பணியில் 2 காலி இடங்கள் உள்ளன. பி.இ., அல்லது பி.டெக்., எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும். மூன்றாண்டுகள் பணி அனுபவமும், கணினி அறிவும் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
டீலர், ரிசர்ச் அனலிஸ்ட் பணிகளில் சேரவிரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். ஆர்க்கிடெக்ட், சிவில் என்ஜினீயர், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் பணிகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். மார்ச் 31-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசின் விதிமுறைகளின்படி வயதுவரம்புச் சலுகையும் உண்டு.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 50. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.550. எழுத்துத் தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல் ஆகிய மூன்று கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியுடையவர்கள் இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.
125 நிமிடங்கள் நடைபெற உள்ள இத்தேர்வில், ரீசனிங் பிரிவில் 25 கேள்விகள், ஜெனரல் அவேர்னஸ் பிரிவில் 25 கேள்விகள், ஆங்கில மொழிப் பிரிவில் 25 கேள்விகள், விண்ணப்பதாரரின் சிறப்பு பாடப் பிரிவில் 50 கேள்விகள் என மொத்தம் 125 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான மொத்த மதிப்பெண்கள் 100.
தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் ஜூன் 23-ம் ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வு பெறும் விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டத் தேர்வான கலந்துரையாடலுக்குத் தகுதி பெறுவர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2013
விவரங்களுக்கு: www.centralbankofindia.co.in
|