|
அகற்ற முடியாத மச்சம்
ஆத்மார்த்தி
‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்... இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் சிரிப்பு வரும். இன்று நேற்றில்லை. எப்போது கேட்டாலும். ஒரு தத்துவப் பாடல் கேட்கையில் சிரிப்பு வரலாமா? எல்லாரும் எல்லாமும் பெற்றுவிட்ட மறு நாள் இந்த உலகம் தூக்கத்திலேயே கண்ணை மூடிவிடாதா? நிராசைகளும் ஏக்கங்களும் இல்லாத ஒரு வாழ்க்கை கற்பனை செய்யக்கூட முடியாத ஒன்றுதானே? எல்லாவற்றையும் விட்டொழித்து போதி மரத்தின் அடியில் சென்றமரும் புத்தருக்குக்கூட 0 சதவிகித வட்டியில், ‘பெர்சனல் லோன் வேண்டுமா?’ என்று இம்சிக்க ஒரு இன்கமிங் கால் வந்தே தீருமல்லவா? தவமாவது வரமாவது?
பெரியார் நிலையம் ஒருவகையில் சோம்பேறி மடம். மதுரை நகரம் தன் முகத்தை அடிக்கடி அலம்பித் துடைத்துக்கொண்டாலும்கூட பெரியார் நிலையம் அப்படியே இருக்கிறது. இனியும் இருக்கும். ஒவ்வொரு நகரத்திலும் அகற்ற முடியாத மச்சம் போன்ற பகுதிகள் இருந்துவிடுகின்றன. பெரியார் நிலையம் என் போன்ற உள்ளூர் நாடோடிகளுக்கு ஓர் ஆலயம். பள்ளிக் காலம் துவங்கி, நேற்றைக்குவரை எங்கே தொலையலாம் என்ற ஆலோசனையைத் தனியாகவும் கூட்டாகவும் நேர்த்துகிற இடம் அதுதான். முன்பு அங்கே ஒரு சலூன் இருந்தது. அதன் உரிமையாளர் பேர் நினைவில் இல்லை.உள்புறக் கடைகள் வரிசையாக, இப்போது டிராவல் ஏஜெண்டுகளால் கைக்கொள்ளப்பட்டு விட்டன. முன்பு பஸ் நிலையத்தின் உள்ளே இருந்து வெளியேற, அங்கே ஒரு பாதை இருக்கும். அதை ஒட்டினாற்போல ஒரு சலூன். நான் பேப்பர் படிக்க அங்கே அமர்வேன். மெல்ல அந்தக் கடை என் உள்ளிட்ட சிலரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. சக்தி என்றொரு சின்னப் பையன். என்னை விட ஓர் ஐந்து வயது இளையவனாக இருப்பான். எப்போதும் சிரித்த முகத்தோடு வேலை பார்ப்பான். வருகிற அன்னியரை கஸ்டமராக மாற்றிவிடும் அசகாயன். அதன் ஓனர் அந்தக் கடைக்கு அவ்வளவாக வரமாட்டார். எங்கள் ராஜாங்கம்தான்.
சந்தியாகுவின் வேலை தினமும் அதிகாலை பேப்பர் போடுவது. நானோ கல்லூரியை முடித்துவிட்டு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என பாதி நாள் கிளாசுக்குப் போகாமல், பெரியாரோடு நின்றுகொள்வேன். வேறென்ன வேலை? சினிமாவுக்குப் போகாவிட்டால் எனக்குத் தலையெல்லாம் அரிக்குமே? தினம் குறைந்தது ஒரு சினிமா. சில நாள் ரெண்டு. பண்டிகை காலங்களில் மூன்றுகூட. எப்போதாவதுதான் வீட்டுக்குத் திரும்பிப் போகும் ஞாபகமும் ஆசையும் வரும். பன்னீர் பசுமலைக்காரன். என்னோடே பஸ்ஸில் வருபவன். எப்படியோ பழக்கமாகி, அந்த சலூனில் தஞ்சமானோம். பன்னீரின் தலைமுடி ஸ்டைலாக இருக்கும். எப்போதும் தலைசீவிக்கொண்டே இருப்பான். சந்தியாகு தலையும் முகமும் டி.ராஜேந்தர் ஸ்டைலில் இருக்கும். இரண்டு அடைப்புக்குறிகளுக்கு மத்தியில் என்னை எழுதிக் கொள்ளலாம்போல நானும். சக்தி எங்கள் மூவரையும் நேசித்தான்.
