|
விஜயகாந்த்தின் எதிர்காலம்
மாலன் 2011 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வால் அ.தி.மு.க. ஜெயித்ததா,அ.தி.மு.க.வால் தே.மு.தி.க. ஜெயித்ததா? தே.மு.தி.க.விற்கு இனி இறங்குமுகம்தான் என ஜெயலலிதா சொல்வது சரிதானா? இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில்கூட அது வெற்றி பெறவில்லை. ஆனாலும் அடுத்து வந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அந்தக் கட்சியைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அனைத்துத் தரப்பும் முயற்சிகள் மேற்கொண்டன. ஏன்?
தி.மு.க. தலைமையில் அமைந்திருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குள் அதை அழைத்துவர காங்கிரஸ் முனைப்புக் காட்டியது. அதேபோல் அ.தி.மு.க. கூட்டணிக்குள் அந்தக் கட்சியைத்தக்க வைத்துக்கொள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சற்றும் சளைக்காமல் முயன்றன. இடப் பிரச்சினைகாரணமாக கூட்டணி முறிந்து விடும் போல் தோன்றிய ஒரு கட்டத்தில் அவை, தே.மு.தி.க.வைக் கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள போயஸ் தோட்டத்திற்கும் கோயம்பேடுக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தன. போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என ம.தி.மு.க., அ.தி.மு.க.வுடன் உறவை முறித்துக்கொண்டு வெளியேறியபோது, ‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என்று விடை கொடுத்து அனுப்பிய ஜெயலலிதா, அதே அணுகுமுறையை விஜயகாந்த்திடம் பின்பற்ற வில்லை. இரண்டாண்டுகளுக்கு முன், நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட ஜெயிக்க முடியாத ஒரு கட்சிக்கு இத்தனை ‘டிமாண்ட்’ ஏன்?
இந்தக் கேள்விக்கான விடையைப் புரிந்து கொண்டால், தமிழகத் தேர்தல்களில் விஜயகாந்த்திற்குள்ள முக்கியத்துவம் புரிந்துவிடும்.
2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம், விஜயகாந்த் தனது அரசியல் கட்சியைத் துவக்கிய போது அதை அரசியல் நோக்கர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பல காரணங்கள். அவருக்கு முன்பு, நடிகர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சிகள் எதுவும் மக்களிடம் ஆதரவு பெறவில்லை. பாக்யராஜ், டி.ராஜேந்தர் (இவர், தன் பெயரைக் கூட மாற்றிக்கொண்டு பார்த்தார்) ஆகியோர் நினைவில் நிற்கும் உதாரணங்கள். 1988ல் சிவாஜி கணேசன் துவக்கிய தமிழக முன்னேற்ற முன்னணியே கூட கால் பதிக்க முடியாமல் கரைந்து போனது. 1989 தேர்தலில் சிவாஜி உள்பட அதன் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவினர். இன்னும் சொல்லப் போனால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் துவங்கிய எந்த அரசியல் கட்சியும், ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கோ அல்லது கோட்டையை நெருங்கும் அளவிற்கோ வெற்றி காண முடியவில்லை என்பதுதான் அரசியல் யதார்த்தம்.
அந்த யதார்த்தத்தின் வெளிச்சத்தில் விஜயகாந்த் கட்சியின் துவக்கத்தை எடை போட்டவர்கள், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. 2006 தேர்தல் முடிவுகள் அந்த எண்ணத்தை வலுப்படுத்தின.
2006 சட்டமன்றத் தேர்தலின்போது 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 223 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. ஒரே ஒரு இடத்தில்- விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும்- வெற்றி பெற்று அதன் தலைவர் விஜய்காந்த்தை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. என்றாலும் அந்த வெற்றி, அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. காரணம், மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட விஜயகாந்த், அங்கோ அதன் சுற்றுப்புறத்திலோ போட்டியிடாமல், பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை எனக் கருதப்பட்ட பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஒருவகையில் அவருக்கு அது இனிய பழிவாங்கல். ஏனெனில், அவர் கட்சி துவங்கிய நாளிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி, அவரை சினிமா நடிகர் என்ற காரணத்திற்காகத் தொடர்ந்து விமர்சித்து வந்திருந்தது.
