பெரியாரின் படைப்புகளை முழுமையாக தொகுத்தளித்த பெரியாரிய – மார்க்சிய ஆய்வாளரான வே.ஆனைமுத்து, தனது 96 வது வயதில் செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் காலமானார். அவரது உடல்கொடை இன்று மாலை தாம்பரம் இரும்புலியூரில் நடைபெறுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி எனும் ஊரில் 1925 ஆம் ஆண்டு பிறந்த ஆனைமுத்து, 1944-ஆம் ஆண்டு முதல் பெரியாரின் வழியை பின்பற்றி வந்தவர். பெரியாரிய கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க குறள் மலர், குறள் முரசு, சிந்தனையாளன், Periyar Era போன்ற இதழ்களை நடத்தினார். 1957-இல் பெரியார் அறிவித்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு 18 மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆனைமுத்து.
பெரியார் உயிருடன் இருந்த காலத்திலேயே அவரது உரைகள், எழுத்துகளை தொகுக்க ஆரம்பித்த இவர், இதனை 2170 பக்க புத்தகமாக 'பெரியார்-ஈ.வெ.ரா சிந்தனைகள்' என்ற தொகுப்பினை கொண்டுவந்தார். இது தற்போது 20 பாகங்களாக வெளியாகியிருக்கிறது. இது தவிர பெரியாரிய, மார்க்சிய சிந்தனை நோக்கில் பல்வேறு புத்தகங்களையும் இவர் எழுதியிருக்கிறார். மேலும் 'மார்க்சிய – பெரியாரிய பொதுவுடமைக்கட்சி'யையும் தொடங்கி நடத்தி வந்தார் ஆனைமுத்து.
மண்டல் கமிஷன் அடிப்படையில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதில் இவரது பங்களிப்பு முக்கியமானது. பெரியாரிய சிந்தனைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வடமாநிலங்கள் முழுவதும் கூட்டங்கள் நடத்தி இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், வி.பி.சிங், கன்ஷிராம் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து வலியுறுத்தியவர் ஆனைமுத்து.
கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வே.ஆனைமுத்து புதுச்சேரியில் உள்ள மகனின் இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது உடல் சென்னை இரும்புலியூர் கொண்டுவரப்பட்டு மருத்துவ மாணவர்கள் கல்விக்காக இன்று மாலை 3.30 மணியளவில் 'உடல்கொடை'யாக வழங்கப்படவுள்ளது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!