|
பிளஸ் டூவுக்குப் பின் ஃபைன் ஆர்ட்ஸ் படிப்புகள்
ஓவியம், சிற்பம், பீங்கான் வடிவமைப்பு போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பள்ளியிறுதி வகுப்பு வரை, இதுபோன்ற கலைகளை பகுதி நேரமாக மட்டுமே மேற்கொண்டு வந்த நீங்கள், முழுமையாக அதில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறீர்களா? ஏற்கெனவே உங்களிடம் மறைந்துள்ள திறமையை, மேலும் பட்டை தீட்டிக்கொள்ள விருப்பமுள்ளவரா நீங்கள்? அப்படியானால், உங்களுக்கு ஏற்றவை, கவின் கலைப் படிப்புகள்தான்.
ஓவியம், பெயிண்டிங், ஆடை வடிவமைப்பு போன்ற நுண் கலைப் படிப்புகளை கற்றுத் தர தனியார் நிறுவனங்கள் பல இருந்தாலும், அரசுக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படும் இத்தகைய படிப்புகளுக்கு மதிப்பும், மரியாதையும் தனிதான்.
சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகளில் மேற்கூறிய படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின்கீழ் இக்கல்லூரிகள் இயங்குகின்றன.
பெயிண்டிங், விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன், சிற்பக்கலை, இன்டஸ்ட்ரியல் டிசைன் இன் டெக்ஸ்டைல், இன்டஸ்ட்ரியல் டிசைன் இன் செராமிக், பிரிண்ட் மேக்கிங் என்று ஆறு பிரிவுகளில் இளநிலைப் பட்டப் படிப்புகள் (பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் (BFA) ) இங்கு கற்றுத் தரப்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கான படிப்புகள் இவை. முதல் ஆண்டில் அனைத்துப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் பொதுவாக பாடங்கள் இருக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளில் நிபுணத்துவம் பெறும் வகையில் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் பிரிண்ட் மேக்கிங் நீங்கலாக, இதர படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
‘பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பிரிவை எடுத்துப் படித்தவர்களும், இப்படிப்புகளில் சேர முடியும். 80 சதவீதம் பயிற்சி, 20 சதவீதம் வகுப்பறைப் பாடம் என்ற அடிப்படையில் இங்கு கற்பிக்கப்படுகிறது. ஸ்டூடியோ பிராக்டீஸ், வெளியிடங்களில் கற்றுக்கொள்வது, தொழிற்சாலைகளில் கற்றுக்கொள்வது என்ற முறைப்படி பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் படைப்பாக்கத் திறமைக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மரபுக்கலை, நவீனக் கலை மற்றும் வாழ்வியல் கலை தொடர்பான கலைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன” என்கிறார், சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி முதல்வர் வெ.சந்திரசேகரன்.
இளநிலைப் பட்டப் படிப்பில் சேர, பிளஸ் டூ முடித்திருப்பதுடன், கவின் கலைக் கல்லூரி நடத்தும் நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் ஆப்டிட்டியூட் தேர்வில், பொது அறிவு, தியரி, வரைபடம், வாட்டர் கலர், உயிர் மாதிரி ஓவியங்கள் என்று அனைத்தும் இடம்பெற்றிருக்கும். காலை முதல் மாலை வரை நடைபெறும் இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் குறிப்பிட்ட படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
பெயிண்டிங் பிரிவில் இந்தியக் கலை மற்றும் மேற்கத்திய கலைப் படிப்புகள், கலைகளின் வரலாறு, வண்ணங்களின் உபயோகம், வகைகள், மினியேச்சர் வகைகள் போன்றவை பற்றி கற்றுத்தரப்படுகிறது. விஷுவல் கம்யூனிக்கேஷன் பிரிவில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பிரிண்ட் மீடியா அட்வர்டைசிங், விஷுவல் தொழில்நுட்பம், விளம்பரக் கலை, நவீன விஷுவல் ஆர்ட் தகவல் தொடர்பு, புராடக்ட் அண்ட் பேக்கேஜிங் டிசைன் போன்றவை சொல்லித்தரப்படுகின்றன. சிற்பப் பிரிவில் இந்தியக் கலை, சிற்பத்திற்காகப் பயன்படுத்தப்படும் பொருள்களின் வகைகள்,கம்ப்யூட்டர் உபயோகம், மோல்டிங் போன்றவை பற்றியும் கற்றுத் தரப்படுகின்றன. டெக்ஸ்டைல் இன்டஸ்ட்ரியல் டிசைன் பிரிவில், நூல்களின் வகைகள், வடிவமைப்பின் வகைகள், நெய்தல் பயிற்சிகள், தறி வகைகள், பத்திக் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பற்றியும் கற்றுத் தரப்படுகின்றன. செராமிக் இன்டஸ்ட்ரியல் டிசைன் பிரிவில், செராமிக் டிசைனின் வரலாறு, பானைகள் வடிவமைத்தல், டிசைன் செய்தல், டெரக்கோட்டா உபகரணங்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பிரிண்ட் மேக்கிங் பிரிவில், இந்திய மற்றும் மேற்கத்திய கலைப் பயிற்சிகள், உபயோகிக்கப்படும் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
“கவின் கலைப் படிப்புகள் அனைத்தும் படைப்பாக்கத்திறனைத் தூண்டும் படிப்புகளாகவே இருப்பதால், வகுப்பறையைத் தாண்டி மாணவர்களை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று, பல்வேறு விஷயங்களையும் அவர்கள் கற்றுணர வாய்ப்புக் கொடுக்கிறோம். நம் நாட்டின் கலை, கலாசார விஷயங்களை எடுத்துக்காட்டும் இடங்கள், அரசு அருங்காட்சியகம், கலைக்கூடங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். இளநிலைப் பட்டப் படிப்பின் முதல் ஆண்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறோம். இரண்டாம் ஆண்டில் தென்னிந்தியாவிலுள்ள சரித்திரப் புகழ்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். மூன்றாம் ஆண்டில் மத்திய இந்தியாவுக்கும், இறுதி ஆண்டில் வட இந்தியாவுக்கும் சுற்றுலா அழைத்துச் செல்கிறோம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்களுக்கு மாணவர்களை வெளியிட சுற்றுலாக்களுக்கு அழைத்துப் போவதால், அவர்களின் படைப்பாக்கத்திறன் பட்டை தீட்டப்படுகிறது. இந்தச் சுற்றுலாவுக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. இத்தொகையில் மாணவர்களுக்கான ரயில் பயண சலுகைக் கட்டணம், சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் பயணக் கட்டணம் மற்றும் 21 நாட்களுக்கான தினப்படி ஆகியவை வழங்கப்படுகின்றன” என்கிறார் சந்திரசேகரன்.