வேறு காரணங்களும் இருந்தன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இல்லாமல், அந்தத் தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க., பதிவான வாக்குகளில் 8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. பெற்ற வாக்குகளை (87 லட்சத்து 28 ஆயிரத்து 716) விட அ.தி.மு.க. அதிகம் பெற்றிருந்தும் (1 கோடியே 7 லட்சத்து 68 ஆயிரத்து 559) ஆட்சி அமைப்பதற்குரிய இடங்களை அ.தி.மு.க.வால் பெற முடியவில்லை. சுருக்கமாகச் சொன்னால், தி.மு.க.விற்கு எதிரான வாக்குகள் அ.தி.மு.க.விற்கு மட்டும் அல்லாமல் தே.மு.தி.க.விற்கும் சென்றன. அதாவது, தே.மு.தி.க. தனித்து வெற்றி பெறும் அளவிற்கு பெரிய சக்தி இல்லை என்ற போதிலும், வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் அளவிற்கு வலிமை கொண்ட சக்தி என்பது, அது போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஓரளவிற்கு வெளிப்பட்டது.
அதற்குப்பின் மூன்றாண்டுகள் கழித்து 2009ல் வந்த நாடாளுமன்றத் தேர்தல், அதை திட்டவட்டமாக உறுதி செய்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால், 9 தொகுதிகளில் ஒரு லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருந்தது. 19 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தது. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கிய 135 சட்டமன்றத் தொகுதிகளில் தே.தி.மு.க. பெற்ற வாக்குகள் வெற்றிக்கும் தோல்விக்குமான வாக்கு வித்தியாசத்தை விட அதிகம். அதாவது, தே.மு.தி.க.வின் வாக்குகள் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகள் என்பது மறுபடியும் உறுதிப்பட்டது.
இரண்டு திராவிடக் கட்சிகளோடும் கூட்டு சேர மாட்டோம் என நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. எடுத்த நிலை, தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்ததை அ.தி.மு.க. தேர்தல் வல்லுநர்கள் கவலையோடு கவனித்தார்கள். அதுமட்டுமல்ல, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை (27,64,223) விட அதிக வாக்குகளை (30,73,479)நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. பெற்றிருந்தது அது வளர்ந்து கொண்டிருக்கிறது, தனக்கென ஒரு வாக்கு வங்கியை -அதாவது தமிழகத்தில் உள்ள வாக்குகளில் சுமார் 10 சதவிகிதம்- உருவாக்கி அதை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் காட்டியது.
தி.மு.க.வை ஓரம் கட்ட வேண்டுமானால், தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வும் ஓரணியில் இருக்க வேண்டும் என்பதை அ.தி.மு.க.வின் தேர்தல் நிர்வாகிகளும், நலம் விரும்பிகளும், அதன் கூட்டணிக் கட்சிகளும் உணர்ந்தனர். பத்து சதவிகித வாக்கு வங்கி என்பது, எம்.ஜி.ஆர். காலத்தில் காங்கிரசிற்கு இருந்த வாக்குகளுக்கு சமம். இப்போது, காங்கிரசின் வாக்கு வங்கி கரைந்து விட்டது. அந்த அளவிற்கான வாக்குகள் தே.மு.தி.க. வசம் இருக்கின்றன. எனவே, எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டு, எப்படி தி.மு.க.வைத் தலை தூக்க விடாத அளவிற்கு வலிமையாக இருந்ததோ, அந்த அளவு இன்றைய அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டு வலுவாக இருக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டார்கள். ஆனால், அதன் தலைமைக்கு அந்த உண்மையை முழு மனதோடு ஏற்க முடியவில்லை. காரணம், தே.மு.தி.க. வளர்ந்ததைப்போல அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியும் வளர்ந்திருந்தது!
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை ஆரம்பித்து, ஆட்சியைக் கைப்பற்றிய 1977 தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 30.36 சதவிகிதம் (51 லட்சத்து 94 ஆயிரத்து 876 வாக்குகள்). ஆனால், 2006ல் ஆட்சியை இழந்தபோதுகூட அ.தி.மு.க. பெற்ற வாக்குகள், எம்.ஜி.ஆர். காலத்தில் அது பெற்ற வாக்குகளைப் போல இரண்டு மடங்கு. 2006ல் அ.தி.மு.க. பெற்ற வாக்குகள் (1,கோடியே 7லட்சத்து, 68ஆயிரத்து 559 வாக்குகள்). எம்.ஜி.ஆர். பெற்றதைவிட 2 சதவிகிதம் கூட (32.64 சதவிகிதம்). இந்த 2006 தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய பெரிய கட்சிகள் தி.மு.க. அணியில் இருந்தன என்பதையும், தே.மு.தி.க. தனியாகப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தது என்பதையும் கணக்கில் கொண்டு பார்த்தால், ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் அ.தி.மு.க. பெற்ற வளர்ச்சி எத்தகையது என்பது புரியும்.
