|
விளையாட்டுப் பிள்ளைகளுக்கு பி.இ., படிக்கும் வாய்ப்பு!
மோ. கணேசன்
கடந்த 2011 -வரை என்ஜினீயரிங் படிப்பிற்கான ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடந்தாண்டு அதன் எண்ணிக்கை நூறிலிருந்து ஐநூறாக உயர்த்தப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் பி.இ. படிப்புகளில் இடம் பிடிக்க ஒரு சில யோசனைகள் பள்ளிகள் தங்கள் ‘சந்தை மதிப்பை’ அதிகரித்துக்கொள்ள மாணவர்களை +2 தேர்வில் கணிசமான மதிப்பெண் பெற கசக்கிப் பிழிவதாக மாணவர்களும், பெற்றோர்களும் ஏன் ஆசிரியர்களும்கூடப் புலம்புவது வழக்கமாகிவிட்டது. அதிக மதிப்பெண்கள் பெற்று, பொறியியல் மருத்துவக் கல்லூரிகளுக்குப் போவது ஒரு வழி. விளையாடிக்கொண்டே போவது இன்னொரு வழி. அதுதான் ஸ்போர்ட்ஸ் கோட்டா.
அது என்ன ஸ்போர்ட்ஸ் கோட்டா? விளையாட்டுத் துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கென பி.இ. படிப்பில் 500 இடங்கள் இருக்கின்றன. மருத்துவப் படிப்பில் 3 இடங்கள் இருக்கின்றன. அரசு பாலிடெக்னிக்குகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது.
கடந்த 2011 -வரை என்ஜினீயரிங் படிப்பிற்கான ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடந்தாண்டு அதன் எண்ணிக்கை நூறிலிருந்து ஐநூறாக உயர்த்தப்பட்டது.
சரி, எந்தெந்த விளையாட்டுகளில் சாதனை செய்திருக்க வேண்டும்? இது குறித்த 51 விளையாட்டுகளின் பட்டியல் ஒன்றைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் தடகளம், சதுரங்கம், நீச்சல், கிரிக்கெட் எனப் பல்வேறு பிரபல விளையாட்டுகள் அடங்கியிருக்கின்றன.
அவை தவிர அதிகம் அறியப்படாத வேறு சில விளையாட்டுகளும் அதில் இருக்கின்றன. அதிகம் பேருக்குத் தெரியாது என்பதால், அதில் போட்டி குறைவு. அந்த விளையாட்டுக்களில் மாணவர்களைப் பயிற்றுவித்தால் அவர்கள் சாதனைகள் புரியவும், அதன் மூலம் தொழிற்கல்வி நிலையங்களுக்குள் நுழையவும் வாய்ப்பு அதிகம். அந்த விளையாட்டுக்கள்?
1. அத்யா பத்யா (Atya Patya)
பண்டைத் தமிழர் விளையாட்டான கிளித்தட்டைப் போன்றது அத்யா பத்யா. கோ கோ விளையாட்டும், கபடி விளையாட்டும் இணைந்த கலவையே இந்த அத்யா பத்யா. இது ஒரு குழு விளையாட்டு. ஒரு அணியில் 12 பேர் இருப்பர். களத்தில் 9 பேர் மட்டுமே விளையாட வேண்டும். 3 பேர் மாற்று வீரர்கள்.
நீள் வரிசையில் 9 ஜோடி கட்டங்கள். இதில் ஒவ்வொரு கட்டத்தின் குறுக்கிலும், நெடுக்கிலும் பாத்தி போன்று கட்டங்கள் வரைந்திருப்பார்கள். நெடு பாத்தியில் ஒரு தடுப்பாளர். ஒரு ஜோடி கட்டங்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் எட்டுக் குறுக்குப் பாத்தியில், எட்டுத் தடுப்பாளரும் நிற்க வேண்டும். இந்த 9 பேரிடமும் சிக்காமல், எதிரணியினர் ஒவ்வொரு கட்டங்களாகத் தாண்டி மறு எல்லையை, 7 நிமிடங்களுக்குள் அடைந்துவிட வேண்டும். இதற்குப் புள்ளிகள் உண்டு. முதல் அணி 7 நிமிடங்களுக்குள் எவ்வளவு புள்ளிகள் எடுக்கிறதோ, அவ்வளவு புள்ளிகளை மறு அணி எடுக்க வேண்டும். இல்லையேல், தோற்றதாக அறிவிக்கப்படும். தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்ற விளையாட்டு.
