|
கல்விக் கண் தரும் மாணவர்கள்!
பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாடங்களைப் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்கள் குரோம்பேட்டை எம்ஐடி மாணவர்கள்.
பார்வைத் திறனற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படித்தாலும்கூட, அவர்களது பாடங்களைப் படித்துக் காட்டுவதற்கு மற்றவர்கள் உதவி அவசியம் தேவை. தங்களது படிப்பு நேரம் போக மற்ற நேரங்களில், பார்வைத் திறனற்ற மாணவர்களுக்குப் பாடங்களைப் படித்துக் காட்டும் பணியைச் செய்து வருகிறார்கள் சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள். மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி, லயோலா கல்லூரி போன்ற கல்லூரிகளில் படிக்கும் பார்வைத் திறனற்ற மாணவர்கள் இதனால் பயனடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பாடம் படித்துக் காட்டுவது, அசைன்மெண்ட் எழுதித் தருவது, தேவையான பாடங்களைப் படித்து, அதை ரெக்கார்ட் செய்து தருவது உள்ளிட்ட வேலைகளை தங்களது படிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் செய்து வருகின்றனர். இந்தச் சேவை கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தங்களது சீனியர்கள் செய்த இந்தப் பணியை ஒவ்வொரு ஆண்டும் வரும் மாணவர்கள் சிரமேற்கொண்டு தொடர்ந்து செய்து வருகின்றனர்.
‘விஷன் கம்பேனியன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த அமைப்பில், இங்கு பயின்று வரும் அத்தனை மாணவர்களுமே உறுப்பினர்கள்தான். எந்தெந்த மாணவருக்கெல்லாம் மாலை நேரத்தில் ஓய்வு கிடைக்கிறதோ, அவர்களெல்லாம் இங்கே வந்து பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகின்றனர். சில நேரங்களில் பார்வைத் திறனற்ற ஆசிரியர்களும் வந்திருந்து, படித்துவிட்டுப் போகின்றனர். அவசியம் ஏற்பட்டால் சனி, ஞாயிறும்கூட பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகின்றனர். இதுமட்டுமின்றி, தேர்வு நேரங்களில், பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கு ‘ஸ்கிரைப்’ ஆகவும் இக்கல்லூரி மாணவர்கள் செயல்படுகிறார்கள்.
கல்வியாண்டின் இறுதியில் விழா ஒன்றை நடத்தி, இங்கு பாடம் படிக்க வரும் அனைவரையும் அழைத்து, அரசு அவர்களுக்கு செய்துதர உள்ள சலுகைகள் பற்றிய முழுத்தகவல்களையும் தெரிவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, அதனை சிடியிலும் பதிவு செய்து தருகிறார்கள். பார்வைத் திறனற்ற மாணவர்கள் பிரெல் முறையில் பாடங்களைப் படித்தாலும்கூட, அவர்களுக்கு ‘ஜாஸ் சாஃப்ட்வேர்’ (கீ போர்டைத் தொட்டால் எந்த எழுத்தைத் தொடுகிறீர்கள் என்று கம்ப்யூட்டர் குரல் கொடுக்கும்) கற்றுத் தருவதற்கான முயற்சியிலும் எம்.ஐ.டி. மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களது உதவியுடன் படித்து வந்த ரகு தற்போது, நந்தனம் அரசுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுபோல, இவர்களால் பலன் அடைந்தவர்கள் பலர். ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மாணவர்கள், இதுபோன்ற சமூகசேவை மனப்பான்மையோடு கற்றுத் தர வந்தால், விழியிழந்த மாணவர்களின் வாழ்வில் கல்வி ஒளி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
|