|
‘‘தேவை ஒரு புதிய அரசியல்’’
பேரா. க.பழனித்துரை (அரசியல் அறிவியல் துறை, காந்திகிராமப் பல்கலைக்கழகம்)
இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் ராகுல் காந்தி நிகழ்த்திய உரை பற்றி பெரும்பாலான ஊடகங்களில் அவர் எப்படிப் பேசினார், எப்படி நின்றார், எப்படி நடந்தார், ஏன் பிரதமர் பதவியை ஏற்க மறுக்கிறார், ஏன் திருமணம் செய்யவில்லை, அதற்கு அவர் அளித்த பதில் சரியா, தவறா என்பது குறித்த விவாதங்களை முன் வைத்தனர். ஒரு சிலர் இன்றைய இந்தியா சந்திக்கும் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வினைச் சொல்லவில்லை. அவர் சார்ந்திருக்கின்ற கட்சிதான் ஆட்சி செய்கிறது, இருந்தும் ஏன் பிரச்சினைகளுக்கு அவரால் தீர்வு காணமுடியவில்லை. இவர் ஏதோ எதிர்க்கட்சியில் இருப்பதுபோல் பேசுகிறார் எனக் கருத்துக்களை வைத்தனர். இந்தியத் தொழில்துறை கூட்டமைப்புக் கூட்டத்தில் பேசியபோது, மூலதனத்தை ஈர்க்க எந்த யோசனையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் ஒரு கட்சியின் உதவித் தலைவர் என்ற முறையில் வாக்குகளை கவர்வதற்கும் எந்தச் செய்தியும் தரவில்லை என ஊடகங்கள் கருத்துக்களை உருவாக்கித் தந்தன. பொதுவாக ஊடகங்கள் தனக்கென ஓர் எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு அதன்மூலம் ராகுல் காந்தி தரும் செய்திகளை அணுகுகின்றனர். அதே தொனியில் அரசியல் கட்சிகளும் கருத்துக்களை முன் வைத்தன. உண்மையில் ராகுல் காந்தி கூறிய ஒரு முக்கிய கருத்தின்மேல் மிகப் பெரிய விவாதம் நடைபெறவில்லை. அந்தக் கருத்து என்ன?
இந்திய நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரு தலைவர் தீர்வு கண்டுவிடுவார் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மக்களை அதிகாரப்படுத்துவதும் உள்ளாட்சியை வலுப்படுத்துவதும் மக்கள் அமைப்புகளை உருவாக்குவதும்தான் தீர்வாக இருக்க முடியுமே தவிர, யார் பிரதமராக வர வேண்டும் என்பதல்ல. நாட்டின் பிரச்சினைகள் தீர்வதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு, அவர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத் தேவை. ஒரு நாட்டில் எது இறையாண்மையுடையது என்றால் பலரும் கூறுவது, அரசு என்று. அந்த அரசுக்கு இறையாண்மையைத் தந்தது யார் என்றால், அந்த நாட்டின் மக்கள். எனவே, மக்கள்தான் அடிப்படையில் இறையாண்மை மிக்கவர்கள். ஆனால், அவர்களை அடையாளம் இல்லாதவர்களாக, பயனாளியாக, மனுதாரராக, வாக்காளராக நடத்தி, அவர்களின் அதிகாரத்தைப் பறித்துவிட்டன இன்றைய பெரிய அரசாங்கங்கள்.
ஆகையால்தான் ஏழைகளையும் ஒதுக்கப்பட்டவர்களையும் அதிகாரப்படுத்த இன்றைக்கு நமக்குத் தேவை மக்களை மையப்படுத்திய ஓர் அரசாங்கம், ஓர் ஆளுகை, ஒரு நிர்வாகம், ஓர் அரசியல், ஒரு மேம்பாடு என்கிறார் ராகுல் காந்தி. இந்திய மக்களுக்குத் தாங்களும் மதிக்கத் தகுந்த குடிமக்கள் என்கின்ற சூழலை உருவாக்க அவர்கள் கருத்துக்களுக்கு வாய்ப்புத்தர வேண்டும். எல்லாத் தரப்பு மக்களுக்கும் அந்த வாய்ப்பு எங்கே இருக்கின்றது என்றால், அது பஞ்சாயத்து அரசாங்கத்தில்தான் உள்ளது. ஆனால், அது வலுப் பெறவில்லை என்பதைத்தான் கூறியிருக்கிறார்.
நாட்டின் வளர்ச்சியும் மேம்பாடும், அறிவு, தொழில்நுட்பம், மூலதனம், வளர்ச்சி, அரசாங்கம், ஆளுகை, நிர்வாகம் இவற்றில் உள்ளது என்று நம்பும் நம் அறிவுஜீவிகள் அது மக்கள் கையில் உள்ளது என்பதை நம்புவது கிடையாது. இன்றைய அரசாங்க அமைப்பு என்பது எந்தக் கட்சியிடம் இருந்தாலும் இதன் விளைவு என்பது மக்களுக்குச் சாதகமாக இருக்காது. எனவே, அரசாங்கம் மக்களைப் பிடித்து வைத்திருப்பதிலிருந்து மக்கள் அரசாங்கத்தை பிடித்து வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இதற்கு நமக்குத் தேவை புதிய அரசியல். அது மக்கள் அரசியல். மக்கள் அரசியலைப் பற்றிய ஒரு கருத்தைத் தந்த ராகுல் காந்தியை, சராசரி அரசியல்வாதி தரவேண்டிய செய்தியைத் தரவில்லை எனக் குறை கூறுவது என்பது இன்னும் இந்த ஏமாற்று அரசியலில் மக்களைச் சிக்க வைப்பதற்கு என்றுதான் நம்பத் தோன்றுகிறது.