கடந்த ஆண்டு புதுச்சேரி அரசுப் பணியில், அத்யா பத்யா வீரர்கள் 100 பேருக்கு ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் இடம் கிடைத்திருக்கிறது.
2. கார்ஃப் பால் (Korf Ball)
பேஸ்கட் பால் விளையாட்டின் மற்றொரு வடிவம்தான் இந்த கார்ஃப் பால். டச்சு நாட்டில் உருவான விளையாட்டு, இன்று உலகம் முழுவதும் விளையாடப்பட்டு வருகிறது. ஓர் அணியில் 8 பேர். இதில் 4 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். தேவைப்பட்டால் அணியின் பயிற்சியாளரும் மாற்று வீரராக களமிறங்கிக் கொள்ளலாம்.
பேஸ்கட் பால் வலை போன்று இல்லாமல், உயரமான கம்பம் ஒன்றில் இதற்கான பேஸ்கட் அமைக்கப்பட்டிருக்கும். இதில் பந்தைத் தூக்கிப் போடவேண்டும். இதை எதிரணியினர் தடுத்து ஆட வேண்டும். 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த ஆட்டத்தின் இடையில் 10 நிமிடங்கள் ஓய்வு உண்டு. இன்டோர் கேமாகவும், அவுட்டோர் கேமாகவும் இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது.
3. ரோலர் ஸ்கேட்டிங் (Roller Skatting)
ஓவல் வடிவில், வழுவழு தரையில் காலில் சக்கரம் கட்டியபடி ஓடி விளையாடும் இன்டோர் கேம் இது. இதில் டைம் ரேஸ், குரூப் ரேஸ், ரோடு ரேஸ் என மூன்று பிரிவுகள் உள்ளன. மேலும் ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங் என்ற ஒரு பிரிவும் உண்டு. நடனமாடிக் கொண்டே ஸ்கேட்டிங் செய்வதுதான் இந்த ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங்.
டைம் ரேஸ் பிரிவில் 100 மீட்டர் தூரத்தை மிகக்குறைவான நேரத்தில் ஓடிக் கடக்க வேண்டும். குரூப் ரேஸ் பிரிவில் 100 மீ. அல்லது 200 மீ. தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும். ரோடு ரேஸ் என்பதில் 5 கி.மீ., 10 கி.மீ. எனப் போட்டிக்குத் தகுந்தாற்போல் நீளம் இருக்கும். யார் விரைவாக ஓடிக் கடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.
4. செபாக் டாக்ராவ் (Sepak Takraw)
இன்டோர் கேம்களில் ஒன்று. மலேசியாவில் உருவான குழு விளையாட்டு இது. 15 பேர் கொண்ட அணியில் 9 பேர் களத்தில், மூன்று குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு குழுவும் எதிரணியின் குழுவோடு விளையாடுவர். உடலை வில்லாக வளைக்கும் திறன் படைத்தவர்கள் இவ்விளையாட்டில் ஜொலிக்கலாம். வாலிபால் விளையாட்டைப் போன்றது இது. ஆனால், ஒரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், கைகள் தவிர இப்பந்தை உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் தடுத்து ஆடலாம். இந்தப் போட்டிக்கான பந்து, மூங்கில்களால் ஆனது. தற்போது, பைபரினால் ஆன பந்தால் விளையாடி வருகிறார்கள். களத்தில் மூன்று பேர் விளையாடுவர். எதிரணியிலும் மூன்று பேர் விளையாடுவர். இது தற்போது தமிழகத்திலும் பிரபலமாகி வருகிறது.
5. சிலம்பம் (Silmbam)
சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு. கம்பைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை இது . சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பினால் தொடுதல் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. சிலம்பாட்டத்தைக் கற்றுக்கொள்ளக் குறைந்தது ஆறு மாத காலம் தேவைப்படும்.
