[X] Close

"அன்புமணியின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்!" - திருமாவளவன்

Subscribe
We-are-educated--Trending-hashtags-in-support-of-Thirumavalavan-on-Anbumani-issue

"என்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிபடுத்துகிற ஓர் உளவியலை அன்புமணி வெளிப்படுத்தி இருக்கிறார்; அவரின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


Advertisement

அரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் “அரக்கோணம் கொலைகளுக்குப் பின்னால் சாதிப் பிரச்னை இல்லை. திருமாவளவன்தான் இதனை சாதிப் பிரச்னையாக மாற்றுகிறார். படித்த இளைஞர்கள் யாரும் திருமாவளவனுடன் நிற்பதில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் தரும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து, 'நான் திருமாவளவனுக்கு ஆதரவாக நிற்கிறேன்' என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

இதன் காரணமாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் #standwiththiruma , #myleaderthiruma , #isupportthiruma போன்ற ஹேஷ்டேக்குகள் கவனம் ஈர்த்துள்ளன.

தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம் என சமூக வலைதளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவ பார்வையையும் வழங்குவதே சிறந்தகல்வி. படித்தவர்கள், படிக்காதவர்கள் என மக்களை பாகுபடுத்தி உயர்வு தாழ்வு காண்பது சனாதனப்புத்தியின் விளைச்சலாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

image


Advertisement

மேலும், இது தொடர்பாக காணொலி மூலமாக பேசியவர், “திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை என்று அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர் விமர்சனம் வைத்துள்ளார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்கு வாய்ப்பில்லாத இளைஞர்களை கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள் படிக்காதவர்களை விட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். படித்தவர்கள் ஆதரித்தால்தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக்காதவர்கள் ஆதரித்தால் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து அதிலே தொனிக்கிறது. உழைக்கிற மக்கள் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் தரம் தாழ்ந்தவர்களா?

கல்வியைப் பெற்றவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று பொருள். கல்வி பெற இயலாதவர்கள் அதற்கான  வாய்ப்பைப் பெறாதவர்கள் என்றுதான் பொருள். கல்வி பெற்றவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்கிற மனோநிலை என்பதே ஒரு பாகுபாடு உளவியல்தான். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்கிற சிறுமைப்படுத்துதல் அதிலே இருக்கிறது.

1990-களில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, என் பெயருக்கு பின்னால் இரா.திருமாவளவன், M.A.,B.L., என்று தோழர்கள் போடுவார்கள். நாம் பணியாற்றுகின்ற களம், உழைக்கும் மக்களின் களம். அவர்களிடத்திலே திருமாவளவன் M.A.,B.L., என்று போட்டுக்கொள்வது தம்பட்டம் அடிப்பதாக இருக்கும். அவர்களுக்கும் நமக்கும் ஒரு இடைவெளி ஏற்படுவதாக அமையும். ஆகவே, என் பெயருக்குப் பின்னால் பட்டத்தை ஒருபோதும் போடக்கூடாதென்று தொடக்கத்தில் இருந்தே கடைபிடித்து வந்தவன். அவ்வாறு போடும் தோழர்களைக் கடிந்து கண்டித்தவன். 1999 வரை என்னுடைய படத்தைக்கூட போட்டுக்கொள்ள அனுமதித்ததில்லை.

படித்தவர்களை விட படிக்க வாய்ப்பில்லாதவர்களிடம்தான் நான் அதிகம் கருத்துக் கேட்பதுண்டு. நான் எழுதுகிற முழக்கங்களில் எது உங்களுக்கு பிடிக்கிறது என்று கேட்பேன். நான் எழுதுகிற கவிதைகளில் எது உங்களுக்கு புரிகிறது என்று கேட்பேன். அவர்கள் எதை தேர்வு செய்கிறார்களோ அதைத்தான் நான் துண்டறிக்கையிலே சுவரொட்டியிலே அச்சிடுவேன். படிக்காதவர்களை அலட்சியப்படுத்துவது கொச்சைப்படுத்துவது துச்சமென நினைப்பது மிக மோசமான ஆதிக்க உணர்வு கொண்ட உளவியல். அது தலைக்கணம், கர்வம் சார்ந்த உளவியல்.

என்னுடைய சொந்த ஊரில் நான் பல்கலைக்கழகம் வரை சென்று படித்தும் கூட கிராமத்தில் பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு நடந்ததில்லை. ஆற்றைக் கடக்கும்போது கூட என் ஆடைகளைக் கழட்டி பையில் வைத்துக்கொண்டு லுங்கிக் கட்டிக்கொண்டு கிராமத்திற்குள் நடந்துசெல்வேன். இது யாருக்கும் அஞ்சியல்ல. என் உறவுக்காரர்கள் என்னை வேற்றுமைப்படுத்தி பார்த்துவிடக் கூடாது. அவர்களில் ஒருவனாகவே நான் இருக்க வேண்டுமென்று ஊருக்குள் போகிறபோதே ஆடைகளை மாற்றிக்கொண்டு அவர்களில் ஒருவனாகத்தான் ஊருக்குள்ளே நுழைவேன். இது என்னுடைய இயல்பு.  எனக்கு வாய்ப்புக் கிடைத்ததால் சட்டம் பயின்றேன். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ஊரிலே இருந்து வேலை செய்கிறார்கள். ஆடு, மாடு மேய்க்கிறார்கள். அனைத்துச் சமூகங்களைச் சார்ந்தவர்களையும்தான் நான் குறிப்பிடுகிறேன்.

கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் எந்தவகையிலும் தாழ்ந்தவர்கள் இல்லை. இழிவானவர்கள் இல்லை. படித்திருந்தும் சாதி புத்தி இருந்தால் அவன்தான் இழிவானவன். படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று சொன்னால் அவன்தான் உயர்ந்தவன்.

டாக்டர், எஞ்சினீயர், பி.எச்டி என்று படித்திருந்தாலும் கூட சனாதன புத்தி, சாதி புத்தி, மதவெறி, சாதிவெறி சுயநலம் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு தன்னுடைய பெண்டு பிள்ளைகள் பிழைத்தால் போதும் யாரை வேண்டுமானாலும் ஏய்க்கலாம். யாரை வேண்டுமானாலும் எத்திப்பிழைக்கலாம் யார் எக்கேடு கெட்டால் என்ன. நான் வெற்றி பெற்றால் போதும், அதற்காக அப்பாவி மக்களை மோதலுக்கு தூண்டிவிட்டு அவர்களை இரையாக்கலாம் என்ற எண்ணம்தான் இழிவான எண்ணம்.

எனவே என்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிபடுத்துகிற ஓர் உளவியலை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார், அவரின் நிலையை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன்.

'திருமாவளவன் சமூகநீதிக் களத்தில் போராடுகிற ஒரு சகத் தோழன். எனவே நாங்கள் அவர் பக்கம் நிற்கிறோம். சாதி மத வரம்புகளை எல்லாம் கடந்து நிற்கிறோம்' என்று குரல் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இத்தகைய ஆதரவு என்பது எனக்குள் ஊறிக்கிடக்கும் சமத்துவத்திற்கான போர்க்குணத்தை மேலும் ஊக்கப்படுத்துகிறது. வலுவூட்டுகிறது” என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close