ஒரு வெள்ளிக்கிழமை. மதியம் என்ன படத்துக்குப் போகலாம் என நானும் சந்தியாவும் டிஸ்கஸ் செய்து, ‘காதலுக்கு மரியாதை’ சினிப்ரியாவுக்குச் செல்லலாம் என முடிவானது. என்றைக்கும் இல்லாத ஆச்சரியமாக சக்தி, ‘நானும் வர்றேன் அண்ணே!’ என்றான். சரி, கிளம்பலாம் எனக் கடையை அடைக்கச் செல்கையில், இரண்டு பேர் வந்தார்கள். ‘ஷேவிங் செய்ய வேண்டும்’ என்று ஒருவர், சலூன் நாற்காலியில் அமர...இன்னொருவர், என் பக்கத்து சேரில் அமர்ந்தார். அந்தக் கடைக்குள் புகை பிடிக்க அனுமதி இல்லாததால் சந்தியா, கடைக்கு வெளியே சென்றான். பன்னீர் இன்னொரு சேரில் அமர்ந்தவாக்கில் தூங்கிக் கொண்டிருந்தான்.
என் பக்கத்தில் அமர்ந்தவருக்கு ஐம்பது வயதிருக்கலாம்.
‘தம்பி, என்ன செய்றீங்க? படிக்கிறீங்களா?’என்றார்.
நான், ‘காலேஜ் முடிச்சிட்டேங்க... கம்ப்யூட்டர் படிக்கிறேன்’ என்றேன்.
பன்னீர் என் குரல் கேட்டு விழித்திருந்தான்.
‘உங்க பேரு என்ன தம்பி?’ என்றார் பன்னீரிடம்.
அவன் உடனே, ‘பன்னீர் செல்வமுங்க...’ என்றான்.
பன்னீரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர், ஷேவிங் செய்துகொண்டிருந்த தன் சகாவிடம் கேட்கிறாற்போல், ‘ஏன் மாரி...இன்னிக்கு இருந்தா, நம்ம சம்முவத்தைப் பார்த்தாப்ல இருக்குதில்ல?’ என்றார்.
கண்ணாடியில் முன்புறம் பார்த்தவாறே அதில் தெரிந்த பன்னீரைப் பார்த்த அவர், தன் வெண்குழம்பு முகத்தால் அதை ஆமோதித்தவாறே,‘ஆமாங்க மாமா... நாங்கூட கடைக்குள்ளாற நுழையிறப்பவே யோசிச்சேன்’ என்றார்.
எனக்கு அவர்கள் என்ன சொல்லிக்கொள்கிறார்கள் என்பது புரிந்தும் புரியாமலும் இருந்தது. சந்தியாகு புகைத்துவிட்டு நுழைந்தவன் என்னிடம் மணிக்கட்டைக் காட்டி, ‘நேரமாயிட்டது... வாடா கிளம்பலாம்’ என்றான். நான், ‘பொறு, சக்தியும் வரட்டும்’ என்றேன்.
தனது ஷேவிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு கீழே இறங்கியவர், தன் கன்னத்தைத் துண்டால் ஒற்றியபடியே கண்ணாடியில் இருந்து கவனத்தை மீண்டும் பன்னீரின் முகத்தில் நிலைத்துவிட்டு,
‘தம்பி, பைக் ஓட்டுவீயளா?’ என்றார்.
சத்தியமா அர்த்தம் புரியாமலே, ‘ம்ம்...ஓட்டுவேங்க’ என்றான் பன்னீர்.
‘பார்த்து சூதானமா ஓட்டுங்க...இளரத்தம்...சர்ரு புர்ருனு ஓட்டச்சொல்லும்...அப்பிடி எல்லாம் ஓட்டக் கூடாது...என்னா..? நிதானந்தான் முக்கியம்’ என்றவர் குரல் கம்மிற்று.
சந்தியாகு சக்தியை, ‘சீக்கிரம் வா...’ என அபிநயிக்க, அவன் மிச்சப் பணத்தை எடுத்து நீட்டினான். ரெண்டு பேரும் வெளியேறினார்கள். அதுவரைக்கும் அமைதி காத்த நாங்கள், எங்களுக்குள் பேசிக்கொண்டோம்...
