|
அட்டயா பட்டயா
பூ.சர்பனா
பிரபலமடைந்து வரும் அட்டயா பட்டயா விளையாட்டில் சமீபகாலமாக தமிழக அணியினர் தேசியளவிலான போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். தமிழக அட்டயா பட்டயா டீமை வாழ்த்துக்களுடன் சந்தித்தபோது, அவர்களின் தொடர் வெற்றிக்குக் காரணம் புரிந்தது.அணியில் இடம்பிடித்துள்ள அனைவருமே 23 வயதிற்குட்பட்ட இளம் ரத்தங்கள்...
மஹாராஷ்டிராவில் 1982-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அட்டயா பட்டயா நம் தமிழர்களின் பூர்வீக விளையாட்டு. விவசாயிங்க ஃப்ரியா இருக்கும்போது உப்புக்கோடு, தண்ணிக்கோடு, கிளித்தட்டு போன்ற பெயர்களில் இதை விளையாடியிருக்காங்க. மறைஞ்சிபோன இந்த விளையாட்டு, தமிழகத்துக்கு திரும்பவும்வர பயிற்சியாளர் மாறன் சார் தான் முக்கியக் காரணம். அவரே பல மாவட்டங்களுக்குப் போய் பள்ளிக் கல்லுரி மாணவர்களுக்கு அட்டயா பட்டயா விளையாட்டின் ஆட்ட நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்து ஆர்வத்தை உண்டாக்குனாரு. அட்டயா பட்டயா கோகோவும் கபடியும் கலந்த ஆக்ரோஷமான விளையாட்டு. ஒரு டீமுக்கு மொத்தம் 12 வீரர்கள் இருப்பாங்க. கோகோவைப் போலவே இதிலும் 9 பேர் பாக்ஸில் நின்றுகொண்டு ஓடிவரும் எதிரணியினரை கட்டத்தைத் தாண்டாமலேயே அவுட்டாக்கி பாயிண்ட் எடுக்க வேண்டும்.விளையாடிக் கொண்டிருக்கும் 9 பேரில் யாராவது அவுட்டாகி விட்டால், வெளியிலிருக்கும் 3 பேர் ஒருவர்பின் ஒருவராக உள்ளே வந்துவிடுவார்கள். இதில் கலந்துகொள்ள எவ்விதத் தகுதிகளும் தேவையில்லை. நல்ல உடல்வாகும், உயரமும் இருந்தாலே ஆர்வமுடன் பயிற்சி எடுத்து, பத்தே நாட்களில் சிறப்பாக கற்றுக்கொள்ளலாம். 12 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்கு மேல் என்று மொத்தம் 3 பிரிவுகளில் தேசியளவில் இந்த விளையாட்டை அட்டயா பட்டயா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தி வருகிறது.எங்கள் டீமில் இருக்கும் 12 பேருமே 23 வயதிற்குட்பட்ட இளைஞர்கள். எங்கள் டீம் உருவான பிறகுதான் 2011-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தமிழகத்திற்கு பதக்கங்களை வென்று வருகிறோம்" என்று பெருமையுடன் பேசி முடிக்கிறார், தமிழக அட்டயா பட்டயா அணியின் கேப்டன் சிவசுப்பிரமணியன்.
சமீப காலமாக தமிழக அணி நேஷனல் லெவலில் தொடர்ந்து பதக்கங்கள் வெல்ல எங்களின் ஒற்றுமையும், பயிற்சியாளர் திருநாவுக்கரசு கொடுக்கும் பயிற்சி முறைகளும்தான் முக்கியக் காரணம். ஆரம்பத்தில் அட்டயா பட்டயா விளையாட்டு பிரபலமாகாததால், விளையாட வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்த எங்கள் உறவினர்கள், இன்று நாங்கள் சாதிப்பதைப் பார்த்துவிட்டு பெருமையோடு ஊக்கப்படுத்து கிறார்கள்" என்று கூறுகிறார், துணை கேப்டன் நித்யப்பிரகாஷ்.
தமிழக அணிக்காக விளையாடும் எங்கள் 12 பேரில் இருவரைத்தவிர மற்ற அனைவரும் படித்து வருகிறோம். மஹாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி அணியினர்தான் தேசியளவில் நடக்கும் அட்டயா பட்டயா போட்டிகளில் அதிகமுறை தங்கம் வென்றுள்ளனர். அம்மாநில முதல்வர்களும் வீரர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசுத் தொகையும்,அரசு வேலையையும் வழங்கி ஊக்கப்படுத்தி வருவதோடு, விளையாடச் சென்று வருவதற்கான ட்ராவல் செலவுகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்திற்கு பதக்கங்கள் வென்று பெருமை சேர்க்கும் எங்களுக்கு இதுவரை அரசின் சலுகைகள் எதுவுமே கிடைக்கல. இந்த விளையாட்டுக்குனு பயிற்சி செய்யக்கூட சொந்தமா மைதானம் இல்லைங்கறதால மத்த விளையாட்டுகளுக்கு பயிற்சி எடுக்கும் மைதானங்களிலேயே ஃப்ராக்டிஸ் பண்ணறோம். நாங்க எல்லோருமே நடுத்தர ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. எங்க அப்பா, அம்மா உழைக்கறதுல பாதி, வெளிமாநிலப் போட்டிகளுக்குப் போயிட்டு வர்றதுக்கே செலவாகிடுது. அட்டயா பட்டயா விளையாட்டை ஆர்வமா கத்துக்கிட்டதால இதுவரைக்கும் எங்களுக்கு ஒரேயொரு நன்மைதான் நடந்திருக்கு. டீம்ல இருக்க 5 பேரு, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல அண்ணா யுனிவர்சிட்டியில் என்ஜினீயரிங் படிச்சிக்கிட்டு வர்றாங்க. இதேமாதிரி அட்டயா பட்டயா தமிழகப் பெண்கள் அணியிலும் 3 வீராங்கனைகள் என்ஜினீயரிங் படிக்கறாங்க. படிப்புச் சலுகையைத் தவிர வேற எந்த வாய்ப்புகளும் இல்லைங்கறது வருத்தமா இருக்கு. பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பூடான், மாலத்தீவு, தாய்லாந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் தெற்காசிய அட்டயா பட்டயா போட்டியில் இந்தியா சார்பாக கலந்துக்கப்போறது பெருமையா இருக்கு. இந்த வாய்ப்பை திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமா நினைச்சு சரியா பயன்படுத்திக்குவோம். தமிழக அரசு ஊக்கப்படுத்தும் விதமாக சலுகைகள் கொடுத்தால், மேலும் சிறப்பாக விளையாடி, இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வெற்றிகளைக் குவிப்போம்" என்று கூறுகிறார், மற்றொரு வீரரான சர்வேஸ்வரன்.
|