கலை பயிலும் மாணவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகக்கூடாது என்ற காரணத்திற்காக, இக்கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், மாணவர் ஒருவருக்கு ரூ.1,000 மதிப்புள்ள வரைபொருட்களை தமிழக அரசு வழங்குகிறது. மாணவர்களின் செயல்பாடும், கல்லூரியின் செயல்பாடும் மக்களைச் சென்றடையவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சி நடத்த தமிழக அரசு ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. இக்கண்காட்சியில் கல்லூரியில் படிக்கும் அனைத்துத் துறை மாணவர்களின் கலைப் படைப்புகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
“நுண்கலைப் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. திரைப்படத் துறை, ஆடை வடிவமைப்பு, நகை வடிவமைப்பு, காலணி வடிவமைப்பு, என்டர்டெயின்மெண்ட் மேனேஜ்மெண்ட், வெப் டிசைனிங், ஃபேஷன் டிசைனிங், விளம்பரத் துறை, பத்திரிகைத் துறை, மருத்துவக் கல்வித் துறை, செராமிக் தொழில் துறை, படிமக்கலைத் துறை, கட்டிடக் கலைத் துறை, ஒளிப்படத்துறை, மல்டிமீடியா, அனிமேஷன், இன்டீரியர் டிசைன் என்று நிறைய துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பு படித்தவர்கள், உள்நாடு மட்டுமன்றி, வெளிநாட்டிலும் தங்கள் திறமைகளைக் காட்டி பிரகாசிக்க முடியும்” என்று பட்டியலிடுகிறார், முதல்வர் சந்திரசேகரன்.
கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைப் படிப்பு
“சென்னை மாமல்லபுரத்தில் இயங்கி வருகிறது அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி. மரபுக் கட்டடக் கலையில் பி.டெக். படிப்பு இங்குள்ளது. இதில் கோயில் சிற்பங்கள், நினைவாலயம், அலங்கார வளைவுகள், கட்டடக் கலை குறித்து கற்பிக்கப்படுகின்றன. பிளஸ் டூ வகுப்பில் கணிதப் பாடத்தை எடுத்துப் படித்தவர்கள் இப்படிப்பில் சேர முடியும். மரபு சிற்பக் கலை தொடர்பான பி.எஃப்.ஏ. படிப்பில் சேர பிளஸ் டூ முடித்திருக்கவேண்டும். இப்படிப்பில் கற்சிற்பம், மரபு சிற்பக் கலை, உலோக சிற்பக் கலை, சுதை சிற்பக் கலை போன்ற ஏதேனும் ஒரு துறை படிப்பை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம். மரபு வரைகலை மற்றும் வண்ணம் தொடர்பான பி.எஃப்.ஏ. படிப்பும் இங்கு கற்றுத் தரப்படுகின்றன. இதில் கோட்டோவியம், பெயிண்டிங், மரபு பெயிண்டிங், இலக்கியம், சிற்பக் கலை சார்ந்த வரைகலை போன்றவையும் சொல்லித் தரப்படுகின்றன. பிளஸ் டூ படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவை அனைத்துமே நான்கு ஆண்டு காலப் படிப்புகள்” என்கிறார், இக்கல்லூரி முதல்வர். மா.குணசேகரன்.
“கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைப் படிப்பைப் படித்தவர்களுக்கு தொல்பொருள் ஆய்வுத் துறை, இந்து சமய அறநிலையத் துறை போன்ற துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அத்துடன் சுயமாகவும் சிற்பக் கூடங்களை நிறுவி ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்க முடியும். சிற்பக் கலைப் படிப்பை படித்தவர்களுக்கு உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன” என்கிறார் அவர்.
|