|
கானல்நீராகுமோ காவிரித் தீர்ப்பு?
ஆ. பழனியப்பன்
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதும், அது தமிழகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், தேசிய தண்ணீர்க் கொள்கை-2012ஐ சட்டவடிவமாக்கும் முயற்சியில் மத்திய அரசு முனைந்திருக்கும் சூழலில், இந்த வெற்றி இன்னும் எத்தனை நாட்களுக்கு என்ற கேள்வி எழுகிறது.
தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதை ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக வழங்குவது அரசின் கடமை என்ற கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் வண்ணம், ‘தேசிய தண்ணீர்க் கொள்கை’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீரை முழுக்க முழுக்க ஒரு வியாபாரப் பண்டமாகவே பார்க்கிறது இக்கொள்கை. இது குறித்து, ‘புதிய தலைமுறை’யில் விரிவான கட்டுரை ஒன்றை ஏற்கெனவே எழுதியுள்ளோம் (பார்க்க: 08 மார்ச் 2012 ‘புதிய தலைமுறை’).
தண்ணீரை வணிகப் பொருளாக ஆக்குவது மட்டுமல்ல, நாட்டின் நலனுக்கு எதிரான பல அம்சங்களும் தேசிய தண்ணீர்க் கொள்கை 2010-இல் இடம்பெற்றுள்ளன என்று சில வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிற, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைக்கிற அம்சங்கள் இக்கொள்கையில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
இந்தக் கொள்கையால் அதிகம் பாதிக்கப்படப்போகும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால், இதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்களோ , சமூக இயக்கங்களோ போதுமான அளவு அக்கறை காட்டவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்.
மாநில அரசின் உரிமைகளில் புதிய தண்ணீர்க் கொள்கை எப்படியெல்லாம் தலையிடுகிறது?
மாநில உரிமைகளில் தலையீடு
மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் அல்லது ஆற்றுப்பள்ளத்தாக்குகள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்த அல்லது சட்டங்களை உருவாக்க மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைத் தவிர தண்ணீர் தொடர்பான மற்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள இரண்டாவது பட்டியலில் தண்ணீர் மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசனம், கால்வாய்கள், நிலத்தடி நீர், கழிவுநீர்க் கால்வாய் போன்ற விஷயங்கள் தொடர்பாக சட்டங்களை உருவாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால், இப்போது மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய தண்ணீர்க்கொள்கை-2012, மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள விஷயங்கள் குறித்து நாடு முழுமைக்கும் ஒரு பொதுவான சட்ட விதிகளை (Water Framework Law) பரிந்துரைக்கிறது. தேசிய தண்ணீர் வாரியத்தால் உருவாக்கப்பட்டு, மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இக்கொள்கை, மத்திய அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சட்ட அதிகார வரம்புகளுக்கு அப்பாலும் செல்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் மற்றும் ஆற்றுப்பள்ளத்தாக்குதல் தொடர்புடைய அம்சங்கள் தவிர, தேசிய தண்ணீர்க் கொள்கையில் இடம் பெற்றுள்ள பிற அம்சங்கள் அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டவை" என்று கூறுகிறார், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்.
தேச ஒற்றுமைக்குப் பாதிப்பு
மாநில உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமின்றி, நாட்டின் ஒற்றுமைக்கே வேட்டு வைக்கிற அபாயம் இக்கொள்கையில் இருக்கிறது.
தேசிய தண்ணீர்க் கொள்கையும், அது தொடர்பாக மத்திய அரசால் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டமும் இந்திய அரசிலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. இந்தத் தண்ணீர்க் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே மீறுவதாக உள்ளன. இந்தத் தண்ணீர்க் கொள்கையானது, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய நாட்டின் சிறப்பியல்பையே கேள்விக்குறியதாக மாற்றிவிடும். மேலும், நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பையே தகர்த்துவிடும். மாநிலங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயத்தையும் உருவாக்கும்" என்று எச்சரிக்கிறார், பேராசிரியர் எம்.சுப்பிரமணியம்.
காவிரி-முல்லைக்கு ஆபத்து
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பு, முல்லைப்பெரியாறு வழக்கு ஆகியவற்றையெல்லாம் இக்கொள்கை கடுமையாகப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
தேசிய தண்ணீர்க் கொள்கையானது இந்நாட்டின் சட்டமாக மாறுமென்றால், தமிழ்நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்படும். காவிரி நதிநீர் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பு செல்லாததாகிவிடும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி, பரம்பிக்குளம் - ஆழியாறு ஆகியவற்றில் தமிழ்நாட்டின் உரிமைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். அதையடுத்து, அணைப் பாதுகாப்பு மசோதா - 2010 கொல்லைப்புறமாகக் கொண்டு வரப்படும். அது, உச்சநீதிமன்றம் முன்பு இருக்கிற முல்லைப் பெரியாறு வழக்கை கடுமையாகப் பாதிக்கும்" என்கிறார், நீதிபதி ஏ.கே.ராஜன்.