6. டேக்வோண்டா (Tae Kwon Do)
டேக்வோண்டா என்பது கொரியாவில் அறிமுகமான ஒரு தற்காப்புக்கலை. கொரிய மொழியில் Tae என்றால், உதை; Kwon என்றால், கைகளால் தாக்குதல்; Do என்றால், கலை. டேக்வோண்டோ கலையில், கால்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இக்கலையில் எதிரி தன்னை நெருங்கும்போது கால்களைப் பயன்படுத்தி, எதிரியைத் தூரத்திலேயே நிறுத்தி வைத்துத் தாக்கிச் செயலிழக்கச் செய்ய முடியும்.
7. வூசூ (Wushu)
கை, கம்பு, கத்தி ஆகியவற்றைக்கொண்டு கற்றுக்கொடுக்கப்படும் தற்காப்புக் கலை இது. சீனாவில் உருவானது இத்தற்காப்புக் கலை. இந்த விளையாட்டில் வயதுக்கேற்றாற்போல், தற்காப்பு ஆயதங்களின் நீளம் வேறுபடும். சிலம்பு, ஈட்டி, குறுவாள், நடுத்தரமான வாள், நீளமான வாள் என ஆயுதங்கள் வேறுபடும்.
இதற்கென தனிப்பட்ட பயிற்சிமுறைகளும், அசைவுகளும் உள்ளன. 1.20 வினாடிகளில் தங்களது தனித்திறனை முறைப்படி காட்ட வேண்டும். இது ஒரு வகை. எதிராளியுடன் 2 நிமிட நேரம் சண்டையிட வேண்டும். இந்தச் சண்டையில், தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்கேற்றாற்போல் புள்ளிகள் வழங்கப்படும்.
வூசூ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களில் 2 பேருக்கு மருத்துவப் படிப்பிலும், 10 பேருக்கு என்ஜினீயரிங் படிப்பிலும் இடம் கிடைத்திருக்கிறது.
8. வாள் சண்டை (Fencing)
இன்டோர் கேம்களில் மிகவும் காஸ்ட்லியான விளையாட்டு இது. எலெக்ட்ரிக் வாள் கொண்டுதான் இப்போட்டியை விளையாட வேண்டும். வாள் சண்டையில் ‘எப்பெ’, ‘பாயில்’, ‘சேபர்’ என மூன்று விதமான போட்டிகள் உள்ளன. ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் உண்டு. உடலை நாணலைப்போல் வளைப்பவர்களும், கண் பார்வை தீர்க்கமாக இருப்பவர்களும் மட்டுமே இப்போட்டியில் சாதிக்க முடியும்.
9. கராத்தே டூ (Karate - Do)
தற்காப்புக் கலைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்த கராத்தே டூ எனப்படுகின்ற கராத்தே. எவ்வித ஆயுதமும் இன்றி, வெறும் கைகளால் எதிரியின் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்வதும், தாக்குதலும் ஆகும். குத்துதல், உதைத்தல், முழங்கால் மற்றும் முழங்கைத் தாக்குதல்கள், திறந்த கை உத்திகள் என்பன இக்கலையில் பயன்படுகின்றன. இறுகப் பிடித்தல், பூட்டுப் போடுதல், கட்டுப்படுத்துதல், எறிதல், முக்கியமான இடங்களில் தாக்குதல் என்பனவும் சில கராத்தே பாணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் குத்துதல், அடித்தல், உதைத்தல் என ஒவ்வொரு தாக்குதல் முறைக்கும் ஏற்றவாறு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. தனித்திறன், எதிராளியுடன் சண்டை என இரு பிரிவுகளில் இதற்கென போட்டி நடத்தப்படுகிறது. பிளாக் பெல்ட் வாங்கியபின் அதில் இன்னும் 10 தேர்வுகள் உள்ளன. பிளாக் பெல்ட்-1, பிளாக் பெல்ட் -2 என பிளாக் பெல்ட் 10 வரை இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் இந்த விளையாட்டுகளையும் மாணவர்களுக்குக் கற்றுத் தரலாமே?
|