‘‘வெறும் வார்த்தை ஜாலம்’’
ஜி.ராமகிருஷ்ணன், (மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர், இளைஞர் காங்கிரஸின் தலைவர் எனக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தெடுக்கப்பட்டு, தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக ஆக்கப்பட்டிருக்கிறார் ராகுல்காந்தி. அவர்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் பேசி வருகிறார்கள். அதை சோனியா காந்தி இதுவரை மறுக்கவில்லை.
இத்தகைய சூழலில், தனிநபரால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி பேசியிருக்கிறார். சரியான கருத்துதான். ஆனால், அதை அவரால் அமல்படுத்த முடியுமா?
ராகுல்காந்தியின் தந்தை ராஜீவ்காந்தி மேற்குவங்கம் சென்றபோது, அங்கு பஞ்சாயத்து அமைப்புகள் சிறப்பாகச் செயல்படுவதைக் கண்டு பாராட்டினார். அதன் அடிப்படையில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் சட்டமாக்கப்பட்டது. அதன் காரணமாக மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் அமலில் இருந்த பஞ்சாயத்துகளுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து கிடைத்தது. அப்போது கர்நாடகத்தில் முதல்வராக இருந்த ஜனதா கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டேவும் அதை ஓரளவு அமல்படுத்தினார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்மொழிந்த அந்தத் திட்டம் அப்போது காங்கிரஸ் கட்சி ஆளுகிற மாநிலங்களில் அமலாகவில்லை. என்ன காரணம்? காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும், சகல அதிகாரங்கள் படைத்தவராகவும் இருந்த ஒருவராலேயே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதை ஏன் அமல்படுத்த முடியவில்லை? மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை அமலாக்கக்கூடிய குணமோ, அணுகுமுறையோ, விருப்பமோ இல்லாததுதான் அதற்குக் காரணம். மக்களுக்கு அதிகாரம் என்றால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இன்றைக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் பிற மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படவோ, போதிய நிதி ஒதுக்கப்படவோ இல்லை.
எனவே, மக்களை அதிகாரப்படுத்த வேண்டும் என்று ராகுல்காந்தி பேசுவதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள்தானே தவிர வேறொன்றுமில்லை. தேர்தல் காலத்தில் மற்ற கட்சியினரும் தன் கட்சியில் உள்ள மற்ற தலைவர்களும் பேசாத ஒரு விஷயத்தை, கவர்ச்சிகரமான ஒரு கோஷத்தை முன்வைக்க வேண்டும் என்ற முனைப்புதான் இதற்குக் காரணம். உண்மையிலேயே அது அமலாக்கப்பட வேண்டும் என்பதற்கான அக்கறையும் முயற்சியும் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் கட்சியே நினைத்தாலும் கூட, ராகுல்காந்தியே பிரதமராக வந்தாலும்கூட அது நடக்காது, முடியாது என்பதுதான் உண்மை.
மக்களுக்கு அதிகாரம் என்றால், அந்த அதிகாரம் எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வாழ்வாதாரத்துக்கான கருவி எது? அது மக்களிடம் இருக்கிறதா? மக்களிடம் அது இருந்தால் அதுதான் அதிகாரம். கிராமப்புற மக்களுக்கு நிலம்தான் வாழ்வாதாரம். ஆனால், நிலத்தை உழுகிற விவசாயிகளுக்கு நிலம் சொந்தமில்லை. கிராமப்புறங்களில் சாகுபடிக்குத் தகுதியான 40 சதவிகித நிலம் வெறும் ஐந்து சதவிகிதம் பேரிடம் உள்ளது. இந்நிலையில், மக்களுக்கு எப்படி அதிகாரம் வழங்க முடியும்? தன் வாழ்வாதாரத்தை, தானே தீர்மானிக்கக்கூடிய நிலை மக்களுக்கு எப்போது வருகிறதோ, அப்போதுதான் மக்களுக்கு அதிகாரம் கிடைத்தது என்று அர்த்தம்.
கல்வியும், சுகாதாரமும் தனியார்மயம் ஆக்கப்படுவதால், அது ஏழை எளிய மக்களுக்கு கனவாக மாறி வருகிறது. அதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல், காங்கிரஸ் கட்சியால் மக்களை அதிகாரப்படுத்த ஒருபோதும் முடியாது. ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு வெறும் தேர்தல் உத்தியே தவிர, வேறொன்றும் இல்லை.
மாநிலங்களுக்கான அதிகாரங்களை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பறித்துவருகிறது. இவர்கள் எப்படி மக்களுக்கு அதிகாரம் வழங்குவார்கள்?
|