தேசிய தண்ணீர்க் கொள்கை சட்டமாக மாறினால் காவிரி, முல்லைப் பெரியாறு உட்பட அண்டை மாநிலங்களுடனான நதிநீர் தாவா தொடர்பான அத்தனை வழக்குகளும், தீர்ப்புகளும் அடிபட்டுப்போகும். தேசிய தண்ணீர்க் கொள்கைப்படி இனி புதிதாக உருவாக்கப்படும் அமைப்புகள், இப்பிரச்சினைகளை துவக்கத்தில் இருந்து விசாரிக்க ஆரம்பிக்கும். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று 2006-இல் உச்சநீதிமன்றம் கூறியது. 152 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று இப்போது தீர்ப்பு வந்துள்ளது. புதிதாக ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டால், அங்கே சென்று நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு குறித்து கேரளா கேள்வி எழுப்பும். மறுபடியும் அந்த வழக்கை முதலில் இருந்து விசாரிப்பார்கள். அதில் தீர்ப்பு வழங்க பல ஆண்டுகள் பிடிக்கும். காவிரித் தீர்ப்பிலும் இப்படித்தான் நடக்கும்" என்கிறார், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் அ.வீரப்பன்.
நிலத்தடி நீர் பறிபோகும்
ஒருவர் தனது சொந்த நிலத்தில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பதைக்கூட இந்தப் புதிய தேசிய தண்ணீர்க் கொள்கை கட்டுப்படுத்துகிறது. இந்தக் கொள்கையின்படி உங்கள் நிலத்தின், வீட்டு மனையின்கீழ் உள்ள நீர் உங்களுடையதல்ல. அது பொதுச் சொத்து. அதாவது அரசாங்கத்திற்கு உரிமையானது. இந்த அம்சம் சமூகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
இந்தக் கொள்கை சட்ட வடிவம் பெற்றால், தனது சொந்தக் கிணற்றில் உள்ள தண்ணீரை தனக்குச் சொந்தமானது என்று ஒரு விவசாயி கூறமுடியாது. அதனால், விவசாயம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். நாடு முழுவதும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
சாக்கடை அரசியலில் சங்கமிக்கும் தண்ணீர் தற்போது மாநிலப் பட்டியலில் உள்ளது. அதை மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடாகத்தான் இக்கொள்கை கொண்டு வரப்பட்டிருக்கிறது. தண்ணீர் மத்திய அரசின்கீழ் சென்றுவிட்டால், மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த அரசியலுக்காக இதைப் பயன்படுத்த முயற்சி செய்வார்கள் என்பது இன்றைய அரசியல் சூழ்நிலையில் உள்ள ஓர் கசப்பான உண்மை. அதுதவிர, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதைப்போல இதுவும் ஆகிவிடும். மொத்தமாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தலைப்பில் எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை நிதி ஆணையம் முடிவு செய்கிறது. அதைப்போல தண்ணீர் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசுக்குச் சென்று, அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை உருவாகிவிடும்.
சிந்திப்பார்களா?
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, சிறுவாணி உள்ளிட்ட பிரச்சினைகளில் பாதிக்கப்படுகிற தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சிகளும் இந்தக் கொள்கையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பின்னர் ஏற்படுகிற விளைவுகள் வருந்தத்தக்கவையாக அமைந்துவிடும். இன்னும் சொல்லப் போனால், காவிரி நதிநீர் தீர்ப்பாயம், நர்மதா நதிநீர் தீர்ப்பாயம், கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம், கோதாவரி நதிநீர் தீர்ப்பாயம் ஆகியவற்றின் மூலமாக தங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் riparian உரிமையுள்ள (ஒரு நதியின் மீதான உரிமை, அது உருவாகும் மாநிலத்திற்கு மட்டுமல்ல, அதன் மூலம் பாரம்பரியமாக பயன்பெறும் பகுதிகளுக்கும் உண்டு) மாநிலங்கள், ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு செயல்படுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரமிது.
ஏனெனில், தண்ணீர் என்பது அத்தியாவசியத் தேவை.அது அடிப்படை உரிமை என்பது மட்டுமல்ல, அதுதான் நம் வாழ்வின் ஆதாரம்.
என்ன சொல்கிறது நீர்க் கொள்கை?
2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வடிவமைக்கப்பட்ட தேசிய நீர்க் கொள்கை, மத்திய நீர் வள அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய நீர்வள மன்றத்தால் அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆராயப்பட்டு, வரைவுகள் இறுதியாக்கப்பட்டன. அந்த வரைவுகள் மீது 29 பிப்ரவரி 2012-க்குள் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டபோது, அதைக் குறித்து, ‘புதிய தலைமுறை’ (08 மார்ச் 2012) எழுதியது.
இறுதி செய்யப்பட்ட வரைவுகள் சொல்வது என்ன? சில முக்கிய அம்சங்கள்:
நல்ல அம்சங்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட, திருப்பிவிடப்பட்ட நீர்நிலைகளை பொதுமக்கள் பங்கேற்போடு மீட்டுச் சீரமைக்க வேண்டும்.
நீர் விநியோகத்தில் கிராமப் புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்குமிடையே உள்ள பெருத்த வேறுபாடு களையப்பட வேண்டும்.
நீர் வளம் குறித்த ஓர் தேசிய தரவுத்தளம் உருவாக்கப்பட வேண்டும்.
கவலை தரும் அம்சங்கள்:
தண்ணீர் ஒரு பொருளாதாரப் பண்டம் (economic good).
நிலத்தடி நீர் மீது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையளிக்கும் சட்டம் (Indian Easements Act) திருத்தப்பட வேண்டும்.
நீர்ப் பயன்பாட்டிற்கு கட்டணம் விதிக்க வேண்டும். அதற்காக ஒரு ஒழுங்குமுறை வாரியம் அமைக்க வேண்டும்.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம், குறைந்த கட்டணத்தில் மின்சாரம் அளிப்பதை ரத்து செய்ய வேண்டும்.
நீர் தொடர்பான சேவைகளை தனியார் / அரசு, தனியார் கூட்டு நிறுவனங்களுக்கு மாற்ற வேண்டும்.
|
Comments
வேலு