இதைத் தவிர இன்னொரு காரணமும் இருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க.விற்கும் இந்திராவின் காங்கிரசிற்கும் இடையேயான உறவில் முரண்பாடுகளுக்கான மூலக்கூறுகள் இல்லை. போட்டி இல்லை. தில்லி உனக்கு, தமிழகம் எனக்கு என்ற ஓர் எழுதப்படாத ஒப்பந்தம், உணர்வு அளவில் இரு தரப்பினரிடையேயும் இருந்தது. ஆனால்,அ.தி.மு.க. - தே.மு.தி.க. உறவு, அடிப்படையில் மோதல்களுக்கான விதைகள் கொண்டது. என்றாவது ஒரு நாள் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற தாகம் தே.மு.தி.க.விற்கும், ஆட்சியை இழந்து விடக் கூடாது என்ற அக்கறை அ.தி.மு.க.விற்கும் உண்டு. இங்கே தில்லி உனக்கு, மாநிலம் எனக்கு என்ற நிலை இல்லை. எனவே, தே.மு.தி.க.விற்கு முக்கியத்துவம் கொடுத்தால், அது அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சொந்தச் செலவில் வைத்துக்கொள்ளும் சூன்யம்.
கணக்குகளைத் தவிர சுபாவம் என்ற ஓர் அம்சம் இருக்கிறது. அ.தி.மு.க., தன் கூட்டணிக் கட்சிகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் இயல்பு கொண்டது அல்ல. அப்படி எந்தக் கட்சியும் எந்தக் கட்சியையும் தாங்க முடியாது என்பது இன்றைய அரசியல் யதார்த்தம். ஆனால், ‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை’ என்ற வாசகத்தை வேதவாக்காக எடுத்துக்கொண்டு விட்ட கட்சி அது. காங்கிரஸ், பாரதிய ஜனதா, ம.தி.மு.க. ஆகியோருடன் அது கொண்டிருந்த உறவும் பிரிவும் இதை வரலாறாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
சரி, எங்களால்தான் நீ ஜெயித்தாய் என்று இரண்டு கட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே, அது எவ்வளவு தூரம் உண்மை? 2011 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வால் அ.தி.மு.க. ஜெயித்ததா, அ.தி.மு.க.வால் தே.மு.தி.க. ஜெயித்ததா?
அ.தி.மு.க. அதன் 50 வருட வரலாற்றில் அதிக இடங்கள் பெற்றது 1991ல். அந்தத் தேர்தலில் அது 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருந்த நேரம். காங்கிரசிற்கான அனுதாப ஓட்டுக்கள், அதனுடன் கூட்டணி கொண்டிருந்த அ.தி.மு.க.விற்கு உதவின என்று தேர்தல் பண்டிதர்கள் சொன்னார்கள். ஜெயலலிதா அப்போதே அதை மறுத்தார்.
2011ல் அ.தி.மு.க. பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 1991ல் பெற்ற வாக்குகளை விட அதிகம். 1991ல் அது பெற்றது 1 கோடியே 9 லட்சத்து 40 ஆயிரத்து 966 வாக்குகள். 2011ல் அது பெற்ற வாக்குகள் 1 கோடியே 41லட்சத்து 49ஆயிரத்து 681 வாக்குகள். கிட்டத்தட்ட 40 லட்சம் அதிகம். இது இரண்டு விஷயங்களைச் சொல்கிறது. 1. அன்று அனுதாப அலையினால் அல்ல, தி.மு.க. மீதான சீற்றம் அலையென எழுந்து அதைத் தூக்கி எறிந்தது. 2. இன்று தி.மு.க.விற்கு எதிராக எழுந்த கோப அலை அன்றைய அலைக்குச் சற்றும் குறைந்தது அல்ல, இன்னும் சொல்லப் போனால் அன்றைய அலையை விடப் பெரிது.