‘பன்னீரு, சீக்கிரம் கௌம்பு. சினிப்ரியால ரெண்டு இருவதுக்கே படத்தப் போட்டுருவாங்கியடா. அரைமணி நேரம்தான் இருக்கு’ என அங்கலாய்த்தான் சந்தியாகு.வாசலுக்கு வந்தோம். பக்கத்து டீக்கடையில் சலூனிலிருந்து சென்றவர்கள், டீ குடித்தபடி சிநேகபாவமாய் சிரித்தனர்.
பாவனையால் அந்த மைத்துனர் கேட்டார், ‘டீ சாப்டறீங்களா?‘ என்று. நானும், ‘வேண்டாம்‘ எனத் தலையசைவாலே பதில் சொன்னேன். அந்த மூத்தவர், பாதி டீயை அப்படியே கடைமேடையில் வைத்தார். பன்னீரைப் பார்த்து, ‘அச்சு அசலா உன்னாட்டமே எனக்கு சம்முவம்னு ஒரு மவன் இருந்தான். பதினெட்டு வயசு. ராணுவத்துக்குப் போவணும்னு துடியா துடிச்சான். ஒத்தப் பயலை ராணுவத்துக்கு அனுப்ப மாட்டோம்னு அவன் ஆத்தாக்காரி வீம்பா மறுத்திட்டா. ஒரு வருஷத்துக்கு முன்னாடி, பைக்கில போவும்போது ஒரு லாரியை ஓவர்டேக் பண்ணப் பார்த்தப்போ...’ அவரால் அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. தன் வயது, பாலினம், சூழல் எதையும் பொருட்படுத்தாமல் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தார். உடனிருந்த மைத்துனர் அவரைத் தேற்ற, வார்த்தை இல்லாமல் தன் தொடுதல் மூலமாகவே அதனைச் செய்ய விழைந்தார்.
நானும் சந்தியாகுவும் உறைந்தோம். பன்னீர் லேசாகத் தளர்ந்தான். சற்று நேரத்துக்குமுன் யாரோவாக நுழைந்து, விதூஷகர்களைப்போல் எங்கள் கண்களுக்குத் தெரிந்த அந்த இரண்டு பேரும் இப்போது வேறு பிம்பமாய்த் தெரியலானார்கள்.
அந்த மைத்துனர், தன் கையில் அதுவரை மடித்து வைத்திருந்த பெரிய காகிதத்தை விரித்தார்.
‘இவரு என் மச்சான். நாளக்கி சம்முகத்துக்கு முதல் வருஷ நினைவு நாள். இந்த போஸ்டரை டெலிவரி எடுக்க வந்தோம். இதுதான் சம்முகம் என, தன் கையில் இருந்த போஸ்டரில் இரண்டு புறமும் கண்ணீர் ததும்பும் விழிகளின் படத்திற்கு நடுவே, இனி வரவே இயலாத சண்முகம் எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். பன்னீரின் சாடை மிக லேசாய் அந்தக் கறுப்பு வெள்ளைப் படத்தில் தோன்றியது.
எங்களுக்கு என்ன பேசுவதென்று நிசமாகவே தெரியவில்லை.
‘சரி, நம்ம விஷயம் பசங்களுக்கு எதுக்கு? என்றபடி அந்த மனிதர் செயற்கையாய் வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு பன்னீரின் தலையை வாஞ்சையோடு தடவியவர்,
‘சூதானமா போய்ட்டு வாங்கப்பூ...எந்த வண்டியையும் முந்த வேணாம்...என்ன? என்றவர், ஒரு கணம் வெறித்து வானத்தைப் பார்த்தார்.கலையும் மேகங்களுக்கு இடையே சண்முகத்தைத் தேடியவர் போல சன்னமான குரலில்...
‘என்ன ஒண்ணு...அவன் விரும்புன மாதிரியே மிலிட்டரிக்கு அனுப்பிருக்கலாம்னு இப்பத் தோணுது... நாட்டுக்குக் குடுத்திருந்தாக்கூட ஆறியிருக்கும். ரோட்டுக்குக் குடுத்ததுதான் ஆறவேயில்லை’ என்றார்.
மதுரையை ஒட்டியிருக்கிற ஏதோ ஓர் ஊருக்கான கூட்டமான பேருந்தில் அவர்கள் இருவரும் ஏறிக்கொண்டார்கள்.
(சித்திரம் பேசும்)
|