ஆனால், அந்த 40 லட்சம் கூடுதல் வாக்குகளால் அ.தி.மு.க.விற்குப் பெரிதாக பலன் இல்லை. 165 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க., 150 இடங்களை வென்றது. இடம் என்று பார்த்தால் 1991ஐ விடச் சற்றுக் குறைவு .
ஆனால், அதே சமயம் தே.மு.தி.க.வின் கணக்கைப் பார்த்தால் அது பலனடைந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. தே.மு.தி.க. 2006 தேர்தலில் பெற்றதை (27 லட்சத்து 64 ஆயிரத்து 223) விட 2011 தேர்தலில் பெற்றது (29 லட்சத்து 2 ஆயிரத்து 813) ஒன்றரை லட்சத்திற்கும் குறைவான வாக்குகள்தான். ஆனால், அது சட்டமன்றத்தில் கூடுதலாகப் பெற்ற இடங்கள் 28. 2006ல் ஓர் இடத்தை மட்டுமே பெற்றிருந்த அந்தக் கட்சி, 2011ல் 29 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், இன்றைய நிலையில் தே.மு.தி.க.விற்குத் தனியாக இடங்களைக் கைப்பற்றும் வலிமை இல்லை. ஆனால், அதே நேரம் அதை கூட்டணியை விட்டு வெளியேற்றினால் அ.தி.மு.க.வால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது (அதிக வாக்குகள் பெற்றாலும்), அதாவது, ஒன்றுபட்டால் இருவருக்கும் வாழ்வு. ஒற்றுமை நீங்கினில் இருவருக்கும் தாழ்வு.
இந்தப் பின்னணியில் தே.மு.தி.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
தன் வசம் உள்ள 10 சதவிகித வாக்குகளைக் கொண்டு அது அதிக இடங்களை வெல்ல முடியாது. அதற்கு கூட்டணி அவசியம் அல்லது அரசுக்கெதிரான கோப அலை அவசியம். அப்படியே கோப அலை உருவானாலும் அ.தி.மு.க.விற்கு மாற்று என்று மக்கள் அதை நினைக்கும் வண்ணம் அது தன்னை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கூட்டணி என்றால், யாருடன் கூட்டணி என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளைக்கொண்டு மூன்றாவது அணியை உருவாக்கி வெல்வது என்பதெல்லாம் நடக்கிற காரியம் அல்ல. தி.மு.க.வுடன் கூட்டணி என்பது சாத்தியம்தான்.
ஆனால், 2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் அதிரடித் தீர்ப்பைப் பார்க்கும்போது, சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு, தி.மு.க.விற்கு எதிராக அமையுமானால் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பெரிய கேள்விக்குறி. அத்தோடு அங்கு நடக்கும் வாரிசுகளின் கோஷ்டி மோதல் பற்றிய செய்திகள், கட்சியின் பலம் குறித்துக் கேள்விகளை எழுப்புகிறது. அந்தச் சூழ்நிலையில் அதோடு தே.மு.தி.க. உறவு கொள்ளுமானால், அது அதன் வாக்கு வங்கியை வீணடித்துக் கொள்ளக்கூடும்.
ஒருவேளை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய ஆட்சியில் அ.தி.மு.க. பங்கேற்குமானால் (சில மாதங்களுக்குமுன் அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஜெயலலிதா கோடிட்டுக் காட்டியதைப் போல), அதைக்கொண்டு மாநிலத்திலும் தன்னை வலுப்படுத்திக்கொள்ள அ.தி.மு.க. முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்போது தே.மு.தி.க., முன்னை விட அதிகமாகத் தன் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டியிருக்கும்.
ஆனால், அதற்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியும் ஒன்றுண்டு. அ.தி.மு.க.வின் தலைக்கு மேலும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது. அது, பெங்களூரு விரைவு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு. இன்னும் ஓரிரு மாதங்களில் அதன் தீர்ப்பு வெளியாகலாம்.
எதிர்காலம் எதனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதை யாரே அறிவார். ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம், விஜயகாந்த்தின் எதிர்காலம், அரசியல் சதுரங்கத்தில் விவேகத்துடன் காய் நகர்த்துவதில் இருக்கிறது. வேகப்பட்டுப் பேசும் வீர வசனங்களில் இல்லை.
|